1. கடவுள் வாழ்த்து.
1. ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன்; ஆறு விரிந்தனன்; ஏழு உம்பர்ச்
சென்றனன்; தான் இருந்தான்; உணர்ந்து எட்டே.
ஒரு பொருளான சிவபெருமானே இனிய சக்தியுடன் இரண்டாய் உள்ளவன்; நான்முகன் திருமால் உருத்திரன் என்ற மூன்று நிலைகளில் நிற்பவன்; அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் உணர்ந்தவன்; மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து பொறிகளையும் வென்றவன்; மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆய ஆறு ஆதாரங்களில் விரிந்தவன்; அதற்கு மேல் ஏழாவது இடமான சகசிரதளத்தில் விளங்குபவன்; நிலம், நீர், காற்று, தீ, வான், கதிரவன், சந்திரன், ஆன்மா என்னும் எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து விளங்குபவன்.
விளக்கம் : அவன் இன்னருள் இரண்டு - அவன், சிவன் சக்தி என இரண்டு, மூன்று - ஆன்மாவுமாம். நான்கு - வேதங்கள் நான்கையும் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். ஆறு - மேற்சொல்லப்பட்டவையே அல்லாமல் வன்னம், பதம், மந்திரம், கலை, புவனம், தத்துவம் எனவும் பொருள் கொள்ளலாம். ஏழு - உம்பர்ச் சென்றனன் - ஏழு உலகத்தைக் கடந்தவன் எனவும் உரைக்கலாம்.
ஓம் என்ற பிரணவத்தில் அகரம், ஆன்மா; உகரம், சக்தி; மகரம், சிவம் என்பர் அறிஞர். ஆதலால் அதன்படி சிவம், சக்தி தவிர ஆன்மா மூன்றாவதாக விளங்குகிறது. ஏழாவது சகசிரதளம் என்பது சிரசுக்கு மேல் உள்ளது.
சிவபெருமான் ஒருவனே சக்தியுடன் இரண்டாகவும், மூன்று மூர்த்திகளாயும், படைத்தல் தொழிலை நான்கு வேதங்களால் உண்மையை விளங்கச் செய்பவனாயும், ஐந்து பொறிகளை அளிப்பவனாயும், ஆறு ஆதாரங்களில் விரிந்தவனாயும், சகசிரதளத்தின் பொருந்தி அட்ட மூர்த்தமாயும் விளங்குகிறான் என்பதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக