வெள்ளி, 19 ஜூலை, 2013

Betel Leaf : வெற்றிலை ( பசும் தங்கம் )


     பசும் தங்கமா அப்படி ஓன்று இருக்கிறதா? அது எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்களா?  நம் வாழ்வில் கலந்த 'வெற்றிலை'தான் 'பசும் தங்கம்.' நம் ஊரில் திருமணங்கள் இது இல்லாமல் ஆரம்பிக்காது. இது கொடுக்காமல் முடிவடையாது. விருந்துகளுக்குப் போனால் கடைசியில் இதை போட்டால்தான் முழுதிருப்தி. பிரசவித்த பெண்ணை தினமும் இதை கட்டாயம் சாப்பிட சொல்லி வற்புறுத்துவார்கள்.

     இந்த பச்சைத் தங்கம் இல்லாமல் எந்த விழாவுமே சோபிக்காது. பாக்கு, மஞ்சள் இவற்றுடன் இதுவும் ஒரு மங்கலமான பொருள். தாம்பூலம் இல்லாமல் ஏது பண்டிகை? சுபநாட்களில் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வாருங்கள் என்று அழைக்கிறோமல்லவா? 'பான்', 'பான் கா பத்தர்' என்றும் இந்தி மொழியிலும், வெத்தில என்று மலையாளத்திலும், விளேதெலே என்று கர்நாடகாவிலும் குறிப்பிடப்படும் நம்மூர் வெற்றிலைதான் பச்சைத் தங்கம்.

     இதன் மருத்துவ குணத்தாலேயே இது பச்சைத்தங்கம் என்று போற்றப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி தெற்கு ஆசியா முழுவதும் இதன் மருத்துவ குணம் தெரிந்து இதனைப் பயன்படுத்துகின்றனர். இது கொடி வகையைச் சேர்ந்தது. தரையில் படரும் அல்லது பாக்குமரத்தையோ, பனைமரத்தையோ சுற்றிப் படரும். இதைப்போல கொழுகொம்பு தேவைப்படும்போது மட்டுமே பற்றி படர நுண்ணிய வேர்கள் இந்தக் கொடியில் தோன்றும்.


     வெற்றிலை மங்கலமான பொருளாகவும் பவித்ரமான பொருளாகவும் கொண்டாடப்படுகின்றது. சுண்ணாம்பு, பாக்கு முதலியவற்றுடன் வெற்றிலையைப் போடுவது ஜீரணத்திற்கு உதவுவதுடன், மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும், வாய்க்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.

     சிலர் சுண்ணாம்பு என்று சொல்லமாட்டார்கள். மூணாது (அதாவது வெற்றிலையுடன் சேர்க்கும் மூன்றாவது பொருள்) என்று கூறுவார்கள். வாயையும் உதட்டையும் சிவக்க வைக்கும் இந்தக் கலவை ஆரோக்கியமான லிப்ஸ்டிக்! பற்கள் பழுப்புக் கலர் அடையாமல் இருக்க பல் துலக்குவது அவசியம். வெற்றிலையை வேறு வேறு மூலிகைகளுடன் சேர்த்துப் பல நோய்களுக்கும் மருந்தாகக் கொடுக்கலாம்.


     வெற்றிலையை கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி அந்த நீருடன் மிளகு சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும். இரவு படுக்கப்போகும் முன் 2தேக்கரண்டி வெற்றிலைச்சாறுடன் ஓமம் சேர்த்துக் குடித்தால் ஆர்த்ரைட்டிஸ் மற்றும் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். 

     பிரசவித்த பெண் வெற்றிலை போடுவதால் பால் நன்றாக சுரப்பதுடன் பசி, தாகம் இவையும் அடங்கும். வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்வது எலும்புகளுக்கு உறுதி அளிக்கிறது. அந்தக்கால பாட்டிமார்கள் திடமாக இருந்ததற்கு தினமும் வெற்றிலை போட்டதும் ஒரு காரணம்.

     ரத்தக் காயங்களும், சிராய்ப்புகளும் குணமாக வெற்றிலையை நன்கு கசக்கி காயங்களின் மேல் வைத்து அதன் மேல் இன்னொரு வெற்றிலையை வைத்துக் கட்டுப்போட்டால் இரண்டு நாட்களில் காயங்கள் மறையும்.


     இரவு நேரத்தில் வெற்றிலையுடன் ஏலக்காய், லவங்கம், வாசனைப்பாக்கு, சுண்ணாம்பு முதலியவை சேர்த்தப் போடுதல் பாலுணர்வை தூண்டும் என்பது காலம்காலமாய் இருந்து வரும் நம்பிக்கை.

     புகையிலையுடன் வெற்றிலையைச் சேர்த்துப் போடுவதால் வாயில் புற்றுநோய் ஏற்படுகிறது. அதனால் புகையிலை இல்லாத வெற்றிலையை மட்டுமே தினமும் உண்ணவேண்டும். நாக்கு தடித்து, பேச்சு சரியாக வராது என்பதால் குழந்தைகள் வெற்றிலை உண்பதை தவிர்க்க வேண்டும்.

     நல்லெண்ணெயுடன் ஓமம், வெற்றிலையைச் (அல்லது வெற்றிலைக்காம்பு) சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தடவிக் குளித்தால் குளிர்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கும். சின்னஞ்சிறு குழந்தைகள் இரண்டு மூன்று நாட்கள் மலம் கழிக்காமல் போனால் வெற்றிலைக் காம்பை விளக்கெண்ணெயில் தோய்த்து ஆசன வாயில் சொருகினால் மலம் வெளியே வந்துவிடும்.


     முக்கியமான ஒரு விஷயம் வெற்றிலையை உண்ணும்போது நடு நரம்பை எடுத்துவிட வேண்டும். அந்தக்காலத்தில் எல்லோர் வீட்டிலும் 'வெற்றிலை செல்லம்' என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு 'வெற்றிலை பாக்கு பெட்டி' கட்டாயம் இருக்கும். வெற்றிலை, பாக்கு, (அப்போதெல்லாம் சீவல் அல்லது கொட்டைப்பாக்குதான். அதை வெட்ட பாக்குவெட்டி - பாக்குவெட்டிக்கும் இந்த செல்லத்தில் இடம் இருக்கும்.) மூணாது வைக்க என்று தனித்தனி அறைகளுடன் அழகாக இருக்கும் இந்தபெட்டி.



     இப்போது யாருக்கும் பொருந்தி உட்கார்ந்து சாப்பிடவே பொழுதில்லை. வெற்றிலை எங்கே போடுவது? கையேந்திபவனில் சாப்பாடு, பக்கத்து பீடாக்கடையில் கல்கத்தா 'மெட்டா பான்', அவ்வளவுக்குத்தான் மக்களுக்கு நேரம் இருக்கிறது. தற்போதுள்ள இயந்திரமய வாழ்வில் யாரைக் குறை கூறுவது. தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது ஒவ்வொரு தனி மனிதனுடைய கடமை என்று தெரிந்து கொண்டோமானால் அதுவே நாம் எடுத்து வைக்கும் ஆரோக்கியத்தின் முதல் காலடி. மருத்துவமனைகளை மறந்து விடலாம்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக