வியாழன், 16 மே, 2013

ASTROLOGY - 42 : அயனங்கள்.


     ஆண்டுகளுக்கு அடுத்து அயனங்கள். அவைகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

அயனங்கள் இருவகைப்படும். அவையாவன : 
                                       1. உத்தராயனம். 2. தட்சிணாயனம்.

1. உத்தராயனம் :

     தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மற்றும் ஆனி ஆகிய ஆறு மாதங்களைக் கொண்டது உத்திராயனம் ஆகும்.

உத்தராயனத்தின் அதிதேவதையின் ஸ்வரூபம் :

     வெண்மை நிறம் கொண்டவர், அகன்ற கண்களை உடையவர், தங்கம் மற்றும் முத்துக்களாலான அணிகளை அணிந்திருப்பார். வலது கையில் புத்தகம் காணப்படும். இடது கையில் சூரியனைப் போன்ற வடிவமுள்ள ஆயுதம் கொண்டவர். 

உத்தராயன தேவதையைப் பணிவதால் உண்டாகும் பலன் :

     முக்தியைத் தருவார். மகிழ்ச்சியை அளிப்பார். அழியாப் புகழையும் தருவார். 


உத்தராயனம் தேவர்களுக்குப் பகல் காலமாகும்.
உத்தராயனாபிமானி தேவதை : சோமன் (சந்திரன்) 
தேவதையின் நிறம்                  : வெண்மை   

உத்தராயனத்தில் பிறந்தவர்களின் பலன்கள் :

     மனத் தெளிவு மிக்கவன், மனைவி மக்களால் எல்லா சுகங்களையும் துய்ப்பவன், நீண்ட காலம் வாழ்பவன், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமையுள்ளவன், மற்றவரையும் காக்கும் தன்மை கொண்டவன், தாராள மனம் உள்ளவன், பயந்த குணமுடையவன்.

உத்தராயனத்தில் செய்யத் தக்கவை :

     தேவதைகளைப் பிரதிஷ்டை செய்தல், தோட்டம் அமைத்தல், குளம் வெட்டுதல், புதுமனை புகுவிழா செய்தல், திருமணம் செய்து கொள்ளல் முதலியன செய்யலாம். இவைகளை தட்சினாயனத்தில் செய்தால் கேடு விளையும் என நூல்களில் கூறப்பட்டுள்ளது.


2. தட்சிணாயனம் :

     ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய ஆறு மாதங்களைக் கொண்டது தட்சிணாயனம் ஆகும்.

தட்சிணாயனத்தின் அதி தேவதையின் ஸ்வரூபம் : 

     பச்சை நிற மேனியுடன், குறைந்த பார்வையை உடையவரும், மஞ்சள் நிற ஆடையை உடுத்தியவரும், அக்னி குண்டம், நெற்பயிர், மடக்கு, எருக்கம்பூ இவைகளை எப்பொழுதும் கைகளில் கொண்டுள்ளவராக காணப்படுவார்.

தட்சிணாயன தேவதையைப் பணிவதால் உண்டாகும் பலன் : 

     குறைவற்ற செல்வத்தையும், தானியங்களையும், நாம் செய்யும் செயல்களில் நல்ல முடிவுகளையும் தருவார்.

தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுக் காலமாகும்.
தட்சிணாயனத்தின் அபிமான தேவதை : சூரியன் 
தேவதையின் நிறம் : சிவப்பு 

தட்சிணாயனத்தில் பிறந்தவர்களின் பலன் :

     தட்சிணாயனத்தில் பிறந்தவர்கள் தகாத செயல்களைப் புரிந்து பெயர் பெறுவர். பயிர்த்தொழிலில் நாட்டம் உள்ளவர்கள். விளங்குகளிடத்து அன்பற்று கொடூரமாக நடந்து கொள்வார்கள். மக்களால் பொறுக்க முடியாத அளவிற்கு அயோக்கியர்களாக இருப்பார்கள். பிறர் அறியாமல் மற்றவர்க்கு தீங்கு செய்பவர்கள்.

தட்சிணாயனத்தில் செய்யத் தகுந்தவைகள் :

     சப்த மாதர்கள், பைரவர், வராஹமூர்த்தி, நரசிம்ஹ மூர்த்தி, திரிவிக்ரம மூர்த்தி மற்றும் மஹிஷாசுரமர்த்தினி முதலிய தேவதைகளை தட்சிணாயனத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக