புதன், 29 ஆகஸ்ட், 2012

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தொடரும் : அமைச்சர் அறிவிப்பு


     'இலங்கை ராணுவத்தினருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடரும்,' என, ராணுவத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.

     'நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்று வரும், இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவரை, உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். 


     இதற்கு பதில் அளித்த, இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன் மத்தாய், 'முதல்வரின் கோரிக்கையை, ராணுவ அமைச்சகம் பரிசீலித்து வருகிறது' என, கடந்த இரு தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

     இந்நிலையில், ராணுவத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது : இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடரும். இலங்கை நமது நட்பு நாடு என்ற வகையில், அந்நாட்டின் ராணுவத்தினர் இங்கு பயிற்சி பெறலாம். இதற்கு, உள்ளூர் அரசுகள் (தமிழகம்), சில காரணங்களுக்காக ஆட்சேபம் தெரிவிக்கலாம். 


     இது குறித்து ராணுவ அமைச்சகம் பரிசீலிக்கும். கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள, விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களை இயக்க, ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல், இது நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக