ஞாயிறு, 21 ஜூலை, 2013

கல்விக் கடவுள்! அற்புத மனிதன்!


     சமீபத்தில் இரு வேறு அனுபவங்கள். முதல் நிகழ்வு ஓர் ஆன்மிகப் பெரியவர் நடத்திய கல்வி யாகம், வேள்வி, பூஜை, வழிபாடு. இரண்டாம் நிகழ்வு இன்னொரு பெரியவர் நடத்திய கல்வி உதவித் தொகை வழங்கும் திருவிழா, கல்வி யாகம், ஞான வேள்வி, அறிவுப் பூஜை, வழிபாடு. ஆன்மிக யாகம், அதற்கே உரித்தான அத்தனை அடையாளங்களோடும் பரபரப்போடும் ஆன்மிகத் தேடலோடும் நடந்தது.

     அந்த இடத்தில் காற்றில் கலந்திருந்த வாசனை, புனிதத் தன்மை, மந்திரங்களின் இசைலயம், யாக நெருப்பில் ஆகுதி செய்யப்பட்ட நெய், பழங்கள், பட்டாடைகள், நவதானியங்கள் இவற்றின் கலவை மணம் என்று தேவலோகம் போன்றிருந்தது அந்த வளாகம். இந்த யாக வாசனை எப்போதுமே என்னை நெகிழச் செய்யும். 

     மனசைக் கரையச் செய்யும். எனக்குள் ஏதோ ஒன்றைத் தேடி உருகச் செய்யும். அன்றைக்கும் செய்தது. எல்லாமே அந்த ஆன்மிகப் பெரியவர் வரும்வரைதான். அவர் வந்தபின் அந்த இடம் மாறிப் போனது. சத்தம் கூடிப் போனது. அதட்டல், அலட்டல் என உருமாறிப் போனது. 

     என்னதான் செய்தார் அவர்? ஒன்றுமில்லை. தன் பின்னால் பவ்யமாக, முதுகு வளைத்து, வாய் பொத்தி, ஏதும் பேசாமல் மரியாதையோடு வந்த சிஷ்யர்களை அதட்டிப் பேசுவதும் மற்றவர்களுக்கு உத்தரவு போடுவதும் அலட்டிப் பேசுவதும் செய்தார்.

     முற்றும் துறந்தவர் எனச் சொல்லமுடியாத அளவிற்குப் பட்டாடை, தங்க ஆபரணங்கள், ருத்திராட்சம் கோத்து மினுமினுத்த பொன்நகைகள், கொஞ்சம் அளவு பெரிதான தொப்பை என்றிருந்த அவரது அலப்பறையைச் சகிக்க முடியாமல் மனசு சுருங்கியது எனக்கு. 

     வேள்விப் பகுதி முழுக்க சுற்றி வந்து எல்லோருக்கும் சில பல உத்தரவுகளைச் சொல்லிப் பின் குளிர்ப்பதன மூட்டிய வெளிநாட்டுப் படகுக் காரில் கிளம்பி விட்டார். அதன்பின்தான் சிஷ்ய கோடிகள் பெருமூச்சு விட்டனர். நானும் நிதானமாக மூச்சு விட்டேன். ஆன்மிகத் தலைவர், ஆன்மிகப் பெரியவர் தரிசனம் பெற்ற மகிழ்ச்சியில் பக்தர்களும் நிம்மதியானார்கள்.


     இன்னொரு நிகழ்வில் நான் சந்தித்த பெரியவர், சாமியார் இல்லை. மடாதிபதி இல்லை. பூஜை, புனஸ்காரம், மந்திரம் என்றிருக்கும் மனிதரும் இல்லை. ஆனால், அவரை தெய்வமாகத்தான் கொண்டாடுகிறார்கள் இங்கே. கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். கண்ணீர் மல்கக் காலில் விழுந்து வணங்கு கிறார்கள். அவரைப் பார்த்தாலே போதும். வெளிச்சம் வரும், விடியல் வரும், வாழ்க்கை வரும் என்று நம்புகிறார்கள். இத்தனையும் அந்தப் பெரியவர் அதிகம் பேசாமலே செய்கிறார். கடந்த இருபத்து நாலு வருஷமாக என்பதால்தான் அவர் தெய்வமாகியிருக்கிறார் பலருக்கும். 

     அவரது சந்திப்பு தெய்வ தரிசனம். அவரது வார்த்தை அருளாசி. அவரது பார்வை கருணைப் பார்வை. அவரிடம் காவி வேட்டி இல்லை. கமண்டலம் இல்லை. ஆனால், அவரை விடவும் துறவு மனசு வேறு யாரிடமும் இருக்க முடியாது. அவரிடம் நீளமான பிரசங்கங்கள் இல்லை. அறிவுரை, அறவுரை ஏதும் இல்லை. போதனை இல்லை. ஆனால் அவருடைய வாழ்க்கையே ஞான உபதேசம்தான். 

     கடவுளை மனித வடிவில் உணரலாம் என்றால் இந்தப் பெரியவர் அப்படித்தான். அவரது ஆறடி உயரம். நீள நீளமான கைகள். அள்ளிக் கொடுத்து சந்தோஷிக்கும் மனசு. கோபம், அலட்டல் தெரியா குணம். இப்படி ஒருத்தரை இந்தக் காலத்தில் பார்க்க முடியுமா? 

     முடியாது என்றுதான் நானும் நினைத்தேன், இவரைச் சந்திக்கும் முன். கோவையில் பெரியவரைச் சந்தித்து, அவரின் கல்விச் சேவையைக் கண்ணாரக் கண்டு சிலிர்த்து, நெகிழ்ந்து நெக்குருகிப் போனேன். அன்றிலிருந்து நம்புகிறேன், கல்வித் தெய்வம் சரஸ்வதியின் ஆண் அவதாரம் இவர்தான் என்று. 


     அந்த இரு நாட்களிலும் கொங்குதேசம் முழுவதுமே கோவை கொடீசியா அரங்கிற்கு, அதிகாலை ஆறு மணிக்கே கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள் கூடவே பெற்றோர்கள் என்று வந்தது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை, பரிசுத் தொகை, பரிவுத் தொகை, இலவச உயர்கல்வித் தொகை என்று வழங்கப்பட்டன, வழங்கப்பட்டன, வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

     பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில், உயர்மதிப்பெண் பெறும் யார் வேண்டுமானாலும் இதைப் பெறலாம். யாராவது கல்விக் கட்டணத்துக்கு உதவ மாட்டார்களா, கை கொடுத்துக் கரை சேர்க்க மாட்டார்களா என ஏங்கும் எந்த மாணவனும் மாணவியும் இவரிடம் உதவித்தொகை பெறலாம். 

     பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் இது பொருந்தும். தகுந்த மதிப்பெண்தான் ஒரே தகுதி. மாநிலம் முழுக்க உள்ள தனியார், அரசுப்பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆசை தீரப் படித்துப் பணியில் சேரும் வரை உதவித்தொகை தருகிறார், அந்தப் பெரியவர்.


     அன்றைய கல்வித் திருவிழாவில் லட்சக்கணக்கில் மாணவ, மாணவிகள் மதிப்பெண் பட்டியலையும் நம்பிக்கையையும் சுமந்து, பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் சுமந்து, ஒரு பெரியவரின் வள்ளல் குணத்தால் கல்விக் கனவு நனவாகும் நெகிழ்ச்சி அங்கே பரவலாக நிலவியது. காலை, மதியம், மாலை வேளைகளில் அத்தனை பேருக்கும் வயிறு வாடாமல் உணவு கொடுத்து, கல்வித் தொகையும் கொடுப்பது சாதாரண விஷயமா? அத்தனை லட்சம் பேர்களின் மனசையும், வயிறையும் நிம்மதியால் நிறைப்பது, சாதாரண விஷயமா? மந்திர உச்சாடனம் இல்லாமல் ஆன்மிகம், யாகம் இல்லாமல் ஞானவேள்வி இதுதானே?

     அசாதாரணம், இந்தப் பெரியவருக்குச் சாதாரணம்தான். இருபத்து நாலு வருஷமாகத் தொடர்ந்து இந்தக் கல்விச் சேவை. ஒவ்வொரு ஆண்டும் மாண வர் கூட்டமும் அதிகமாகிறது. உதவித் தொகையும் அதிகமாகிறது. பெரியவரின் உற்சாகமும் அதிகமாகிறது. கூட்டமோ கூட்டம் என்றாலும் வண்டி வாகனங்கள் என்றாலும், ஒரு குழப்பம் இல்லை, தள்ளுமுள்ளு இல்லை, வாக்குவாதம் இல்லை, சண்டை சச்சரவு இல்லை.

     மிகத் துல்லியமான திட்டமிடல். மிக உயர்வான மரியாதை, கௌரவம் இவற்றோடு அளிக்கப்படும் உதவி, இந்தக் கலிகாலத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது, பெரியவரின் ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை மூலமாக. அவர் ஸ்ரீ விஜயலட்சுமி பொது நல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி அவர்கள்.

     கோயில் உண்டியலில் போடவில்லை. இளைய சமுதாயத்தின் வாழ்வில் விளக்கேற்றிக் கல்வி மூலம் வாழ்வைச் சாத்தியமாக்குகிறார், சத்தியமாக்குகிறார் பெரியவர். இதைவிடக் கோயில் திருப்பணி இருக்க முடியுமா? இதை விட ஆன்மிகப் பணி இருக்க முடியுமா? இதை விடத் துறவு இருக்க முடியுமா?

     ‘‘ஏழைக்கு இறங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான்’’ என்கிறது விவிலியம். பெரியவர் அப்படித்தான். வெள்ளை வேட்டி சட்டை அணிந்து, எளிமை, பணிவின் உச்சமாக இருக்கும் அவர் தரும் கல்வித் தொகை, இந்த வருஷம் 100 கோடி ரூபாய். அடுத்த வருட இலக்கு 125 கோடி!

- ஆண்டாள் பிரியதர்ஷினி - நன்றி : தினகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக