புதன், 1 ஆகஸ்ட், 2012

சமுதாய தளங்கள் மற்றொரு முகம்


     இன்றைய சமுதாயத்தில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள, தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள, இந்த தளங்கள் பெரிய அளவில் உதவி வருகின்றன என்பது உண்மையே.

      இளைஞர் ஒருவர், தான் எந்த சமுதாய தளத்திலும் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதில்லை என்று எழுதி இருந்தார். ஆனால் அந்த தளங்கள் குறித்த பல தகவல்களை அறிந்துள்ளார். 2005ல், இணையம் பயன்படுத்துவோரில், 8 சதவிகிதம் பேரே இந்த தளங்களில் உறுப்பினர்களாக இருந்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். 

     ஆனால், 2011ல் இது 65% ஆக உயர்ந்துள்ளது. அவருடைய வயது ஒத்தவர்கள்தான், இந்த தளங்களில் பெரும்பாலும் உறுப்பினர்களாக உள்ளனர் என்று காட்டிவிட்டு, சில காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார். 

     1. என் சொந்த தகவல்கள் எனக்கு மட்டுமே. அவற்றைப் பிறர் அறிய ஏன் தர வேண்டும்? நம்மைப் பற்றிய பிறர் மதிப்பீடு, பெரும்பாலும் நாம் என்ன எழுதுகிறோம், என்ன வகையான சொற்களைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது. இவற்றை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். எனவே பிறருடன் பகிர்ந்து கொள்ள, நான் எழுதுவதில்லை. நம் தனிப்பட்ட வாழ்க்கை பிறர் அறியச் சென்று விட்டால், பின் நாம் நினைத்தாலும் அதனைத் திரும்பப் பெற முடியாது.



     2. எழுதுவது யாருக்குச் சொந்தமாகிறது?. சமுதாய தளங்களில் எழுதப்படுவது யாருடைய சொத்தாகிறது? இதுவரை இந்தக் கேள்விக்குப் பதில் தெளிவாக இல்லை. நீங்கள் எழுதியது, தளத்தில் போட்ட பின்னர், நீங்களே கட்டுப்படுத்த முடியவில்லை. பின் அது உங்களுக்கு எப்படிச் சொந்தமாகும்?

     3. என் வாழ்வு எனக்குத்தான் : தனிநபர் வாழ்வு தனியாக இல்லை. பல தரப்பட்ட மக்களைச் சந்திக்க சமூக இணைய தளங்கள் மிக எளிய வழியைத் தருகின்றன. எந்தவிதமான கட்டுப்பாடும், வரையறைகளும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப் படுவதில்லை. இந்த சுதந்திரம் சில வேளைகளில் எல்லை மீறிச் செல்கிறது. சமுதாய நட்பு என்பது ஒருவருக்கொருவர் கடப்பாட்டுடன், கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் நல்ல நட்பாக மாறும். இந்த கட்டுப்பாடு இல்லையேல், தூய நட்பு மலராது. மலர்ந்தாலும், என்றும் எந்த வேளையிலும் அது திசை மாறும் வாய்ப்புகள் இங்கு உண்டு. 

     4. தனி நபர் பாதிப்பு : உங்களைப் பற்றி உலகம் அறிவதனால் பாதிப்பு உங்களுக்குத்தான். நீங்கள் ஏதோ ஒரு வயதில், எதுவோ ஒரு சூழ்நிலையில் குறிப்பிட்ட கருத்து ஒன்றினை, சமுதாய வலைத் தளங்களில் பதிந்திருக்கலாம். நீங்கள் வேலை தேடிச் செல்கையில், உங்களை நேர்முகம் செய்பவர் அதனை இணையத்தில் படிக்க நேர்ந்திருந்தால், அது அவருக்குப் பிடிக்கவில்லை என்றால், பாதிப்பு உங்களுக்குத்தானே. இது போல பல நிகழ்வுகள், சூழ்நிலைகளைக் கூறலாம்.

     5. தொடர் பாதிப்பு : தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொள்கையில், தவறுதலாக, சொல்லில், எழுத்தில் ஒரு பிழையினை நீங்கள் ஏற்படுத்தி இருக்கலாம். பின்னர், அடுத்த நிலையில் அதற்கான திருத்தத்தினை வெளியிட்டு இருக்கலாம். ஆனால், அடுத்து வருபவர்கள் உங்களின் பிழையை என்று வேண்டுமானாலும் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கலாம். 

     6. கூட்டத்தோடு கோவிந்தா : நீங்கள் எப்போதும் உங்கள் தனிக் கருத்தினை, அது ஏற்புடைத்ததாக இல்லாமல் இருந்தாலும், வலியுறுத்துபவராக இருக்கலாம். ஆனால், பெரும்பாலும், கூட்டத்தோடு கோவிந்தா போடுபவர்கள் மத்தியில் நீங்கள் வேறுபாடாகத் தெரிவீர்கள். 


     7. கழுத்தில் அமர்ந்து சேரச் சொல்லும் கடிதங்கள் : பலர், தங்களை நண்பர்களாகச் சேரச் சொல்லி கடிதங்களைத் தொடர்ந்து அனுப்புவார்கள். விடாமல் வற்புறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கும். நண்பனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், ஏதோ கொலைக் குற்றம் புரிந்தவர் போல எடுத்துக் கொள்வார்கள். இது தேவைதானா? சரிதானா?

     8. விளம்பரம் வேண்டாம் : சில தளங்களில் சேர்ந்தால், விளம்பரத்திற்காக அங்கு சென்றாயா? உன்னைக் காட்டிக் கொள்ள அங்கு இருக்கிறாயா? என்ற கேள்விகள் எழுகின்றன. எனக்கு இது தேவையா?

     9. கூடுதல் வேலைதானே? சமுதாய தளங்களில் சேர்ந்து நண்பர்களைப் பெறுவதுடன் நின்று விட முடியாது. நம் கருத்துகள் குறித்து, அல்லது நாம் ஏற்படுத்திய குறிப்புகள் குறித்து எழுதப்படுவதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். சில அன்பு வேண்டுகோள்களைப் புறந்தள்ள முடியாது. இவை எல்லாம், நமக்குக் கூடுதல் வேலையைத் தான் தருகின்றன.

     10. மேலே சொன்ன அனைத்தும் உண்மையே. ஆனால், சிலர் மட்டுமே இது போல கருத்து கொண்டு ஒதுங்குகின்றனர். இதில் நியாயமான உணர்வும் உள்ளது.

நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக