உ
கணபதி துணை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்.
13. குருசங்கம சேவையியல்
334. குரு என்றது யாரை?
தீஷாகுரு, வித்தியாகுரு, போதககுரு முதலாயினோர் குரு. ஆசாரியன், தேசிகன், பட்டாரகன் என்பன ஒரு பொருட் சொற்கள்.
335. சங்கமம் என்றது என்னை?
நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் முத்திறத்துச் சிவபத்தர்களை.
336. குருவையுஞ் சிவபத்தரையும் யாது செய்தல் வேண்டும்?
மனிதர் எனக் கருதாது, சிவபெருமானெனவே கருதி, மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுஞ் சிரத்தையோடு வழிபடல் வேண்டும். பிரதிட்டை செய்து பூசிக்கப்படும் சிவலிங்கத்தைச் சிலையென்று நினைந்து அவமதிப்பவரும், சிவதீக்ஷை பெற்று இயன்றமட்டும் விதிப்படி அநுட்டிக்குஞ் சிவபத்தரை மனிதர் என்று நினைந்தேனும் அவருடைய பூருவ சாதியை நினைந்தேனும் அவமதிப்பவருந் தப்பாது நரகத்தில் வீழ்வர்.
337. சிவபத்தர்கள் சிவபெருமான் எனக் கருதப்படுதற்குக் காரணம் என்ன?
சிவபெருமான் வேறற அதிட்டித்து நிற்கப்பெறுவன வாய்க் கண்டவுடனே சிவபெருமானை நினைப்பிப்பனவாய் உள்ள திருவேடங்களை யுடைமையும், நாடோறும் ஸ்ரீகண்டநியாசம், பிஞ்சப்பிரம ஷடங்கநியாசம், அஷ்டத்திரிம் சத்கலாநியாசங்கள் வாயிலாகச் செய்யுஞ் சிவோகம்பாவனையும், பிராசாத யோகஞ்செய்தலும், தம்மின் இரண்டற இயைந்த சிவத்தோடு கலந்து நிற்குந் தன்மையுமாம்.சிவபத்தரைச் சிவமெனக்கண்டு வழிபடுதற்கு வேடம், பாவனை, செயல், தன்மை என்னும் இந்நான்கனுள் ஒன்றேயமையும்.
338. சிவனடியாரை வழிபடாது சிவலிங்கத்தை மாத்திரம் வழிபடலாகாதா?
ஒருவன் ஒரு பெண்ணினிடத்து அன்புடைமை அவளுடைய சுற்றத்தாரைக் கண்டபொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றியே தெளியப்படும். அது போல, ஒருவன் சிவபெருமானிடத்து அன்புடைமை அவருடைய அடியாரைக் கண்டபொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றியே தெளியப்படும். ஆதலினாலே, சிவனடியாரிடத்து அன்பு செய்யாது அவமானஞ் செய்துவிட்டுச் சிவலிங்கப் பெருமானிடத்தே அன்புடையவர் போல் ஒழுகுதல், வயிறு வளர்ப்பின் பொருட்டும், இடம்பத்தின் பொருட்டும் நடித்துக் காட்டும் நாடகமாத்திரையேயன்றி வேறில்லை.
339. சிவபத்தர்களோடு இணங்குதலாற் பயன் என்னை?
காமப்பற்றுடையவருக்கு, அச்சம்பந்த முடையவருடைய இணக்கம் அக்காமத்தை வளர்த்தலால் அவ்விணக்கத்தில் விருப்பு மிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அக்காமத்தைக் கெடுத்தலால் அவ்விணக்கத்தில் வெறுப்பு மிகுதியும் உண்டாகும். அது போலச் சிவபத்தி யுடையவருக்கு, அச்சம்பந்த முடையவருடைய இணக்கம் அச்சிவபத்தியை வளர்த்தலால் அவ்விணக்கத்தில் விருப்புமிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அச்சிவபத்தியைக் கெடுத்தலால் அவ்விணக்கத்த்ல் வெறுப்பு மிகுதியும் உண்டாகும்.
340. சமய தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர்?
ஆசாரியரையும், நிருவாண தீக்ஷிதரையும், விசேஷ தீக்ஷிதரையும், சமய தீக்ஷிதர்களுள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர்.
341. விசேஷ தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர்?
ஆசாரியரையுந், நிருவாண தீக்ஷிதரையும், விசேஷ தீக்ஷிதர்களுள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர்.
342. நிருவாண தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர்?
ஆசாரியரையும், நிருவாண தீக்ஷிதருள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர்.
343. ஆசாரியர் யாரை வணங்குதற்கு உரியர்?
ஆசாரியர்களுள்ளே தம்மின் மூத்தோரை வணங்குதற்கு உரியர்.
344. வருணத்தாலாவது ஆச்சிரமத்தாலாவது வருணம் ஆச்சிரமம் என்னும் இரண்டினாலுமாவது தம்மிற்றாழ்ந்தவர் தீக்ஷை முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை யாது செய்தல் வேண்டும்?
அவமதித்தலுஞ் செய்யாது, புறத்து வணங்குதலுஞ் செய்யாது, மனத்தால் வணங்கல் வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்தவர் தப்பாது நரகத்தில் வீழ்வர். சிவஞானிகளேயாயின், அவரை, வருணம், ஆச்சிரமம் முதலியவை சற்றுங் குறியாது, எல்லாரும் வணங்கல் வேண்டும். எல்லை கடந்து முறுகி வளரும் மெய்யன்பினால் விழுங்கப்பட்ட மனத்தையுடையவர், திருவேட மாத்திரமுடையவரைக் காணினும், வருணம் ஆச்சிரமம் முதலியன குறித்துக் கூசித் தடைப்படாது, உடனே அத்திருவேடத்தால் வசீகரிக்கப்பட்டு, அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்குவர்; அவ்வுண்மை திருத்தொண்டர் பெரியபுராணத்தினாலே தெளியப்படும்.
345. குருவையும் சிவனடியாரையும் எப்படிப் போய்த் தரிசித்தல் வேண்டும்?
வெறுங்கையுடனே போகாது, தம்மால் இயன்ற பதார்த்தத்தைக் கொண்டுபோய், அவர் சந்நிதியில் வைத்து, அவரை நமஸ்கரித்து, எழுந்து, கும்பிட்டு, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு, மீட்டும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, அவர் "இரு" என்றபின் இருத்தல் வேண்டும்.
346. குருவாயினுஞ் சிவனடியாராயினுந் தம் வீட்டுக்கு வரின், யாது செய்தல் வேண்டும்?
விரைந்து எழுந்து, குவித்த கையோடு எதிர்கொண்டு, இன்சொற்களைச் சொல்லி, அழைத்துக் கொண்டு வந்து ஆசனத்திருத்தி, அவர் திருமுன்னே இயன்றது யாதாயினும் வைத்து, அவர் திருவடிகளைப் பத்திர புஷபங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு, மீட்டும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, அவர் "இரு" என்றபின் இருத்தல் வேண்டும். அவர் போம்பொழுது அவருக்குப்பின் பதினான்கடி போய் வழிவிடல் வேண்டும். இராக் காலத்திலும், பயமுள்ள இடத்திலும், அவருக்கு முன் போதல் வேண்டும்.
347. ஒருவர் தாம் பிறரை வணங்கும் வணக்கத்தை எப்படிப் புத்தி பண்ணல் வேண்டும்?
''இவ்வணக்கம் இவருக்கன்று; இவரிடத்து வேறற நிற்குஞ் சிவபெருமானுக்கேயாம்'' என்று புத்தி பண்ணல் வேண்டும். அப்படிச் செய்யாதவர் அவ்வணக் கத்தாலாகிய பயனை இழப்பர்.
348. ஒருவர் தம்மைப் பிறர் வணங்கும் வணக்கத்தை எப்படிப் புத்தி பண்ணல் வேண்டும்?
''இவ்வணக்கம் நமக்கன்று, நம்மிடத்து வேறற நிற்குஞ் சிவபெருமானுக் கேயாம்" என்று புத்தி பண்ணல் வேண்டும்; அப்படிச் செய்யாதவர் சிவத் திரவியத்தைக் கவர்ந்தவராவர்.
349. குருவுக்குஞ் சிவனடியாருக்குஞ் செய்யத் தகாத குற்றங்கள் யாவை?
கண்டவுடன் இருக்கைவிட்டெழாமை, அவர் எழும்பொழுது உடனெழாமை, அவர் திருமுன்னே உயர்ந்த ஆசனத்திருத்தல், காலை நீட்டிக்கொண்டி ருத்தல், சயனித்துக் கொள்ளுதல், வெற்றிலை பாக்குப் புசித்தல், போர்த்துக் கொள்ளுதல், பாதுகையோடு செல்லல், சிரித்தல், வாகனமேறிச் செல்லல், அவராலே தரப்படுவதை ஒரு கையால் வாங்குதல், அவருக்குக் கொடுக்கப் படுவதை ஒரு கையாற் கொடுத்தல், அவருக்குப் புறங்காட்டல், அவர் பேசும் போது பாராமுகஞ்செய்தல், அவர் கோபிக்கும்போது தாமுங்கோபித்தல், அவருடைய ஆசனம், சயனம், வஸ்திரம், குடை, பாதுகை முதலியவை களைத் தாம் உபயோகித்தல், அவைகளைத் தங்காலினாலே தீண்டுதல், அவர் திருநாமத்தை மகிமைப் பொருள்படும் அடைமொழியின்றி வாளா சொல்லல், அவரை யாராயினும் நிந்திக்கும் பொழுது காதுகளைப் பொத்திக்கொண்டு அவ்விடத்தினின்று நீங்கிவிடாது கேட்டுக் கொண்டிருத்தல் முதலியவைகளாம்.
350. குரு முன்னுஞ் சிவனடியார் முன்னும் எப்படி விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்?
வஸ்திரத்தை ஒதுக்கிச், சரீரத்தைச் சற்றே வளைத்து, வாய் புதைத்து நின்று, அவரை "சுவாமீ" என்பது முதலிய சொற்களினாலே உயர்த்தியும், தன்னை "அடியேன்" என்பது முதலிய சொற்களினாலே தாழ்த்தியும், மெல்ல விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்.
351. கடவுளையும் குருவையுஞ் சிவனடியாரையுந் தாய் தந்தை முதலாயி னரையும் நமஸ்கரிக்கும்போது கால் நீட்டத் தக்க திக்குகள் யாவை?
மேற்குந் தெற்குமாம். கிழக்கினும் வடக்கினுங் கால் நீட்டி நமஸ்கரிக்கலாகாது.
352. குருவையுஞ் சிவனடியார் முதலாயினாரையும் நமஸ்கரிக்கலாகாத காலங்களும் உண்டா?
உண்டு, அவர் கிடக்கும் போதும், வழி நடக்கும் போதும், பத்திர புஷ்பம் எடுக்கும்போதும், வெற்றிலை பாக்கு உண்ணும்போதும், ஸ்நானம், சந்தியா வந்தனம், பூசை, ஓமம், சிரார்த்தம், போசனம் முதலியன பண்ணும் போதும், இராச சபையிலே போய் இருக்கும்போதும் அவரை நமஸ்கரிக்கலாகாது.
353. தீக்ஷாகுரு, வித்யாகுரு முதலாயினார் திருமுகம் விடுத்தருளின், அதை யாது செய்தல் வேண்டும்?
பீடத்தின் மீது எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, இரண்டு கைகளாலும் எடுத்து, இரண்டு கண்களிலும் ஒற்றிச், சிரசின்மேல் வைத்துப், பின்பு திருக்காப்பு நீக்கி வாசித்தல் வேண்டும்.
354. தான் வழிபட்டு வந்த ஆசாரியன் பெரும் பாவங்களைச் செய்வானாயின் அவனை யாது செய்தல் வேண்டும்?
தானே பூசித்து வந்த சிவலிங்கம் அக்கினியினாலே பழுதுபடின், அதனை இகழாது மனம்நொந்து கைவிட்டு வேறொரு சிவலிங்கத்தைக் கைக்கொள் வதுபோலத், தான் வழிபட்டு வந்த் ஆசாரியன் சிவநிந்தை, சிவத்திரவியாப காரம் முதலிய பெருங்கொடும் பாதகங்கள் செய்து கெடுவானாயின், அவனை இகழாது மனம் நொந்து கைவிட்டு வேறோராசாரியனை அடைந்து வழிபடல் வேண்டும்.
355. குருவினிடத்தே சிவசாத்திரம் எப்படிப் படித்தல் வேண்டும்?
நாடோறும் ஸ்நானம் முதலிய நியதிகளை முடித்துக் கொண்டு, கோமயத்தினாலே சுத்தி செய்யப்பட்ட தானத்திலே பீடத்தை வைத்து, அதன் மீது பட்டுப் பரிவட்டத்தை விரித்து, அதன் மீது சிவசாத்திரத் திருமுறையை எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்துப் பின்பு ஆசாரியருடைய திருவடிகளையும் அருச்சித்து, நமஸ்கரித்து, அவர் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருக்க, அவருக்கு எதிர்முகமாக இருந்து படித்தல் வேண்டும். படித்து முடிக்கும் பொழுதும் அப்படியே நமஸ்கரித்தல் வேண்டும். இப்படிச் செய்யாது படித்தவர், படித்ததனால் ஆகிய பயனை இழப்பர்; அம்மட்டோ! நரகத்திலும் விழுந்து வருந்துவர்.
356. சிவசாத்திரம் படிக்கலாகாத காலங்கள் எவை?
பிரதமை, அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, உத்தராயணம், தக்ஷிணாயனம், சித்திரை விஷு, ஐப்பசி விஷு, சந்தியா காலம், ஆசெளச காலம், மகோற்சவ காலம் என்பவைகளாம்.
357. எடுத்துக்கொண்ட சிவசாத்திரம் படித்து முடித்தபின் யாது செய்தல் வேண்டும்?
சிவலிங்கப் பெருமானுக்கும், சிவசாத்திரத் திருமுறைக்கும் வித்தியாகுருவுக்கும் விசேஷ பூசை செய்து அவர் திருமுன் இயன்ற தக்ஷிணை முதலியன வைத்து நமஸ்கரித்து அவரையுந் தீக்ஷா குருவையும் மாகேசுரர்களையும் குருடர், முடவர் முதலானவர்களையும் பூசித்து அமுது செய்வித்தல் வேண்டும்.
358. சிவசாத்திரத்தைக் கைம்மாறு கருதிப் படிப்பிக்கலாமா?
அச்சம், நண்பு, பொருளாசை என்பவை காரணமாகச் சிவசாத்திரத்தை ஒருவருக்கும் படிப்பிக்கலாகாது. நல்லொழுக்கமுங் குருலிங்கசங்கம பத்தியும் உடைய நன்மாணாக்கர்களுக்கு அவர்கள் உய்வது கருதிக் கருணையினாலே படிப்பித்தல் வேண்டும். அவர்கள் விரும்பித் தருந் தக்ஷிணையைத் தாஞ் செய்த உதவிக்கு கைம்மானெறக் கருதி ஆசையால் வாங்காது, அவர்கள் உய்யுந்திறங்கருதிக் கருணையால் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
359. மாணாக்கர்கள் தாங்கள் குருவுக்குக் கொடுக்குந் தக்ஷிணையை அவர் செய்த உதவிக்குக் கைம்மாறெனக் கருதலாமா?
தாங்கள் குருவுக்கு எத்துணைப் பொருள் கொடுப்பினும், தங்களை அவருக்கு அடிமையாக ஒப்பித்து விடுதல் ஒன்றையே யன்றி, அப்பொருளை கைம்மாறெனக் கருதிவிடலாகாது.
360. தீக்ஷா குரு, வித்தியா குரு முதலாயினார் சிவபதமடைந்து விடின், யாது செய்தல் வேண்டும்?
வருஷந்தோறுந் அவர் சிவபதமடைந்த மாச நக்ஷத்திரத்திலாயினும் திதியிலாயினும் அவரைக் குறித்துக் குருபூசை செய்துகொண்டு வரல் வேண்டும்.
361. இன்னும் எவ்வெவருக்குக் குருபூசை செய்வது ஆவசியகம்?
பல அற்புதங்களைச் செய்து தமிழ் வேதத்தைத் திருவாய் மலர்ந்தருளியுஞ் சைவ சமயத்தைத் தாபித்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய சமயக்குரவர் நால்வருக்கும்; அறுபத்து மூன்று நாயன்மாருடைய மெய்யன்பையும் அவ்வன்புக்கு எளிவந்தருளிய சிவபெருமானுடைய பேரருளையும் அறிவித்து அவரிடத்தே அன்புதிக்கச் செய்யும் பெரியபுராணத்தைத் திருவாய் மலர்ந்தருளிய சேக்கிழார் நாயனாருக்கும்; பதி, பசு, பாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் இலக்கணங்களை அறிவிக்குஞ் சைவ சித்தாந்த நூலுணர்ச்சியை வளர்த்தருளிய மெய்கண்டதேவர் முதலிய சந்தான குரவர் நால்வருக்கும்; தமிழ் வழங்கும் நிலமெங்கும் நல்லறிவுச்சுடர் கொளுத்தியருளிய தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாருக்கும் இயன்றமட்டுங் குருபூசை செய்து கொண்டே வருவது ஆவசியகம்.
362. இந்நாயன்மார்களுடைய குருபூசைத் தினங்கள் எவை?
1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்................வைகாசி - மூலம்
2. திருநாவுக்கரசு நாயனார்..............................சித்திரை - சதயம்
3. சுந்தரமூர்த்தி நாயனார்................................ஆடி - சுவாதி
4. மாணிக்கவாசகர் சுவாமிகள்........................ஆனி - மகம்
5. சேக்கிழார் நாயனார்..................................வைகாசி - பூசம்
6. மெய்கண்டதேவர்.....................................ஐப்பசி - சுவாதி
7. அருணந்தி சிவாசாரியர்.............................புரட்டாசி - பூரம்
8. மறைஞானசம்பந்த சிவாசாரியர்.................ஆவணி - உத்தரம்
9. உமாபதி சிவாசாரியர்................................சித்திரை - அத்தம்.
10. திருவள்ளுவ நாயனார்.............................மாசி - உத்திரம்.
363. குருபூசைக்குத் தக்க பொருளில்லாதவர்கள் யாது செய்தல் வேண்டும்?
குருபூசை செய்யப்படுந் தானத்திலே தங்கள் தங்களால் இயன்ற பதார்த்தங்கள் கொண்டுபோய்க் கொடுத்துத் தரிசனஞ் செய்தல் வேண்டும். அதுவும் இயலாதவர்கள் கறி திருத்துதல் முதலிய திருத்தொண்டுகளேனுஞ் செய்தல் வேண்டும்.
364. குருபூஜை எப்படிச் செய்தல் வேண்டும்?
திருக்கோயிலிலே சிவலிங்கப் பெருமானுக்கும், அந்நக்ஷத்திரத்திலே சிவபதம் அடைந்த நாயனார் திருவுருவம் உள்ளதாயின் அதற்கும் விசேஷ பூசை செய்வித்துத் தரிசனஞ் செய்துகொண்டு, தம்மிடத்துக்கு அழைக்கப்பட்டும், அழைக்கப்படாதும் எழுந்தருளி வந்த சிவபத்தர்களை அந்நாயனராகப் பாவித்துப் பூசித்துத் திருவமுது செய்வித்துச் சேஷம் புசித்தல் வேண்டும். (சேஷம் - எஞ்சியது)
365. சேஷம் எத்தனை வகைப்படும்?
பாத்திரசேஷம், பரிகலசேஷம் என இரண்டு வகைப்படும். (பரிகலம் - குருமார் உண்கலம்)
நன்றி : சைவநெறி, இதை எனக்கு அனுப்பியவர் : கே. திருஞானசம்பந்தன்
திருச்சிற்றம்பலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக