சனி, 28 செப்டம்பர், 2013

Terminalia Chebula : அமுதம் போன்ற கடுக்காய்!


     நமது உடலில் நோய் தோன்ற, உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன் அளவில் இருந்து கூடுவதும், குறைவதுமே காரணம். உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சில எளிய வழிமுறைகளை கூறியுள்ளார்.

     ஒருவருடைய உடல், மனம், ஆத்மா ஆகிய மூன்றையும், தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய்க்கு அமுதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கடுக்காய் நமது வயிற்றில் உள்ள கழிவுகளை வெளித்தள்ளி ஒவ்வொருவருடைய பிறவிப்பயனை நீட்டித்து தருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். 

     நமது உடலுக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்படவேண்டும். அறுசுவைகளில் எந்த ஒரு சுவை கூடினாலும், குறைந்தாலும் நோய் தாக்கும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் அளவு மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவு பொருட்கள் துவர்ப்புச் சுவை அற்றதாகும். 

     நமது உணவில் அன்றாடம் கடுக்காயை சேர்த்து வந்தால், நமது உடலுக்கு தேவையான துவர்ப்பை பெற்றுவிடலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை நீக்கி விட்டு நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீடித்த வாழ்வைப் பெறலாம்.

     காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கிழவனும் குமரனாக மாறுவார் என்கிறார் திருமூலர். தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.


     எனினும் எதை சாப்பிட்டு வந்தாலும் அளவோடு இருந்தால் அமிர்தமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக