திங்கள், 27 ஆகஸ்ட், 2012

மக்கள் முட்டாள்களா? அருண் ஜெட்லி.


     நிலக்கரி சுரங்க ஊழலில், அரசுக்கு ஒரு பைசா கூட நஷ்டம் இல்லை என, சிதம்பரம் கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிலக்கரி சுரங்க ஒப்பந்தம், கையெழுத்தான மறுகணமே, முழு உரிமையும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கே உரியதாகிவிடும். மக்களை ஏமாற்றும் விதமாக, பொய்யான வலுவற்ற வாதங்களை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வைக்கிறது. அதை ஏற்க முடியாது, என, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

     நிலக்கரி சுரங்கங்களை ஏலத்திற்கு விடாமல், குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதன் விளைவாக, அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் (சி.ஏ.ஜி.,) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையால், கடந்த ஒரு வாரமாக, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லிமென்டை ஸ்தம்பிக்க வைத்துவிட்டன. 


     இதையடுத்து, நேற்று முன்தினம், டில்லியில் நிருபர்களிடம் பேசிய நிதியமைச்சர் சிதம்பரம், 'நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், எந்தவொரு நஷ்டமும் ஏற்படவில்லை. நிலக்கரி இன்னும் மண்ணிலேயேதான் இருக்கிறது. தோண்டி எடுக்கப்படாத நிலக்கரியை, கணக்கில் வைத்து நஷ்டம் என்று கூறுவது பொறுத்தமற்றது,' என்று தெரிவித்திருந்தார்.


     இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களைச் சந்தித்த, பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி கூறியதாவது :-


முட்டாளாக்குவதா? 

     'நிலக்கரி மண்ணிலேயே தான் உள்ளது. வெட்டி எடுக்கப்படவே இல்லை. எனவே, ஒரு பைசா கூட அரசுக்கு நஷ்டம் இல்லை' என, நிதியமைச்சர் கூறுகிறார். நிலக்கரி சுரங்கங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்த, ஒப்பந்தம் போட்ட மறுநிமிடமே, அந்த சுரங்கத்தின் மீதான உரிமையை அரசாங்கம் இழந்து விடுகிறது. எந்த சம்பந்தமும் அரசாங்கத்திற்கு இல்லை. சுரங்கத்தின் ஒட்டு மொத்த உரிமையாளராக தனியார் நிறுவனம் ஆகிவிடுகிறது. இந்த ரீதியில், 142 நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கங்களை பெற்றுள்ளன. 


     அப்படியெனில், நிதியமைச்சரின் கூற்றுப்படியே வைத்து பார்த்தாலும், அரசாங்கத்திற்கு வர வேண்டிய, உத்தேசமான வருமானம் வராமல் கிடக்கிறது என்பதுதானே நிஜம். இந்த வருமானம், அரசாங்கத்திற்கு வரவில்லை எனில், அது நஷ்டம் இல்லையா. ஆக, 'தோண்டாத சுரங்கத்தை கணக்கு காட்டி நஷ்டம் அடைந்து விட்டதாகக் கூறுவது தவறு' என, அரசு சொல்லுமேயானால், அது முழுக்க முழுக்க ஏமாற்று நாடகம், மக்களை முட்டாளாக்கும் செயல்.

சொத்து மதிப்பு கூடும் :- 

     பார்லிமென்டில், இதற்காக விவாதம் நடத்த வேண்டுமெனக் கூறுவதும், ஏமாற்று வேலை. எப்போது அரசாங்கத்தின் கையில் இருந்த சுரங்கம், தனியார் நிறுவனத்திற்கு போய் விடுகிறதோ, அப்போதிருந்தே அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்புகள் கூடிவிடும். அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு, பல மடங்கு அதிகரிக்கும். இதெல்லாமே, அந்த நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் கிடைத்ததால் மட்டுமே நடக்கின்றன. 

     இவையெல்லாம், சிதம்பரம் போன்றவர்களுக்கு தெரியாதது அல்ல. தெரிந்தும் தெரியாதது போல மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இந்த ஏமாற்று வித்தைக்கு பா.ஜ., துணை போகாது. நிலக்கரி ஊழல் விவகாரத்தில், அரசை எதிர்ப்பதில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் எந்த ஒரு முரண்பாடும் இல்லை. ஒற்றுமையாகவே இருக்கிறோம். அதுமட்டுமல்ல. அரசாங்கத்தின் பணத்தைக் கொள்ளையடிக்கும், பேரம் பேசும் வேலைகளும் நடக்கின்றன. இவை அனைத்தையும், எந்த கட்சியுமே ஆதரிக்கவில்லை. எல்லா கட்சிகளுமே, இவ்விஷயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை எல்லா கட்சிகளுமே உணர்ந்தும் உள்ளன.

கபட நாடகம் :- 


     இவ்விஷயத்தில், ரொம்பவும் பாதிக்கப்படப் போகும் கட்சிகள் என்று பார்த்தால், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிதான். காரணம், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அரசின் கபட நாடகம் எடுபடாது. மக்களின் வரிப்பணம், கொள்ளை போவதை எதிர்த்து நிற்க வேண்டிய கடமை, அந்த கட்சிகளுக்கும் உள்ளது. அந்த கடமையை நிறைவேற்றும் பொறுப்பை, அந்த கட்சிகள் தட்டிக் கழித்துவிட முடியாது. 

     பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் தான், ஏல முறையை தடுத்தது என, விமர்சனம் வைக்கப்படுகிறது. பெரிய கனிம வளமான நிலக்கரி என்பது, மத்திய அரசுக்கு சொந்தமானது. இதை ஏன் மத்திய அரசு உணரவில்லை. அப்படியே எடுத்துக் கொண்டாலும் கூட, ஆறு ஆண்டுகள் வரைக்குமா காலம் கடத்துவது. பிரச்னையை திசை திருப்பப் பார்க்கும், இது போன்ற வாதங்களை யாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

கொத்து சாவியை பாதுகாப்பாரா? 


     ஜெட்லி கூறியதாவது : அமைச்சர் சிதம்பரத்தின் வங்கிக் கணக்கில் இருந்து, திருட்டுத்தனமாக ஒருவர் பணத்தை எடுத்து, தன் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்கிறார் என, வைத்துக் கொள்வோம். அந்த பணத்தை அந்த ஆள் பயன்படுத்தாமல், அப்படியே வைத்திருக்கிறார் என்பதற்காகவே, சிதம்பரத்திற்கு நஷ்டமில்லை என்று ஆகிவிடுமா. எப்போது சிதம்பரத்தின் கணக்கில் இருந்து, பணம் கள்ளத்தனமாக எடுக்கப்பட்டதோ, அப்போதே சிதம்பரத்தின் பணம் களவு போனது போனதுதானே. 

     இந்த அடிப்படை உண்மை கூட புரியாமல் உள்ளார் சிதம்பரம். இவரெல்லாம் எப்படி, நாட்டு மக்களின் ஒட்டு மொத்த வரிப்பணத்தையே கட்டிக் காக்கும் காவலனாக இருக்கப்போகிறார் என்பது புரியவில்லை. இவ்வாறு ஜெட்லி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக