குழந்தை பிறந்தவுடன் அதன் 'குவா, குவா' சத்தத்தை காது குளிர கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே குழந்தையின் பிறப்பை உறுதி செய்யும் பிறப்பு சான்றிதழை பெறும் முயற்சியில் இறங்குவது மிகவும் முக்கியம்.
சம்பந்தப்பட்ட மருத்துவமனை தரப்பில் இருந்தே 'இந்த பெற்றோருக்கு, இந்த தேதியில், இந்த நேரத்தில் எங்கள் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது' என்ற தகவல் பிறப்பு பதிவு அலுவலகத்திற்கு (கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) என சம்பத்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சி, நகராட்சி பதிவு அலுவலரிடம் உரிய முறையில் விண்ணப்பித்து சான்றிதல் பெறலாம். சென்னை உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் ஆன்லைன் மூலமாகவே கிடைக்கிறது.
வீடு அல்லது வேறு இடங்களில் பிறந்திருந்தால், அது குறித்து அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் (V.A.O.) கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். அவர் அதனை பதிவு செய்து கொண்டு சான்றிதழ் வழங்குவார்.
நகர்ப்புறத்தில் மருத்துவமனைக்கு வெளியே பிறந்தால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பிறப்பு பதிவு அலுவலகத்தில் இருந்துதான் சான்றிதழ் பெற முடியும்.
தற்போது குழந்தையின் பெயரை சான்றிதழில் பதியும் நடைமுறை உள்ளது என்பதால், குழந்தைக்கு பெயர் வைத்து, பெயரையும் கையோடு கொண்டு செல்வது நல்லது. பிறப்பு சான்றிதழை விரைவாக வாங்கி விடுவது மிகவும் நல்லது. பிற்பாடு நிறைய அலைக்கழித்தல்கள் தவிர்க்கப்படும்.
காலதாமதமாக சென்றால் வேலை சுலபத்தில் முடியாது. அது மட்டுமல்ல, பழைய பதிவுகளை புரட்டி பார்க்க தனியாக ஒரு கட்டணம் செலுத்த வேண்டி வரும். உடனடியாக கையோடு வாங்கினால் நேரவிரயம், பணம், பொருள் விரயம் இவை அனைத்தும் மிச்சப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக