வெள்ளி, 29 ஜூன், 2012

கோனைப் புகழ்வீர்!

21.                     வானப் பெருங்கொண்டல் மால்அயன் வானவர்
                          ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனை,
                          கானக் களிறு கதறப் பிளந்த எம் 
                          கோனைப் புகழுமின், கூடலும் ஆமே.
     
     வானத்தில் உள்ள மேகம் போன்ற கரிய திருமால், பிரமன், தேவர் முதலியவரின் இழிந்த பிறவியை நீக்குபவன். அவன் ஒப்பற்றவன். ஆணவமான காட்டு யானை கதறும்படி பிளந்தவன். இத்தகைய எம் சிவபெருமானைப் போற்றிப் புகழுங்கள். அவனை அடைந்து உய்வு பெறலாம்.

     விளக்கம் : சீவகோடிகளின் ஆணவமான படலத்தைக் கிழித்தலைக் 'கானக் களிற்றைக் கதறப் பிளத்தல்' என்றார். பிரணவத்தில் இருள் நிலை கெட்டு ஒளி நிலையைப் பெறுதலே கானக்களிறு கதறப் பிளத்தல். ஊனம் - குற்றம். கூடல் - புணர்தல்; ஒன்றிநிற்றல்.


Bookmark and Share

வியாழன், 28 ஜூன், 2012

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 10


கணபதி துணை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்


10. நித்தியகருமவியல்

230. நாடோறும் நியமமாக எந்த நேரத்திலே நித்திரை விட்டெழுதல் வேண்டும்?

     சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை விட்டெழுவது உத்தமம்; மூன்றேமுக்கால் நாழிகைக்கு முன் எழுவது மத்திமம்; உதயத்தில் எழுவது அதமம்.

சிவத்தியானாதி

231. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

     சலம் வாயிற்கொண்டு இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணி, வடக்கு முகமாகவேனும் கிழக்கு முகமாக வேனும் இருந்து, விபூதி தரித்துக் கொண்டு, குரு உபதேசித்த பிரகாரஞ் சிவபெருமானைத் தியானித்துச் சிவமூலமந்திரத்தை இயன்ற மட்டுஞ் செபித்து, அருட்பாக்களினாலே உச்ச விசையோடு தோத்திரஞ் செய்தல் வேண்டும்.
Bookmark and Share

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 9

கணபதி துணை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்


9.சிவலிங்கவியல்

199. சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?

     சிவபெருமான், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும் குருவுஞ் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம். சிவத்துக்குப் பெயராகிய இலிங்கம் என்னும் பதம், உபசாரத்தால், அச்சிவம் விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும். (சைலம்=சிலையாலாகியது).
Bookmark and Share

புதன், 27 ஜூன், 2012

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 14

கணபதி துணை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்.


14. மாகேசுர பூசையியல்


366. மாகேசுர பூசையாவது யாது?

     ஆசாரியர், நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் நால்வகை மாகேசுரர்களையும் விதிப்படி பூசித்துத்திருவமுது செய்வித்தலாம் (மாகேசுரர் = மகேசுரனை வழிபடுவோர்)

367. மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய உயர்வு தாழ்வு களினால் வேறுபடுமா?

    ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமுஞ், சமய தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.  வைதிகப் பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், விசேஷ தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.  வைதிகப் பிராமணர் லக்ஷம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், நிருவாண தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.  வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.
Bookmark and Share

செவ்வாய், 26 ஜூன், 2012

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 13

கணபதி துணை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்.


13. குருசங்கம சேவையியல்

334. குரு என்றது யாரை?

     தீஷாகுரு, வித்தியாகுரு, போதககுரு முதலாயினோர் குரு.  ஆசாரியன், தேசிகன், பட்டாரகன் என்பன ஒரு பொருட் சொற்கள்.

335. சங்கமம் என்றது என்னை?

     நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் முத்திறத்துச் சிவபத்தர்களை.

336. குருவையுஞ் சிவபத்தரையும் யாது செய்தல் வேண்டும்?

     மனிதர் எனக் கருதாது, சிவபெருமானெனவே கருதி, மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுஞ் சிரத்தையோடு வழிபடல் வேண்டும்.  பிரதிட்டை செய்து பூசிக்கப்படும் சிவலிங்கத்தைச் சிலையென்று நினைந்து அவமதிப்பவரும், சிவதீக்ஷை பெற்று இயன்றமட்டும் விதிப்படி அநுட்டிக்குஞ் சிவபத்தரை மனிதர் என்று நினைந்தேனும் அவருடைய பூருவ சாதியை நினைந்தேனும் அவமதிப்பவருந் தப்பாது நரகத்தில் வீழ்வர்.
Bookmark and Share

ஞாயிறு, 24 ஜூன், 2012

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்

     ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தை அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அவசியம் அடையலாம். லலித என்பதற்கு மென்மையான என்று பொருள். லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலப மானவள் அல்லது சுலபமாக அடையக் கூடியவள் என்றும் அறியலாம். ஸ்ரீ ஐச்வர்யத்தின் அறிகுறி. ஆகவே ஸ்ரீ லலிதா என்றழைக்கப்படும் அத்தெய்வம் மென்மை யானவள் என்பதுடன் ஸகல ஐச்வர்யத்தின் நிலையான இருப்பிடமாகவே எப்போதும் விளங்குகிறாள்.      
     
     நாம் விருப்பி அடைய தங்கு தடையின்றி சுலபமாக நமக்கு இசைபவளும், நம் குற்றம் குறைகளை மன்னித்து நன்மை வழங்குபவளும் எந்நிலையிலும் நம்மைக் காப்பாற்றக் காத்திருப்பவளும், தன் செல்வங்கள் அனைத்தையும் தர எப்போதும் தயாராயிருப்பவளும், நமக்கென்றே வாழ்பவளும் தாயன்றி வேறெவருமில்லை, ஈரேழுலகத்திலும்.
Bookmark and Share

வெள்ளி, 22 ஜூன், 2012

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 11


கணபதி துணை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்.

11. சிவாலய கைங்கரியவியல்

279. சிவாலயத்தின் பொருட்டுச் செயற்பாலனவாகிய திருத்தொண்டுகள் யாவை?

     திருவலகிடுதல், திருமெழுக்குச் சாத்துதல், திரு நந்தனவனம் வைத்தல், பத்திரபுஷ்பமெடுத்தல், திருமாலைக் கட்டுதல், சுகந்த தூபமிடுதல், திருவிளக்கேற்றுதல், தோத்திரம் பாடல், ஆனந்தக் கூத்தாடல், பூசைத் திரவியங்கள் கொடுத்தல் என்பவைகளாம்.
Bookmark and Share

கண்ணதாசன் பார்வையில் வாழ்க்கை!

 கண்ணதாசன் மிகப்பெரிய கவிஞர் என்பது அனைவருக்கும் தெரியும். நம்முடைய காலத்தில் வாழ்ந்து மறைந்தவர். அவர் எழுதாத விஷயங்கள் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு வாழக்கூடாது என்று அவர் எழுதிய நூல்களில் இருந்து சில விஷயங்களை இந்தப் பகுதிகளில் பார்க்கலாம். இவற்றைப் படித்தால் கண்டிப்பாக நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும். அவரு டைய வாழ்க்கையின் சில பகுதிகளை உதாரணமாகக் காண்பிக்கிறார். நான் படித்த புத்தகங்களிருந்து முதலில் இந்து மதத்தைப்பற்றியும், தனிமனித ஒழுக்கத் தைப் பற்றியும் அவர் கூறுவதை இனி அவருடைய வார்த்தைகளுடனும், அவருடனும் நாம் இந்தப் பகுதியில் பயணிப்போம்.
Bookmark and Share

புதன், 20 ஜூன், 2012

ஜோதிடம் - அறிமுகம் 6


சந்திரன் :

     இக்கோள் பூமியிலிருந்து 27,38,800 மைல்களுக்கு அப்பாலிருந்து பூமியைச் சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு 6,800 மைல்கள். குறுக்களவு சுமார் 2,162 மைல்கள். சந்திரன் 27 நாட்கள், 8 மணியளவில் தன்னைத் தானே சுற்றிவரும். இது பூமியை 29 நாட்கள், 12 மணி, 44 வினாடிகளில் சுற்றி வரும்.     

சந்திரனுக்கு வழங்கும் பிற பெயர்கள் :     
     
     அம்புலி, இந்து, உடுபதி, கலாநிதி, கலையினன், குபேரன், குழவி, சசி, சோமன், தண்சுடர், திங்கள், மதி, மதியம்.

ஜோதிடவியலில் கோள்                       சந்திரனின் தன்மை

 1.  நிறம்                                                    வெண்மை

 2.  குணம்                                             -      # சாத்வீகம்,வளர்பிறையில்
                                                                     சௌம்யன், தேய்பிறையில் குரூரன்

 3.  மலர்                                               -      வெள்ளலரி

 4.  இரத்தினம்                                      -      முத்து

 5.  சமித்து                                            -      முருங்கை
Bookmark and Share

செவ்வாய், 19 ஜூன், 2012

ஜோதிடம் - அறிமுகம் 5

கோள்கள் :

     இந்திய ஜோதிடவியல் வரலாற்றின்படி முதலில் கோள்கள் ஏழு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. இராமாயணத்தில் இராமன் பிறந்ததைக் கூறுமிடத்தில் வால்மீகி முனிவர் இராமன் பிறந்த நேரத்தில் ஐந்து கோள்கள் உச்சமாகவும், குருபகவான் சந்திரனுடன் சேர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். அதைக் கருத்தில் கொண்டு, சைத்ர மாதம் என்றும் சொல்லப்பட்டதையும் எடுத்துக் கொண்டால் சூரியன் மேஷத்தில் உச்சமாக இருந்திருத்தலை அறியலாம். சூரியனுக்கு அருகிலேயே புதனும், சுக்கிரனும் காணப்படுவர் என்பது விதியாதலால் மேஷராசிக்கு அருகில் மீனராசியில் உச்சமாக இருக்கக் கூடிய கோள் சுக்கிரன் ஆகும். எனவே இரண்டு கோள்கள் உச்சமாக இருத்தலை (சூரியன், சுக்கிரன்) ஊகிக்கலாம். புதன் உச்சமாக இருக்க முடியாது. மீனராசிக்கு ஏழாவது இராசியாகிய கன்னியில்தான் புதன் உச்சமாக இருக்க முடியும். ஆனால் சூரியனுக்கு அருகிலேயெ சஞசரிக்கும் புதன் சூரியனை விட்டு அவ்வளவு தொலைவில் இருக்க முடியாது. எனவே புதனைத் தவிர ஏனைய கோள்களே உச்சமாக இருக்க முடியும். இராமன் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் எனும் புனர்வசு நட்சத்திரம் என்று வால்மீகி கூறுகிறார்.
Bookmark and Share

திங்கள், 18 ஜூன், 2012

இடியும் முழக்கமும் ஈசர் உருவம்!


20.                        முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த 
                             அடிகள் உறையும் அறனெறி நாடில்,
                             இடியும் முழக்கமும் ஈசன் உருவம் 
                             கடிமலர்க் குன்றம் மலைஅது தானே.

     இறப்பையும் பிறப்பையும் கருவில் உதிக்கும் முன்பே வரையறை செய்தவன் சிவன். அவன் பொருந்தியுள்ள நியதியை அறியின் அது விளக்கம் பொருந்திய கண் மலருக்கு மேல் உள்ள சிரசாகும். அவ்விறைவனது வடிவம் ஒளியும் ஒலியுமாம்.

     விளக்கம் : முடிவு - இறப்பு. அடிகள் - சிவபெருமான். அறனெறி - அறன் + நெறி. முழக்கம் - ஒளி. கடி - விளக்கம். இடி - ஒளி; விந்து. பஞ்ச பூதத் தலைவர்களில் ஆகாய பூதராக உள்ளவர் சதாசிவர். பயிற்சியாளரின் சிரசில் தியானத்தில் மேகம் ஒலிப்பது போல் தோன்றும்.     

Bookmark and Share

சீவரின் தவத்தில் விளங்குபவன்.


19.                         இது பதி ஏலம் கமழ்பொழில் ஏழும் 
                              முதுபதி செய்தவன்; மூதறிவாளன்; 
                              விதுபதி செய்தவன்; மெய்த்தவம் நோக்கி,  
                              அதுபதி யாக அம்ருகின் றானே.
     
     வடக்குத் திக்கிற்குத் தலைவன் விடய வாசனைக்கு இடமான ஏழு ஆதாரங்களையும், அழித்துப் பாழான நிலமாக்கியவன். அவன் பழைமை யாகவே அனைத்தும் அறிபவன். பாவங்களைப் போக்கும் பலியைக் கொள்ளும் வடக்குத் திக்கை இடமாக்கிக் கொண்ட சீவரின் உண்மைத் தவத்தைக் கண்டு, அது செயபவரையே இடமாக்கிக் கொண்டு எழுந்தருளுபவன்.

     விளக்கம் : இதுபதி - வடக்குத்திக்கு. அத்திக்கில் சிவபெருமான் விளங்குபவன். ஏலம் - வாசனை. விது - பலி; அது பாவ நிவர்த்திக்குரியது. முதுபதி - சுடுகாடு. அது - தவம. ஏழ் - ஏழ் ஆதாரங்கள். முதுபதி செய்தவன் - சுடுகாடு ஆக்கியவன். உண்மையான தவம் செய்பவரிடத்தில் அவன் விளங்குவான்.








Bookmark and Share

வரம் தருவான் வள்ளல்!


18.                         அதிபதி செய்து அளகை வேந்தனை 
                              நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி 
                              அதுபதி ஆதரித் தாக்கம்அது ஆக்கின்  
                              "இதுபதி கொள்" என்ற எம் பெருமானே.     



     வடக்குத் திக்குக்குத் தலைவனாய்ச் செய்து அளகாபுரி மன்னனான குபேரனைச் செல்வத்துக்குத் தலைவனாகச் செய்த நிறைந்த தவத்தின் பயனைக் கருத்தில் கொண்டு, அவ்வட திசையைப் போற்றி நீயும் சேமிப்பைப் பெருக்கினால் இவ்வட திக்கிற்குத் தலைவனாய் நீயும் ஆகலாம் எனச் சொல்பவன் எம் தலைவன் ஆவான்.

     விளக்கம் : அதிபதி - தலைவன். அளகை - அளகாபுரி; குபேரனின் நகர். நிறைதவம் - விந்துவை ஒளிமயமாக்கும் யோகம். அதிபதி - வடக்குத் திக்கு. ஆக்கம் - சேமிப்பு; உயிர்ச்சத்தி.




Bookmark and Share

ஈசனுடன் கொள்ளும் தொடர்புக்கு ஒப்பில்லை!

17.                       காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும் 
                            மாயம் கத்தூரிஅது மிகும்; அவ்வழி 
                            தேசம் கலந்து ஒரு தேவன என்று எண்ணினும் 
                            ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே.
     
     பருமை நுண்மை ஆகிய உடம்புகள் இரண்டும் ஒன்றாய்க் கலந்து இருப்பினும், மாயையின் தொடர்புடைய நுண்ணிய உடம்பில்தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் வழியே மனம் பொருந்தி, ஆன்மா தன்னை ஒளிவடிவமாய்க் காணினும், உடலை விட்டு வான் வடிவினனாகிய சிவனுடன் கொள்ளும் தொடர்புக்கு ஒப்பில்லை.

     விளக்கம் : காயம் - உடம்பு. அது பருமை, நுண்மை என்ற இரண்டு வகைப்படும். கொதிக்கினும் - கலந்து இருப்பினும். மாயம் - மாயை. கத்தூரி - கானம். தேசு - ஒளி. எதிர் இல்லை - ஒப்பு இல்லை.

Bookmark and Share

தேவர் வணங்குவது ஏன்?


16.                       கோது குலாவிய கொன்றைக் குழல்சடை 
                            மாது குலாவிய வாள்நுதல் பாகனை 
                            யாது குலாவி அமரரும் தேவரும் 
                            கோது குலாவிக் குணம் பயில் வாரே.
     
     சிவபெருமான் நரம்புடைய கொன்றை மலரை அணிந்த சுருண்ட சடையை யுடையவன். அழகுடைய ஒளியுடன் கூடிய நெற்றியையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்டவன். அத்தகையவனை மூவர்களும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தி என்ன குணத்தைப் பாராட்டி நாடுவர்? நாட மாட்டார்.

     விளக்கம் :  கோது - நரம்பு. குலாவிய - பொருந்திய. மாது - அழகு. வாள்நுதல் - ஒளியுடைய நெற்றியுடைய உமாதேவியார். குழற்சடை - சுருண்ட சடை. யாது குலாவி - என்ன எனப் பாராட்டி.  குணம் பயில்வார் - குணத்தைப் பாராட்டுவர். மூவரும் தேவரும் குற்றத்துள் பொருந்தியுள்ளமையால் உமையொரு பாகனின் குணத்தைப் பாராட்ட மாட்டார்.
Bookmark and Share

சனி, 16 ஜூன், 2012

சோதியானவன்.


15.                      ஆதியுமாய், அரனாய், உடலுள் நின்ற 
                            வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள்
                            சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள் 
                            நீதியுமாய், நித்தம் ஆகி நின்றானே.
     
     சிவபெருமான் உலகைப் படைப்பவனாயும், அழிப்பவனாயும் உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும் அவற்றைக் கடந்தும் விளங்குகின்றான். அவன் திருவருள் பேரொலியாய்க் குவியாத இயல்புடன் ஊழினை இயக்குபவனாயும் என்றும் அழியாத தன்மையுடன் இருக்கின்றான்.

     விளக்கம் : ஆதி - படைப்பவன். அரன் - அழிப்பவன். வேதியுமாய் மாற்றம் செயபவனாயும். நித்தம் - அழியாத தன்மை.



Bookmark and Share

எதனையும் கண்காணிக்கின்றவன்!


14.                      கடந்துநின்றான் கமல மலர் ஆதி;
                           கடந்துநின்றான் கடல்வண்ணன் எம் மாயன்;
                           கடந்துநின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்;
                           கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே.
     
     சிவபெருமான் சுவாதிட்டம் எனும் மலரில் விளங்கும் நான்முகனைக் கடந்து விளங்குகின்றான். மணிபூரகத்தில் உள்ள எம் மாயனான திருமாலைக் கடந்துள்ளான். அந்த இருவருக்கும் மேல் அநாகதச் சக்கரத்தில் உள்ள உருத்திறனைக் கடந்துள்ளான். இம் மூவரையும் கடந்து சிரசின் மேல் நின்று யாவற்றையும் கண்டவண்ணம் உள்ளான்.

     விளக்கம் : சுவாதிட்டானத்திற்கு நான்முகனும், மணிபூரகத்திற்குத் திருமாலும, அநாகதச்சக்கரத்திற்கு உருத்திரனும் அதிதேவதைகள் ஆவார்கள். கண்டத்துக்கு மகேசுவரனையும் புருவநடு ஆஞ்ஞைச் சக்கரத்திற்குச் சதாசிவனையும் தேவதை என்று கூறுவார்கள்





Bookmark and Share

உள்ளவனும் இல்லவனும் ஆவான்!


13.                     மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
                          எண்அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை;
                          விண்அளந் தான்தன்னை மேல்அளந்தார் இல்லை;
                          கண்அளந்து எங்கும் கடந்து நின்றானே.     

     மண் உலகத்தை அளந்த திருமால், அவனது கொப்பூழில் தோன்றிய நான்முகன் முதலிய தேவர்களும் சிவனை எண்ணத்தில் நிறுத்தி நினையாதிருக்கின்றனர். வானத்தில் விரிந்து விளங்கும் பெருமானை மண்ணவர் கடந்துபோய் அறிய முடியவில்லை. ஆகவே அப்பெருமான் மண்ணில் கலந்தும் எல்லாவற்றையும் கடந்தும் விளங்குகின்றான்.

     விளக்கம் : தேவர்கள் சிவபெருமானை நினைக்கின்றிலர். இதற்குக் காரணம் அவர்கள் இன்பத்தில் திளைப்பது! எண் - அறிதல். விண் - அண்டம். கண் அளத்தல் - கண்ணுடன் கலந்து நிற்றல். கண், இடம், இடத்துள்ள பொருள் ஆகியவற்றையும் குறிக்கின்றது.

Bookmark and Share

அவனே தலைவன்!

12.                        கண்ணுத லான் ஒரு காதலின் நிற்கவும்
                             என்இழி தேவர் இறந்தார் எனப் பலர்;
                             மனஉறு வார்களும் வான்உறு வார்களும்
                             அண்ணல் இவன்என்று அறியகிலார்களே.    

     நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமான் நிகர் இல்லாத அன்புடன் அழியாதிருக்கவும் எண்ணில்லாத தேவர்கள் இறந்தனர். மண்ணுலகத்திலும், விண்ணுலகத்திலும் வாழ்கின்ற பலரும் இப்பெருமானே அழியாதிருக்க அருள் செய்பவன் என்று அறியாதிருக்கின்றனர்! என்னே அவர்தம் அறியாமை!
     
     விளக்கம் : கண்ணுதலோன் - நெற்றியில் கண் உடையவனான சிவபெருமான். அக்கண் தீமயமானது. எண்ணிலி - எண்ணில்லாதவர். மண் உறுவார் - மண் உலகத்தவர். வான் உறுவார் - தேவ உலகில் வாழ்பவர். அண்ணல - பெருமையுடையவர். அறியகில்லார் - அறியமாட்டாதவர்.



சிவபெருமானின் ஆற்றலை உலகத்தவரும் தேவரும் அறியவில்லை.


Bookmark and Share

அவன் பெயர் நந்தி.

11.                       அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில் 
                            இயலும் பெருந்தெய்வம் யாதும்ஒன்று இல்லை;
                            முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே 
                            பெயலும் மழைமுகில்; பேர் நந்தி தானே.
     
     தொலைவிலும் பக்கத்திலும் எமக்கு முன்னவனான இறைவனின் பெருமையை நினைக்கின் அவருக்கு ஒப்பான தெய்வம் வேறொன்றில்லை. முயற்சியும் அதன் பயனும் மழை பெய்கின்ற மேகமும் அப்பெருமானே ஆகும். அவனது பெயர் நந்தியாகும்.

விளக்கம் : சிவபெருமானே உயிர்களுக்கு அருள் செய்பவன்.

Bookmark and Share

புதன், 13 ஜூன், 2012

செய்திகள்

     மத்திய அரசின் வேலை நிர்வகிப்பதுதான், 
வியாபாரம் செய்வது அல்ல: மோடி எச்சரிக்கை.
     
     குஜராத் மாநிலத்தில் முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிறுவனங்களின் மீது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு நிறுவனங்களை ஏவி மிரட்டும் வேலையை செய்கிறது. குறிப்பாக எனக்கு நெருக்கமான முதலீட்டாளர்கள் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றனர்.

     இதுபோன்ற செயல்களை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நடக்கும் விஷயங்களை பிரதமர் ஏற்றுக்கொண்டால் அவர் பதில் சொல்ல முடியும். பிரச்சனை என்னவென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவருக்கே நம்பிக்கை இல்லாததுதான்.

பொக்கிஷ தேசம்!

     கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா, பொக்கிஷ தேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பாதாள அறைகளில் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதே வகையில் தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது திருச்சூர் மாவட்டம் திருவில்வாமலாவில் உள்ள ஸ்ரீ வில்வத்ரிநாதர் கோயில். இக்கோயில் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என சில குறிப்புகள் உள்ளனவாம். 

     சில கர்ணபரம்பரைக் கதைகளில் இக்கோயில் பாதாள அறையில் ஸ்ரீ ராமரின் தங்க வில் மற்றும் விலை மதிப்பிட முடியாத பொக்கிஷங்கள் உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Bookmark and Share

ஜோதிடம் - அறிமுகம் 4

     'ஜ்யோதிஷம்' எனும் வடமொழிச் சொல்லுக்கு ஒளியைப் பற்றிய அல்லது ஒளியினுடைய சாத்திரம் என்று பொருள். வேதமாகிய மனிதனுக்கு முக்கிய உறுப்பான கண்ணாக இந்த ஜோதிட சாத்திரம் விளங்குகின்றது. ஒளியுடன் கூடிய கண்ணால்தான் காணவியலும் அல்லவா, மகாகவி பாரதியும் '' ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா '' என்றார். இந்தச் ஜோதிடச்சாத்திரமும் ஒளியைப் பற்றியதேயாகும். புருஷசூக்தத்தில் இறைவனின் கண்களினின்று தோன்றியவன் சூரியன் என்று கூறப்பட்டுள்ளது. கண்ணின் ஒளி சிறந்து விளங்க சூரிய நமஸ்காரம் செயயச்சொல்லப்பட்டுள்ளது. நம் கண்ணால் காணக்கூடிய தெய்வம் சூரியனேயாகும். 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ' எனும் பழமொழி மூலம் சூரியனுக்கும், கண்ணொளிக்குமுள்ள தொடர்பு தெள்ளென விளங்கும்.

     ஒவ்வொரு நாளும், சூரிய உதயம் முதற்கொண்டே கணக்கிடப்படுகிறது. பகலும், இரவும் சூரியன் உதித்தலையும், மறைதலையும் கொண்டு கணக்கிடப்படுவதையும் காணலாம். சூரியன் எந்த இராசியில் காணப்படுகின் றானோ, அதுவே அம்மாதமாகும். மேஷராசியில் துவங்கி மீனராசி வரைச் சென்றுத் திரும்பவும் மேஷராசியில் சூரியன் வரும் காலம் ஓர் ஆண்டாகும். இவ்வாறு அறுபது சுற்றுக்கள் கொண்டது ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது. எனவே ஒளிதரும் சூரியனைக் கொண்டே காலங்கள் கணக்கிடப்படுவதால் இச்சாத்திரத்திற்கு ' ஜ்யோதிஷசாஸ்த்ரம் ' என்று பெயரிட்டனர் பெரியோர்கள். இச்சோதிடவியல் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும். அவை கணிதச்கந்தம், ஜாதகஸ்கந்தம் மற்றும் ஸம்ஹிதா ஸ்கந்தம் ஆகும்.

கணித ஸ்கந்தம் :

     இது 'சித்தாந்தம்', 'தந்த்ரம்' மற்றும் 'கரணம்' எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டதாகும். இவைகளில் முறையே சிருஷ்டி, யுகம் மற்றும் இஷ்ட சக ஆண்டுகளை முதலாகக் கொண்டு கணிதங்கள் கூறப்படுகின்றன.

ஜாதக ஸ்கந்தம் :

     இது 'ஹோரை' மற்றும் 'தாஜிகம்' எனும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. சாதகன் பிறந்த காலத்தில் காணப்பட்ட கோள்களின் அமைப்பைக் கொண்டுப் பலன்களைக் கூற உதவுவது ஹோரையேயாகும். கோசார நிலை எனப்படும் சாதக சோதனைக் காலத்தில் கோள்களின் நிலைகளைக் கொண்டு பலன்களைக் கூற உதவுவது  ''தாஜிகமாகும்''.

ஸம்ஹிதா ஸ்கந்தம் :

     இப்பிரிவு முகூர்த்தம், வாஸ்து, வருஷபணி மற்றும் ஆருடம் எனும் நான்கு வகையினைத் தன்னுள் கொண்டதாகும். வேதங்களிலும், மனு மற்றும் யாக்ஞவல்க்ஞர் முதலியவர்களால் இயற்றப்பட்ட ஸ்ருதிகளிலும் கூறப்பட்ட தினந்தோரும் செயய வேண்டிய கடமைகளுக்கும், விசேடமாகச் செய்ய வேண்டிய செயல்களுக்கும் நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் வழியைக் காட்டுவது முகூர்த்தமாகும். கோவில்கள், அரண்மனைகள், வீடுகள், சத்திரம் மற்றும் மடம் முதலியனவற்றைக் கட்டவும், குளம் மற்றும் கிணறு தோண்ட நல்ல நேரம் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க வழி காட்டுவது வாஸ்து ஆகும். தற்பொழுது உலகில் நன்மை உண்டாகுமா? அன்றி தீமை தலை விரித்தாடுமா? மாதம் மும்மாரி பொழிந்து நாடு செழிக்குமா? என்றெல்லாம் வானிலை முன்னறிவிப்பைத் தருவது வருஷ பணியாகும். 'ஆருடம்' என்பற்கு ஏறியிருத்தல் என்பது பொருள். ஒருவர் தன் மனத்துள் ஒரு செயலை நினைத்துக் கொண்டு, தான் வந்த காரியம் இனிதே நிறைவேறுமா எனக்கேள்வி கேட்கும் பொழுது அப்பொழுதில் கேள்விகளின் நிலைகளைக் கொண்டும் பஞ்சபட்சி முதலியனவற்றைக் கொண்டும் பலனறியும் வழியை விளக்குவது ஆரூடம் ஆகும்.

மேற்கூறப்பட்ட மூன்று பிரிவுகளைக் கூறும் சில நூல்கள் பின் வருமாறு :
                          
                              பிரிவுகள்                       நூல்கள்


கணித ஸ்கந்தம் :
                        
                        சித்தாந்தம்       -         சூரிய சித்தாந்தம்
                        தந்த்ரம்             -         ஆர்யபட்டீயம்
                        கரணம்             -          கரணகுதூகலம்


ஜாதக ஸ்கந்தம் :
                       
                       ஹோரா           -         பிருஹத் பராசர ஹோரை 
                                                            சம்பு ஹோரா பிரகாசிகா
                       தாஜிகம்           -         யவனதாஜிகம்
                                                            தாஜிகமுக்தாவளி 
                                                            நீலகண்ட தாஜிகம்


ஸம்ஹிதா ஸ்கந்தம் :
                      
                       முகூர்த்தம்       -       காலவிதானம் 
                       வாஸ்து            -        சனத்குமாரவாஸ்து               
                       வருஷபணி     -        வருஷபணி சக்ரம் 
                       ஆருடம்           -        சரநூல் 
                                                           ஜினேந்திரமாலை
                                                           பஞ்சபட்சி



நாளை பார்க்கலாம்.
திருச்சிற்றம்பலம்.

              
Bookmark and Share

திங்கள், 11 ஜூன், 2012

ஜோதிடம் - அறிமுகம் 3

     சூரிய சித்தாந்தம், பிதாமஹர் எனும் நான்முகன் சித்தாந்தம், வியாசர் சித்தாந்தம், வசிஷ்ட சித்தாந்தம், அத்ரி சித்தாந்தம், பராசர சித்தாந்தம், காசியப சித்தாந்தம், நாரத சித்தாந்தம், கர்க சித்தாந்தம், மரீசி சித்தாந்தம், மனு சித்தாந்தம், ஆங்கிரஸ சித்தாந்தம், லோமஸ சித்தாந்தம், பௌலச சித்தாந்தம், ச்யவன சித்தாந்தம், யவன சித்தாந்தம், மரு சித்தாந்தம் மற்றும் சௌனக சித்தாந்தம் ஆகும். இதில் சூரிய சித்தாந்தம், தற்பொழுது வழக்கில் அதிகமாகக் காணப்படுகின்றது.
Bookmark and Share

ஞாயிறு, 10 ஜூன், 2012

யாவுமாய் நிற்பவன்!

10.                      தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்;
                           தானே சுடும் அங்கி, ஞாயிறும் திங்களும்;
                           தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்;
                           தானே தடவரை, தண்கடல் ஆமே.


     சிவபெருமானான தானே இவ்வுலகத்தைத் தாங்கிக் கொண்டு வான வடிவாய் விளங்குபவன். அப்பெருமானே சுடும் தீயாகவும், கதிரவனாகவும், சந்திரனாகவும் இருக்கின்றான். அவனே அருள்மழை பெய்யும் சத்தியுமாக இருக்கின்றான். அவனே அகன்ற மழையாகவும் குளிர்ந்த கடலாகவும் உள்ளான்.

     விளக்கம் : சிவபெருமானே எங்கும் நிறைந்து விளங்குகின்றான். இருநிலம் - பெரிய உலகம். அங்கி - அக்கினி, தீ. தையல் - சத்தி. தடவரை - பெரிய மலை. தண்கடல் - குளிர்ந்த கடல்.
Bookmark and Share

வணங்கக் கூடியவர் எவரும் இல்லாதவன்!

9.                        பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
                           பின்னால் பிறங்க இருந்தவன்; பேர் நந்தி;
                           என்னால் தொழப்படும் எம்இறை; மற்று அவன் 
                           தன்னால் தொழப்படு வார்இல்லை தானே.


     இறைவன் பொன்னால் இயற்றப்பட்டார் போன்ற அழகிய சடை எனச் சொல்லும்படி பின்புறம் விளங்க விளங்குபவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். என்னால் அவன் வணங்கத் தக்கவன். உயிர்கட்கு எல்லாம் தலைவன். ஆயினும் அவனால் வணங்கத் தக்கவர் எவரும் இலர்.

     விளக்கம் :  புரிந்திட்ட - முறுக்கப்பட்ட; இயற்றப்பட்ட. பொன்சடை - பொன் போன்ற நிறம் பொருந்திய சடை. பின்னால் - பிற்பக்கத்தில். நந்தி - இறைவனின் திருப்பெயர். சிவபெருமானுக்கு மேற்பட்ட தெய்வம் இல்லை. ஆதலால் தன்னால் 'தொழப்படுவார் இல்லை' என்றார். சிவபெருமான் மற்றத் தேவர்க்கு மேலானவன் என்பது கருத்து.
Bookmark and Share

இறைவன் வெம்மையன், குளிர்ந்தவன்!

8.                           தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்;
                              ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை;
                              சேயினும் நல்லன்; அணியன்நல் அன்பர்க்கு;
                              தாயினும் நல்லன்; தாழ்சடை யோனே.


     தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தீயைவிட வெம்மை உடையவன். (அடியார்க்கு) நீரைவிடக் குளிர்ந்தவன்; குழந்தையைவிட நல்லவன்; பக்கத்தே விளங்குபவன்; நல்ல அடியார்க்குத் தாயைவிட அருள் செய்பவன்; இவ்வாறிருந்தும் அப்பெருமானின் அருளை அறிபவர் எவரும் இலர்.


     விளக்கம் :  வெய்யன் - தீயர்க்குக் கொடியவன். தண்ணியன் - அடியார்க்கு அருள் செய்பவன். அவர்தம் அருள் பெரிது ஆதலால் அதை அறிவார் இலர் என்றார். சேய் - குழந்தை. இறைவனின் எளிமையைச் 'சேயினும் நல்லன்' என்றார். தாயினும் நல்லன் - தாயைவிட மிக்க அருள் உடையவன்.
Bookmark and Share

தந்தையாகித் தாங்குவான்!

7.                         முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
                            தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் 
                            தன்னை, "அப்பா" எனில் அப்பனு மாய்உளன்
                            பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.


     பொன் போன்ற சகசிரதளத்தில் விளங்குபவன் சிவபெருமான். அவனே பழ்மையாகச் சமமாக வைத்து எண்ணப்படுகின்ற நான்முகன், திருமால், உருத்திரன் முதலிய மூவர்க்கும் பழமையானவன். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைமகன். அவன் தன்னை 'அப்பா' என்று அழைக்கின் வந்து தந்தையாகி உதவுபவன்.

     விளக்கம் : ஈசான மூர்த்தியே உலகம் தோன்றுவதற்கு முன்பும் உலகம் அளிவதற்குப் பின்பும் நிலைபேறாக விளங்குபவன். அவன் ஒளிவடிவமாய் விளங்குபவன்.
Bookmark and Share

ஜோதிடம் - அறிமுகம் 2

     வேதகாலத்தையடுத்து வந்த இதிகாச காலத்தில் சோதிட சாத்திரத்தின் வளர்ச்சியைக் காண முடிகிறது. இக்காலத்தில் நிமித்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எடுத்துக் காட் டாக, ராமாயணத்தில் ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு மலர்ந்தபொழுது, அனுமன் தீமூட்டி அத்தீயை அவர்கள் நட்புக்குச் சாட்சியாக்கினான். அப்பொழுது வாலிக்கும் இராவணனுக்கும், சீதைக்கும் இடது கண் துடித்ததாகக் கூறப்பட் டுள்ளது. ஆண்களுக்கு வலது கண்ணும், பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் நன்மை பயக்கும். மாறாக ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெடுதல் உண்டாகும் என்பது நிமித்த நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்தாகும். எனவே இராமனுக்கும் சுக்ரீவனுக்கும் மலர்ந்த நட்பால் இராவணனுக்கும், வாலிக்கும், அழிவு நேரப்போவதையும், சீதைக்கு நன்மையுன்டாகப் போவதையும் இதனால் வால்மீகி அறிவித்துள்ளார்.
    
     அதேபோல் கனவுகளின் பலன்களும் அக்காலத்தில் அறியப்பட்டிருந்தது. சுந்தரகாண்டத்தில் சீதை அரக்கியர்களால் துன்புறுத்தப்பட்ட பொழுது அவ்வரக்கியர்களுள் ஒருத்தியான திரிசடை என்பவள், தான் கண்ட கனவினைக் கூறி அதனால் சீதைக்கு வரப்போகும் நன்மைகளையும், இராவணனுக்கும் மற்றும் அவன் கூட்டத்தாருக்கும் வரப்போகும் தீமைகளையும் எடுத்து ரைக்கிறாள். இதன் மூலம் கனவுகளின் மூலம் வரப்போகும் நிகழ்ச்சி நன்மை பயக்குமா இல்லையா என முன் கூட்டியே அறியும் பழக்கம் அக்காலத்தில் இருந்ததை அறியலாம்.

     இராமபிரான் பிறந்தபொழுது ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தனவாகக் கூறப்படுகிறது. இராமபிரான் பிறந்தநாள் (நட்சத்திரம்) புனர்பூசம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடக லக்கினத்தில் தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளமையால் இதிகாச காலங்களில் கோள்களின் உச்சம், நீசம், நட்சத்திரங்கள் எனப்படும் நாள்கள், அந்நாள்களுக்குடைய தேவதைகள், இலக்கினம் முதலிய வீடுகளைப் பற்றிய தெளிவான அறிவாற்றல் இருந்ததெனக் கூறமுடியும்.

     எச்செயல்களையும் தொடங்குவதற்கான நாள், நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்கவும் அறிந்திருந்தனர். அனுமன் இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டு திரும்பிய பின், இராவணன் மீது போர் தொடுக்க இராமன் எண்ணினான். அப்பொழுது இராமன் தனது சேனைத் தலைவர்களிடம் " இன்று உத்ரபல்குனி " நட்சத்திரம். இது எனக்கு நன்மை தரும் ஆறாவது நட்சத்திரமாகும். இன்று போருக்குக் கிளம்பினால் வெற்றி நிச்சயம் என்று கூறுகின்றான். இதன் மூலம் இதிகாச காலங்களில் தான் பிறந்த நாள் முதல், அன்றைய நாள் வரை எண்ணிப் பலன்களை முடிவெடுக்கும் '' தாராபாலன் '' எனும் நட்சத்திரப் பலன்களையும் நன்கு அறிந்திருந்தனர் என்பது கண்கூடு.


     இவ்வாறு வேதகாலத்தில் துவங்கிய 'வேதாங்க சோதிடம்' இதிகாச புராண காலங்களில் நன்கு வளர்ச்சி பெற்றுப் பின் இலக்கிய காலத்தில் முழு வளர்ச்சியையும் அடைந்தது.

     காசியப சம்ஹிதையின்படி சோதிடவியலின் முதல் நூலாசிரியர்களாகப் பதினெட்டுப் பேர்கள் போற்றப்படுகின்றனர்.


     சூர்ய :               பிதாமஹ :                    வ்யாஸ :                வசிஷ்ட :


     அத்ரி :              பராசர :                          கஸ்யப :                 நாரத :


     கர்க :                மரீசி :                             மனு :                      அங்கிர :


     லோமஸ :      பௌலச :                       ச்யவன :                 யவன :


     மரு :                சௌனக :


     எனும் பதினெட்டுப் பேர்கள் போற்றப்படுகின்றனர். இவர்கள் பெயரால் பதினெட்டுச் சித்தாந்தங்கள் காணப்படுகின்றன.


பதினெட்டுச் சித்தாந்தங்கள் பற்றி நாளை பார்க்கலாம்.
திருச்சிற்றம்பலம்.
      
Bookmark and Share
Pages (24)123456 Next