செவ்வாய், 23 ஜூலை, 2013

The holy month of Aadi : தெய்வீகமான ஆடி மாதம்!


      பட்டி, தொட்டி எங்கும் பிரபலமான மாதம். முளைப்பாலிகை ஏந்திப் பெண்கள் ஊர்வலமாகப் போய்க் கொண்டாடும் மாதம். சீறிப் பாய்ந்து சுழன்றோடும் ஆற்றில் வாலிபர்கள் வாகாகப் பாய்ந்து கும்மாளம் போடும் மாதம். வேப்பிலை உடையணிந்து வினைகளைத் தீர்க்கப்பெறும் மாதம். வளையல்களை நொறுக்கி அம்பிகை தன்னை வெளிப்படுத்திய மாதம்.

     கர்வத்தை நீக்கிய கருநீலவண்ணன் அரவணை மேல் படுத்து உறங்கிய மாதம். குபேரனின் பணியாளனது குஷ்ட ரோகத்தை நீக்கிய மாதம். துளசியின் மகிமையை உணர்த்தும் மாதம். கதிர்காமக் கந்தனுக்கு வேல் விழா கொண்டாடப்படும் மாதம். இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட அந்த மாதம் ஆடி மாதம்.

     தட்சிணாயனம், உத்தராயனம் என இரண்டு அயனங்கள் உண்டு. ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம். தை முதல் ஆனி முடிய உத்தராயனம் என்று சொல்லப்படும். இவற்றில், தட்சிணாயனம் மழைக்காலத்தின் தொடக்கத்தையும் உத்தராயனம் கோடைகாலத் தொடக்கத்தையும் குறிக்கும்.

     தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்தாள். பூமியில் வாழும் ஜீவராசிகள் எதுவுமே, மழை இல்லை என்றால் வாழ முடியாது. ஆடி மாதத் தொடக்கத்தில் காவிரியில் வெள்ளம் வரத் துவங்கும். ஆடி பதினெட்டு அன்று காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். 




     பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் பதினெட்டு பர்வங்கள், பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், சித்தர்கள் 18 பேர்கள், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகள், குடிமக்கள் 18 வகை, நெல் முதலான தானியங்கள் 18 எனப் பலவும் அந்த அடிப்படையிலேயே அமைந்தன. அதை அனுசரித்துத்தான், நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக் கரைகளில் 18 படிகளை அமைத்தார்கள். 

     உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும் காவிரி அன்னைக்கு ‘ஆடி பதினெட்டு’ என்று விழாவும் எடுத்தார்கள். ஆடி பதினெட்டு விழாவில் பெண்களே அதிகமாகப் பங்கேற்பார்கள். பத்து நாட்களுக்கு முன்னதாகவே நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, அத்துடன் சிறிதளவு மண்ணோ - எருவோ கலந்து, தண்ணீரும் தெளித்து வைப்பார்கள். விழாவுக்குள் அது முளைத்து, வளர்ந்து இருக்கும்.


     அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி பதினெட்டு அன்று பிற்பகல் நேரத்தில் முளைப் பாலிகையைக் கையில் ஏந்தியபடி, பெண்கள் ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். போகும் வழியில், சில முக்கியமான இடங்களில், முளைப்பாலிகைகளைத் தரையில் வைத்து விட்டு, பெண்கள் எல்லோரும் வட்டமாக நின்றி கும்மி அடிப்பார்கள். 

     இப்படி ஊர்வலமாகக் கிளம்பிய பெண்கள் ஆற்றங்கரையை அடைய, மூன்று மணி நேரமாகும். ஆற்றங்கரையில் சுத்தமான ஓரிடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் முன்னால் பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பச்சரிசி ஆகியவற்றைப் போட்டுத் தண்ணீரை ஊற்றிக் கலந்து, பிள்ளையார் முன்னால் வைப்பார்கள்.



     ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்து, சூடம் ஏற்றி வணங்குவார்கள். அது முடிந்ததும் முதிய சுமங்கலி ஒருவர், அங்குள்ள பெண்களுக்கெல்லாம் மஞ்சள் தடவிய நூல் சரடைத் தருவார். சிலர் அதைக் கழுத்திலும், சிலர் கையிலும் கட்டிக் கொள்வார்கள். அதன்பிறகு பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடிக் கும்மி, கோலாட்டம் என ஆடுவார்கள். ஆடி முடித்ததும் ஆற்றில் இறங்கி, அவரவர் தாம் கொண்டு வந்த முளைப் பாலிகைகளை சிறிது சிறிதாக எடுத்து ஆற்றில் விடுவார்கள். 


     சிறு கறுப்பு மணிகளால் ஆன கருகமணி, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தால் ஆன பனை ஓலைகளைச் சிறிய வட்டமாகச் சுற்றிச் செய்யப்பட்ட காதோலை ஆகியவற்றையும் ஆற்றில் விடுவார்கள். ‘நுரை பொங்கப் பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி அன்னையின் வருகையால் பயிர், பச்சைகள் எல்லாம் முளைவிட்டுத் தழைக்கப் போகின்றன. அவள் இப்போது மசக்கையாக இருக்கிறாள்’ என்ற ஐதீகத்தில், அவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன.

கார்த்திகை விரதம் எப்படி வந்தது?

     ஆறுதலை அருளும் ஆறு தலைத் தெய்வம், சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தபோது, அந்த ஆறு குழந்தைகளுக்கு கார்த்திகைப் பெண்கள் அறுவரும் பாலூட்டி வளர்த்தார்கள். அதைக்கண்டு சிவபெருமான் அவர்களுக்கு அருள்புரிந்தார். ‘‘கந்தனாகிய இவனுக்கு நீங்கள் பாலூட்டி வளர்த்ததால், கார்த்திகைப் பெண்களே! இவன் இனிமேல் கார்த்திகேயன் என அழைக்கப்படுவான்’’ என்றார்.

கந்தன் தனை நீர் போற்றிய 
கடனால் இவன் உங்கள் 
மைந்தன் எனும் பெயராகுக. கந்த புராணம்.

     ‘‘அது மட்டுமல்ல, கார்த்திகைப் பெண்களிடம் உங்கள் நாளான கார்த்திகை அன்று விரதம் இருப்பவர்களின் குறைகளை முழுவதும் நீக்கி நல்வாழ்வு அளிப்பேன். முடிவில் அவர்களுக்கு முக்தியும் அளிப்பேன்’’ என்று சிவபெருமான் வாக்குறுதியும் தந்தார்.

நுந்தம் பகலிடை இறைவன்
நோன்றான் வழிபடுவோர்
தந்தம் குறைமுடித்துப்
பரந்தனை நல்குவம் என்றான். என்கிறது கந்த புராணம். 

     விரத நாளன்று முருகப் பெருமானை பூஜை செய்து வழிபட வேண்டும். கந்த புராணம் படிக்க வேண்டும். அல்லது யாரையாவது சொல்லச் சொல்லிக் கேட்க வேண்டும். திருப்புகழ், சுப்பிரமணிய புஜங்கம் முதலான துதிப்பாடல்களைப் பாட வேண்டும். இவை தவிர, சப்பரம் ஒன்றை அலங்கரித்து, அதற்குள் பூ முதலான மங்கலப் பொருட்களை வைத்து ஆற்றில் மிதக்க விடும் பழக்கமும் உண்டு. 

     சிலர் அந்தச் சப்பரங்களில் புது வேட்டி, துண்டு, சில்லரைக் காசுகள் என வைப்பதும் உண்டு. (மிகச் சிறிய தேர் போலவே இருக்கும் அந்தச் சப்பரம்) வெள்ளத்தில் சுற்றிச் சுழன்று வரும் அந்த சப்பரத்தை, இளைஞர்கள் நீரில் நீந்திப் போய்ப் பிடிப்பார்கள். இந்த ஆடி பதினெட்டு விழாவின் நிறைவாக, பிள்ளையார் முன்னால் வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து, அதில் இருக்கும் சர்க்கரையுடன் சேர்ந்த பச்சரிசியை வந்திருப்பவர்களுக்கு எல்லாம் கொடுப்பார்கள்.


     சிலர், தேங்காய் சாதம், புளிசாதம், தயிர் சாதம் முதலானவற்றைக் கொண்டுபோய் ஆற்றங்கரையிலேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டுத் திரும்புவார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளால் குடும்ப ஒற்றுமை, பொது ஒற்றுமை, நன்றி மறவாமை, மகிழ்ச்சிகரமான வாழ்வு முதலானவை மக்களிடையே பரவின. கடலோடு, வேற்றுமை இன்றி ஒன்றாக நதி கலப்பதுபோல கணவனும் மனைவியும் வாழ்ந்தார்கள்.

ஆடியும் பெரியபாளையமும்!

     ஆடி மாதம் வந்துவிட்டால் போதும். வெல்லத்தைச் சுற்றி ஈக்கள் மொய்ப்பதைப் போல, பெரிய பாளையத்தைச் சுற்றிக் கும்பல் பொங்கி வழியும். அங்கே, அம்பிகையான பெரியபாளையத்தம்மன் ‘அன்னை பவானி’ என்ற திருநாமத்தில், கிழக்கு முகமாகச் சந்நதி கொண்டு எழுந்தருளி இருக்கிறாள். 

     அதிலும் ஒரு புதுமை! வலதுகையில் சக்கரமும் இடதுகையில் சங்கும் மற்றொரு கையில் வாளும் நான்காவது கையில் அமுதக் கலசமும் கொண்டு அம்பிகை திருக்காட்சி அளிக்கின்றாள். இது, வேறு எங்கும் பார்க்க முடியாத அற்புதமான திருக்கோலம். இப்படி அபூர்வமான திருக்கோலம் கொண்ட பெரியபாளையத்தம்மன் வெளிப்பட்டதிலும் ஓர் அதிசயம் உண்டு. 

     பெரியபாளையம் ஒரு காலத்தில் எல்லாபுரம் எனப் பெயர் பெற்று இருந்தது. இப்போது அம்மன் கோயில் இருக்கும் இடத்தில், ஒரு சில மரங்கள் மட்டுமே இருந்தன. ஒருநாள், அங்கு வந்த சில வளையல் வியாபாரிகள், ஓய்வெடுப்பதற்காகத் தங்கள் வளையல்களை எல்லாம் தங்கள் தலைமாட்டிலேயே வைத்துக்கொண்டு தூங்கினார்கள். முழித்து எழுந்ததும், அவ்வளவு பேர்களும் அதிர்ந்தார்கள். தலை பக்கத்தில் அவர்கள் வைத்திருந்த வளையல்கள் எல்லாம் தூள் தூளாக நொறுங்கிப் போயிருந்தன.

     வியாபாரிகள் எல்லோரும் பயந்துபோய் நடுக்கத்தோடு, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கே சுயம்பு (தானாகவே உண்டான) அம்பிகை வடிவம் தெரிந்தது. அதை வியாபாரிகள் ஒரு கடப்பாரையைக் கொண்டு தோண்டிப் பார்த்தார்கள். அப்போது சுயம்பு மேலிருந்து அப்படியே ரத்தம் கொப்பளித்தது. அன்னை பெரியபாளையத்தம்மன் வெளிப்பட்ட வரலாறு இது. இந்த அன்னைக்கு செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தம், தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைக்கும் சக்தி படைத்தது. இத்திருக்கோயிலில், வேப்பஞ்சேலை நேர்த்திக் கடன் என்பது மிகவும் முக்கியமானது. இதன் பின்னணியிலும் ஓர் அற்புதமான வரலாறு உண்டு. 

     ஒருசமயம், மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது. காற்றும் கடுமையாக வீசியது. மின்னல் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது. இடி இடித்து அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியது. மீனவப் பெண் ஒருத்திக்கு அந்தச் சூழல் கலக்கத்தை அதிகப்படுத்தியது. அவள் தவித்தாள்; கைகளைக் கூப்பிக் கண்களை மூடினாள். 

     ''அம்மா! பெரியபாளையத்தம்மா! உன்னை விட்டால் எனக்கு வேறு யார் துணை? என் கணவர் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் போயிருக்கிறார். இந்தப் புயல் மழையில் சிக்காமல், அவர் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும். காப்பாற்று தாயே! அவர் திரும்பியதும் அவர் உடம்பில் வேறு எந்த ஆடையும் இல்லாமல் வேப்பிலை ஆடைக்கட்டி உன்னை வலம்வரச் செய்கிறேன் அம்மா!'' என்று மனம் உருகி வேண்டினாள்.


     தூய்மையான பிரார்த்தனை பலிக்காமல் போகுமா? மீனவப் பெண்ணின் கணவர் நல்லபடியாக வீடு திரும்பினார். அவர் மனைவி, கணவருக்கு வேப்பிலை ஆடை கட்டி அம்மனை வலம்வரச் செய்து, தன் வேண்டுதலை நிறைவேற்றினாள். அன்று முதல், துயரத்தில் அகப்பட்டுத் தவிக்கும் மக்கள், அங்கே வேப்பிலை ஆடை பிரார்த்தனையை மேற்கொள்வது வழக்கத்தில் வந்தது. ஆடி மாதத்து முதல் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கப்படும் பெரியபாளையத்து அம்மனின் திருவிழா தொடர்ந்து, பதினான்கு வாரங்கள் நடைபெறுகிறது. எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் தீராத நோய்கள், பெரியபாளையத்து அம்மனுக்கு நேர்ந்து செய்யும் வேப்பஞ்சேலைப் பிரார்த்தனையால் குணமாவதை, இன்றும் நாம் நேரிடையாகக் காணலாம், இது சத்தியம்.

அம்மனுக்கு வேப்பஞ்சேலை ஏன்?

     ஆடி மாதம் வந்தாலே அம்மன் கோயில்களில் விசேஷமான வழிபாடுகளோடு ஒரே கோலாகலமாக இருக்கும். ஏன்? மா முனிவரான ஜமதக்கினியும் அவர் மனைவி ரேணுகாதேவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் தன்னுவன், அனுவன், விஸ்வாவசு, பரசுராமன். 

     நன்றாக வாழ்ந்துகொண்டிருந்த அவர்கள் குடும்பத்தில் ஒரு புயல் வீசியது. ஜமதக்கினி முனிவரிடம் ஏற்பட்ட விரோதத்தால், கார்த்தவீர்யார்ஜுனனின் பிள்ளைகள் ஜமதக்கினி முனிவரைக் கொன்று விட்டார்கள். ரேணுகாதேவியால் துயரத்தைத் தாங்க முடியவில்லை. கணவரை இழந்து வாழ விரும்பாமல், அவள் இறக்கத் துணிந்து தீயில் விழுந்தாள்.

     அவள் தீயில் விழுந்ததும் அதைப் பார்த்த தேவேந்திரன், வருணபகவானை ஏவி மழை பொழியச் செய்தான். தீ அணைந்தது. ஆனால் அதற்குள், ரேணுகா தேவியின் ஆடைகள் முழுவதுமாக எரிந்துபோய், அவள் உடம்பில் தீக்கொப்புளங்கள் உண்டாகி விட்டன. என்ன செய்வது? 

     உடனே உடம்பில் ஆடை ஏதும் இல்லாத அந்த நிலையில், அங்கே வனத்தில் இருந்த வேப்பந்தழைகளை எடுத்து, ஆடையாகச் சுற்றிக் கொண்டாள். (இதை முன்னிட்டே இன்றும் வேப்பஞ்சேலை அணிந்து மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் வழக்கம் நடந்து வருகிறது.) 

     வேப்பஞ்சேலை அணிந்து வெளியே கிளம்பிய ரேணுகாதேவிக்குப் பசித்தது. பக்கத்தில் இருந்த பகுதிக்குப் போய் அங்கு இருந்த மக்களிடம், ‘‘எனக்குப் பசிக்கிறது. சாப்பிட ஏதாவது கொடுங்கள்!’’ எனக் கேட்டாள். ஆனால் அங்கு இருந்தவர்களோ, ‘‘அம்மா! உங்களைப் பார்த்தால், அந்தணப் பெண் போலத் தெரிகிறது. நாங்களோ தாழ்த்தப்பட்டவர்கள். எங்கள் உணவை உங்களுக்குக் கொடுக்கக் கூடாது. அதனால், உணவுக்கு வெல்லம், இளநீர், பச்சரிசி மாவு, பானகம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லி உபசரித்தார்கள். (இதையொட்டியே இப்பொருட்களைக் கொண்டு, மாரியம்மன் கோயில்களில் கூழ் வார்க்கப்படுகிறது.) அவர்கள் தந்தவற்றால் ரேணுகாதேவி பசி ஆறினாள். 

     அதன்பிறகு அவள், சலவைத் தொழிலாளர்கள் வசிக்கும் வீதிக்கு வந்து, அவர்கள் அளித்த ஆடைகளை அணிந்தாள். ஆனாலும், ரேணுகா தேவியால் கணவர் இறந்துபோன துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் கண்ணீர் வடித்தாள். அப்போது, தேவர்கள் ரேணுகாதேவியின் முன்னால் தோன்றி, அவள் துயரத்தைக் குறைத்தார்கள். கூடவே, சிவபெருமானும் தரிசனம் தந்தார். 

     ‘‘ரேணுகா தேவி! நீ சக்தி தேவியின் அம்சமாக இருப்பவள். பூமியிலேயே இருந்து, மனிதர்களைத் தீமைகளில் இருந்து காப்பாற்றும் வல்லமையை உனக்கு நான் அளிக்கிறேன். நீ கொண்ட கொப்புளங்கள், உலகத்தில் இருக்கும் மக்களுக்கு அம்மைக் கொப்புளங்களாக ஆகும். அந்தத் துயரம் நீங்க அவர்களுக்கு, நீ அணிந்த ஆடையான வேப்பிலையே மருந்தாகும்.

     நீ சாப்பிட்ட வெல்லம், இளநீர், பச்சரிசி மாவு, பானகம் முதலானவைகளை, மக்கள் உனக்கு நைவேத்தியமாகப் படைப்பார்கள். உன்னை வழிபடுபவர்களின் துயரத்தை நீக்கு!’’ என்று சொல்லி மறைந்தார். அதன்பிறகே ரேணுகாதேவிக்கு ‘முத்துமாரி’ என்ற திருநாமம் உண்டானது. உடம்பில் தோன்றும் முத்து முத்தான அம்மைக் கொப்புளங்களை நீக்கி அருள் செய்வதால் அப்பெயர். இந்த நிகழ்ச்சி நடந்தது. மழைக்காலத் தொடக்கமான ஆடி மாதத்தில்! அதனால்தான் மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் வேப்பஞ்சேலை பிரார்த்தனையும் கூழ் வார்ப்பதும் நடைபெறுகின்றன.


கொழும்பு கதிர்காம ஆடி வேல் விழா! 

     கொழும்பு நகரில் ஆடி வேல் விழா என்று, மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தொடங்கப்பட்டபோது, ஆடி மாதத்தில் கம்பளை, காலி, ரத்தினபுரி, வதுளை, கண்டி, கொழும்பு முதலான இடங்களிலிருந்து கதிர்காமத்திற்கு வேல் கொண்டு செல்லப்பட்டு மாபெரும் விழாவாக நடைபெற்றது. 

     பிற்காலத்தில் கதிர்காமத்தில் ஏற்பட்ட கொள்ளை நோயாலோ, கலகத்தாலோ அந்த நிகழ்ச்சிக்கு அரசாங்கம் தடை விதித்தது. அன்று முதல் கொழும்பில் இருந்து கொண்டு வரப்படும் வேலை மட்டும் வைத்து, கதிர் காமத்திலேயே ‘ஆடி வேல் விழா’ கொண்டாடுகிறார்கள்.


     இதையொட்டி வேல் தாங்கிய விமலனான முருகப் பெருமானுக்கு உண்டானதே ஆடிக்கார்த்திகை விழா. முருகப் பெருமானுக்கு, திதிகளில் சஷ்டி திதி, கிழமைகளில் வெள்ளி, நட்சத்திரங்களில் கார்த்திகை என விரதங்கள் உண்டு. நட்சத்திர விரதமான கார்த்திகையில் ஆண்டு முழுவதும் வரும் எல்லா கார்த்திகைகளும் சிறப்பு வாய்ந்தவைதான். 

     ஆனால், தட்சிணாயனம் துவங்கும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக்கார்த்திகையும் உத்தராயனம் துவங்கும் தை மாதத்தில் வரும் தைக் கார்த்திகையும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அந்த இரண்டிலும் மழைக்காலம் துவங்கும் மாதமான ஆடிமாதக் கார்த்திகையே முருகப் பெருமானுக்கு மிகவும் சிறப்பானது.

நன்றி : தினகரன் நாளிதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக