புதன், 13 ஜூன், 2012

ஜோதிடம் - அறிமுகம் 4

     'ஜ்யோதிஷம்' எனும் வடமொழிச் சொல்லுக்கு ஒளியைப் பற்றிய அல்லது ஒளியினுடைய சாத்திரம் என்று பொருள். வேதமாகிய மனிதனுக்கு முக்கிய உறுப்பான கண்ணாக இந்த ஜோதிட சாத்திரம் விளங்குகின்றது. ஒளியுடன் கூடிய கண்ணால்தான் காணவியலும் அல்லவா, மகாகவி பாரதியும் '' ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா '' என்றார். இந்தச் ஜோதிடச்சாத்திரமும் ஒளியைப் பற்றியதேயாகும். புருஷசூக்தத்தில் இறைவனின் கண்களினின்று தோன்றியவன் சூரியன் என்று கூறப்பட்டுள்ளது. கண்ணின் ஒளி சிறந்து விளங்க சூரிய நமஸ்காரம் செயயச்சொல்லப்பட்டுள்ளது. நம் கண்ணால் காணக்கூடிய தெய்வம் சூரியனேயாகும். 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ' எனும் பழமொழி மூலம் சூரியனுக்கும், கண்ணொளிக்குமுள்ள தொடர்பு தெள்ளென விளங்கும்.

     ஒவ்வொரு நாளும், சூரிய உதயம் முதற்கொண்டே கணக்கிடப்படுகிறது. பகலும், இரவும் சூரியன் உதித்தலையும், மறைதலையும் கொண்டு கணக்கிடப்படுவதையும் காணலாம். சூரியன் எந்த இராசியில் காணப்படுகின் றானோ, அதுவே அம்மாதமாகும். மேஷராசியில் துவங்கி மீனராசி வரைச் சென்றுத் திரும்பவும் மேஷராசியில் சூரியன் வரும் காலம் ஓர் ஆண்டாகும். இவ்வாறு அறுபது சுற்றுக்கள் கொண்டது ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது. எனவே ஒளிதரும் சூரியனைக் கொண்டே காலங்கள் கணக்கிடப்படுவதால் இச்சாத்திரத்திற்கு ' ஜ்யோதிஷசாஸ்த்ரம் ' என்று பெயரிட்டனர் பெரியோர்கள். இச்சோதிடவியல் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும். அவை கணிதச்கந்தம், ஜாதகஸ்கந்தம் மற்றும் ஸம்ஹிதா ஸ்கந்தம் ஆகும்.

கணித ஸ்கந்தம் :

     இது 'சித்தாந்தம்', 'தந்த்ரம்' மற்றும் 'கரணம்' எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டதாகும். இவைகளில் முறையே சிருஷ்டி, யுகம் மற்றும் இஷ்ட சக ஆண்டுகளை முதலாகக் கொண்டு கணிதங்கள் கூறப்படுகின்றன.

ஜாதக ஸ்கந்தம் :

     இது 'ஹோரை' மற்றும் 'தாஜிகம்' எனும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. சாதகன் பிறந்த காலத்தில் காணப்பட்ட கோள்களின் அமைப்பைக் கொண்டுப் பலன்களைக் கூற உதவுவது ஹோரையேயாகும். கோசார நிலை எனப்படும் சாதக சோதனைக் காலத்தில் கோள்களின் நிலைகளைக் கொண்டு பலன்களைக் கூற உதவுவது  ''தாஜிகமாகும்''.

ஸம்ஹிதா ஸ்கந்தம் :

     இப்பிரிவு முகூர்த்தம், வாஸ்து, வருஷபணி மற்றும் ஆருடம் எனும் நான்கு வகையினைத் தன்னுள் கொண்டதாகும். வேதங்களிலும், மனு மற்றும் யாக்ஞவல்க்ஞர் முதலியவர்களால் இயற்றப்பட்ட ஸ்ருதிகளிலும் கூறப்பட்ட தினந்தோரும் செயய வேண்டிய கடமைகளுக்கும், விசேடமாகச் செய்ய வேண்டிய செயல்களுக்கும் நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் வழியைக் காட்டுவது முகூர்த்தமாகும். கோவில்கள், அரண்மனைகள், வீடுகள், சத்திரம் மற்றும் மடம் முதலியனவற்றைக் கட்டவும், குளம் மற்றும் கிணறு தோண்ட நல்ல நேரம் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க வழி காட்டுவது வாஸ்து ஆகும். தற்பொழுது உலகில் நன்மை உண்டாகுமா? அன்றி தீமை தலை விரித்தாடுமா? மாதம் மும்மாரி பொழிந்து நாடு செழிக்குமா? என்றெல்லாம் வானிலை முன்னறிவிப்பைத் தருவது வருஷ பணியாகும். 'ஆருடம்' என்பற்கு ஏறியிருத்தல் என்பது பொருள். ஒருவர் தன் மனத்துள் ஒரு செயலை நினைத்துக் கொண்டு, தான் வந்த காரியம் இனிதே நிறைவேறுமா எனக்கேள்வி கேட்கும் பொழுது அப்பொழுதில் கேள்விகளின் நிலைகளைக் கொண்டும் பஞ்சபட்சி முதலியனவற்றைக் கொண்டும் பலனறியும் வழியை விளக்குவது ஆரூடம் ஆகும்.

மேற்கூறப்பட்ட மூன்று பிரிவுகளைக் கூறும் சில நூல்கள் பின் வருமாறு :
                          
                              பிரிவுகள்                       நூல்கள்


கணித ஸ்கந்தம் :
                        
                        சித்தாந்தம்       -         சூரிய சித்தாந்தம்
                        தந்த்ரம்             -         ஆர்யபட்டீயம்
                        கரணம்             -          கரணகுதூகலம்


ஜாதக ஸ்கந்தம் :
                       
                       ஹோரா           -         பிருஹத் பராசர ஹோரை 
                                                            சம்பு ஹோரா பிரகாசிகா
                       தாஜிகம்           -         யவனதாஜிகம்
                                                            தாஜிகமுக்தாவளி 
                                                            நீலகண்ட தாஜிகம்


ஸம்ஹிதா ஸ்கந்தம் :
                      
                       முகூர்த்தம்       -       காலவிதானம் 
                       வாஸ்து            -        சனத்குமாரவாஸ்து               
                       வருஷபணி     -        வருஷபணி சக்ரம் 
                       ஆருடம்           -        சரநூல் 
                                                           ஜினேந்திரமாலை
                                                           பஞ்சபட்சி



நாளை பார்க்கலாம்.
திருச்சிற்றம்பலம்.

              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக