ஞாயிறு, 10 ஜூன், 2012

யாவுமாய் நிற்பவன்!

10.                      தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்;
                           தானே சுடும் அங்கி, ஞாயிறும் திங்களும்;
                           தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்;
                           தானே தடவரை, தண்கடல் ஆமே.


     சிவபெருமானான தானே இவ்வுலகத்தைத் தாங்கிக் கொண்டு வான வடிவாய் விளங்குபவன். அப்பெருமானே சுடும் தீயாகவும், கதிரவனாகவும், சந்திரனாகவும் இருக்கின்றான். அவனே அருள்மழை பெய்யும் சத்தியுமாக இருக்கின்றான். அவனே அகன்ற மழையாகவும் குளிர்ந்த கடலாகவும் உள்ளான்.

     விளக்கம் : சிவபெருமானே எங்கும் நிறைந்து விளங்குகின்றான். இருநிலம் - பெரிய உலகம். அங்கி - அக்கினி, தீ. தையல் - சத்தி. தடவரை - பெரிய மலை. தண்கடல் - குளிர்ந்த கடல்.

வணங்கக் கூடியவர் எவரும் இல்லாதவன்!

9.                        பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
                           பின்னால் பிறங்க இருந்தவன்; பேர் நந்தி;
                           என்னால் தொழப்படும் எம்இறை; மற்று அவன் 
                           தன்னால் தொழப்படு வார்இல்லை தானே.


     இறைவன் பொன்னால் இயற்றப்பட்டார் போன்ற அழகிய சடை எனச் சொல்லும்படி பின்புறம் விளங்க விளங்குபவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். என்னால் அவன் வணங்கத் தக்கவன். உயிர்கட்கு எல்லாம் தலைவன். ஆயினும் அவனால் வணங்கத் தக்கவர் எவரும் இலர்.

     விளக்கம் :  புரிந்திட்ட - முறுக்கப்பட்ட; இயற்றப்பட்ட. பொன்சடை - பொன் போன்ற நிறம் பொருந்திய சடை. பின்னால் - பிற்பக்கத்தில். நந்தி - இறைவனின் திருப்பெயர். சிவபெருமானுக்கு மேற்பட்ட தெய்வம் இல்லை. ஆதலால் தன்னால் 'தொழப்படுவார் இல்லை' என்றார். சிவபெருமான் மற்றத் தேவர்க்கு மேலானவன் என்பது கருத்து.

இறைவன் வெம்மையன், குளிர்ந்தவன்!

8.                           தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்;
                              ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை;
                              சேயினும் நல்லன்; அணியன்நல் அன்பர்க்கு;
                              தாயினும் நல்லன்; தாழ்சடை யோனே.


     தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தீயைவிட வெம்மை உடையவன். (அடியார்க்கு) நீரைவிடக் குளிர்ந்தவன்; குழந்தையைவிட நல்லவன்; பக்கத்தே விளங்குபவன்; நல்ல அடியார்க்குத் தாயைவிட அருள் செய்பவன்; இவ்வாறிருந்தும் அப்பெருமானின் அருளை அறிபவர் எவரும் இலர்.


     விளக்கம் :  வெய்யன் - தீயர்க்குக் கொடியவன். தண்ணியன் - அடியார்க்கு அருள் செய்பவன். அவர்தம் அருள் பெரிது ஆதலால் அதை அறிவார் இலர் என்றார். சேய் - குழந்தை. இறைவனின் எளிமையைச் 'சேயினும் நல்லன்' என்றார். தாயினும் நல்லன் - தாயைவிட மிக்க அருள் உடையவன்.

தந்தையாகித் தாங்குவான்!

7.                         முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
                            தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் 
                            தன்னை, "அப்பா" எனில் அப்பனு மாய்உளன்
                            பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.


     பொன் போன்ற சகசிரதளத்தில் விளங்குபவன் சிவபெருமான். அவனே பழ்மையாகச் சமமாக வைத்து எண்ணப்படுகின்ற நான்முகன், திருமால், உருத்திரன் முதலிய மூவர்க்கும் பழமையானவன். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைமகன். அவன் தன்னை 'அப்பா' என்று அழைக்கின் வந்து தந்தையாகி உதவுபவன்.

     விளக்கம் : ஈசான மூர்த்தியே உலகம் தோன்றுவதற்கு முன்பும் உலகம் அளிவதற்குப் பின்பும் நிலைபேறாக விளங்குபவன். அவன் ஒளிவடிவமாய் விளங்குபவன்.

ஜோதிடம் - அறிமுகம் 2

     வேதகாலத்தையடுத்து வந்த இதிகாச காலத்தில் சோதிட சாத்திரத்தின் வளர்ச்சியைக் காண முடிகிறது. இக்காலத்தில் நிமித்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எடுத்துக் காட் டாக, ராமாயணத்தில் ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு மலர்ந்தபொழுது, அனுமன் தீமூட்டி அத்தீயை அவர்கள் நட்புக்குச் சாட்சியாக்கினான். அப்பொழுது வாலிக்கும் இராவணனுக்கும், சீதைக்கும் இடது கண் துடித்ததாகக் கூறப்பட் டுள்ளது. ஆண்களுக்கு வலது கண்ணும், பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் நன்மை பயக்கும். மாறாக ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெடுதல் உண்டாகும் என்பது நிமித்த நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்தாகும். எனவே இராமனுக்கும் சுக்ரீவனுக்கும் மலர்ந்த நட்பால் இராவணனுக்கும், வாலிக்கும், அழிவு நேரப்போவதையும், சீதைக்கு நன்மையுன்டாகப் போவதையும் இதனால் வால்மீகி அறிவித்துள்ளார்.
    
     அதேபோல் கனவுகளின் பலன்களும் அக்காலத்தில் அறியப்பட்டிருந்தது. சுந்தரகாண்டத்தில் சீதை அரக்கியர்களால் துன்புறுத்தப்பட்ட பொழுது அவ்வரக்கியர்களுள் ஒருத்தியான திரிசடை என்பவள், தான் கண்ட கனவினைக் கூறி அதனால் சீதைக்கு வரப்போகும் நன்மைகளையும், இராவணனுக்கும் மற்றும் அவன் கூட்டத்தாருக்கும் வரப்போகும் தீமைகளையும் எடுத்து ரைக்கிறாள். இதன் மூலம் கனவுகளின் மூலம் வரப்போகும் நிகழ்ச்சி நன்மை பயக்குமா இல்லையா என முன் கூட்டியே அறியும் பழக்கம் அக்காலத்தில் இருந்ததை அறியலாம்.

     இராமபிரான் பிறந்தபொழுது ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தனவாகக் கூறப்படுகிறது. இராமபிரான் பிறந்தநாள் (நட்சத்திரம்) புனர்பூசம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடக லக்கினத்தில் தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளமையால் இதிகாச காலங்களில் கோள்களின் உச்சம், நீசம், நட்சத்திரங்கள் எனப்படும் நாள்கள், அந்நாள்களுக்குடைய தேவதைகள், இலக்கினம் முதலிய வீடுகளைப் பற்றிய தெளிவான அறிவாற்றல் இருந்ததெனக் கூறமுடியும்.

     எச்செயல்களையும் தொடங்குவதற்கான நாள், நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்கவும் அறிந்திருந்தனர். அனுமன் இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டு திரும்பிய பின், இராவணன் மீது போர் தொடுக்க இராமன் எண்ணினான். அப்பொழுது இராமன் தனது சேனைத் தலைவர்களிடம் " இன்று உத்ரபல்குனி " நட்சத்திரம். இது எனக்கு நன்மை தரும் ஆறாவது நட்சத்திரமாகும். இன்று போருக்குக் கிளம்பினால் வெற்றி நிச்சயம் என்று கூறுகின்றான். இதன் மூலம் இதிகாச காலங்களில் தான் பிறந்த நாள் முதல், அன்றைய நாள் வரை எண்ணிப் பலன்களை முடிவெடுக்கும் '' தாராபாலன் '' எனும் நட்சத்திரப் பலன்களையும் நன்கு அறிந்திருந்தனர் என்பது கண்கூடு.


     இவ்வாறு வேதகாலத்தில் துவங்கிய 'வேதாங்க சோதிடம்' இதிகாச புராண காலங்களில் நன்கு வளர்ச்சி பெற்றுப் பின் இலக்கிய காலத்தில் முழு வளர்ச்சியையும் அடைந்தது.

     காசியப சம்ஹிதையின்படி சோதிடவியலின் முதல் நூலாசிரியர்களாகப் பதினெட்டுப் பேர்கள் போற்றப்படுகின்றனர்.


     சூர்ய :               பிதாமஹ :                    வ்யாஸ :                வசிஷ்ட :


     அத்ரி :              பராசர :                          கஸ்யப :                 நாரத :


     கர்க :                மரீசி :                             மனு :                      அங்கிர :


     லோமஸ :      பௌலச :                       ச்யவன :                 யவன :


     மரு :                சௌனக :


     எனும் பதினெட்டுப் பேர்கள் போற்றப்படுகின்றனர். இவர்கள் பெயரால் பதினெட்டுச் சித்தாந்தங்கள் காணப்படுகின்றன.


பதினெட்டுச் சித்தாந்தங்கள் பற்றி நாளை பார்க்கலாம்.
திருச்சிற்றம்பலம்.