ஞாயிறு, 6 அக்டோபர், 2013

Tension People : இறுக்க முக மனிதர்கள்.


     மனிதர்களுள் பல வகை உண்டு. சிலர் எப்போதும் சிரித்துக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பார்கள். சிலர் சிடுசிடு என முகத்தை வைத்திருப்பார்கள். சிரித்துக்கொண்டிருந்தால் நோய் அணுகாது என டாக்டர்கள் கூறுவார்கள். ஆனாலும் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு என பலவற்றிக்கும் மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.

     'டென்சன்' (Tension) தொடர்பான பிரச்னைகளை வரவழைத்துக் கொள்பவர்களை 'ஏ' வகை மனிதர்கள் என அழைக்கின்றனர். இந்த வகை மனிதர்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள். எறும்பைப் போல் கடினமாக உழைப்பார்கள். ரொம்ப மனசாட்சியோடும், திறமையாகவும் இருப்பார்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பார்கள்.


     நேரமே போதவில்லை என்று அவசர அவசரமாக வேலைகளைச் செய்வார்கள். சாப்பாடு கூட பல வேளைகளில் நின்று கொண்டே எடுத்துக் கொள்வார்கள். பேசும்போது சொல்லவே வேண்டாம். சொற்கள் அடுத்தடுத்து விழும். ஒரு சொல் முடிவதற்குள் மற்ற சொல் வந்து விடும். சில நேரங்களில் கடைசி சொல் முழுமை பெறாமலே போய்விடும்.

     மற்றவர்களும் 'பெர்பெக்ட்' (Perfect) ஆக இருக்க வேண்டும் என்று எதிபார்ப்பார்கள். மனம் விட்டு சிரிக்க மாட்டார்கள். வாகனத்தை இயக்கும்போது அதிவேகமாக இயக்குவார்கள். ஒருவித போராட்டத்துடன் நாட்களை கழிப்பார்கள்.



     இவர்களால் அமைதியாக இருக்க முடியாது. கூட இருக்கிறவர்களையும் அமைதியாக இருக்க விட மாட்டார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு நோய் வந்துவிடும். தலைவலி, ரத்தக்கொதிப்பு, வயிற்றுப்புண், ஜீரணக்கோளாறு போன்ற 'டென்சன்' சம்பத்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தொற்றி விடும் என்று கூருகிறார்கள் டாக்டர்கள்.



     பொருளாதார ரீதியாக வேகமான வளர்ச்சி பெற்றுள்ளது போல் தோன்றும். ஆனால் குடும்பத்தை இழந்து விடுவார்கள். நிறைவடைந்தது போல் தோன்றும். இது மட்டுமே நிறைவல்ல. காலம் கடந்த பின்தான் தெரியவரும். அதற்குள் எல்லாமே நம் கையை விட்டு போய்விடும். இதுதான் உண்மை. நாம் இதைப் பற்றிப் பேசினாலே நம்மைப் பைத்தியக்காரன் என்பார்கள். 

     இவர்கள் தங்களுடைய அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் சற்று அமைதியாக சுமார் ஒரு மணி நேரம் தூங்கி எழவேண்டும். ஆனால் இவர்களால் அது முடியாது. கேட்டால் நேரம் இல்லை என்பார்கள். தற்பொழுது மனம் அமைதியாக இருக்கும். மனம் அமைதியாக இருக்கும்போதே தான் இதுவரை எப்படி வாழ்ந்து வந்துள்ளோம், அதனால் வாழ்க்கையில் தான் சாதித்தது என்ன? மனம் எவ்வாறு உள்ளது? பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது? குடும்ப உறுப்பினர்களின் உணர்வு, நேசம், பாசம் எவ்வாறு உள்ளது? என்பதை சிந்தித்துப் பார்த்தாலே இனிமேல் எவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது தெளிவாகும். 


     மனம் செம்மையானால் மருந்தும் தேவையில்லை. மருத்துவரும் தேவையில்லை. மனைவி மக்களுடன் சுகமாக வாழலாம். இவரைப் போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக