சனி, 4 ஆகஸ்ட், 2012

புனித பயணம் செல்லும் இந்துக்கள் 500 பேருக்கு ரூ. 1.25 கோடி: ஜெயலலிதா உத்தரவு









தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது :- 

     "ஜாதி மதங்கள் பாரோம்'' என்ற பாரதியின் கூற்றுப்படி, முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களையும் சமமாகக் கருதி, அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வகை செய்யும் வகையிலும், எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையிலும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

     கிறிஸ்துவ பெருமக்கள் ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொள்வதற்கும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப் படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் மக்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதி அளிக்கப்பட்டது. 

     அந்த தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், கிறிஸ்துவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு, முதற்கட்டமாக 500 கிறிஸ்துவர்கள் சென்றுவர அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். 

     இதேபோன்று, சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான நேபாள நாட்டிலுள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்துக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மானசரோவர் புனித யாத்திரைக்கு செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தெரிவு செய்யப்படும் தமிழ்நாட்டைச் சார்ந்த 250 இந்துக்களுக்கும், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்களுக்கும் ஆக மொத்தம் 500 பேருக்கு ஆண்டு தோறும் அரசு மானியம் வழங்க  முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

     இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டு அதாவது 2012-13 ஆம் ஆண்டில் மானசரோவர் புனித பயணத்திற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் சென்றுவர ஒரு நபருக்கு ஆகும் மொத்த உத்தேச செலவான 1 லட்சம் ரூபா யில் 40,000 ரூபாய் வீதம் 250 நபர்களுக்கென 1 கோடி ரூபாயும், முக்திநாத் புனித பயணத்திற்கு சென்னையிலிருந்து ரயில் மூலம் சென்று வர ஒரு நபருக்கு ஆகும் மொத்த உத்தேச செலவான 25,000 ரூபாயில் 10,000 ரூபாய் வீதம் 250 யாத்ரிகர்களுக்கென 25 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

     இந்த யாத்திரைக்கான அரசு மானியம் பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் இந்து சமய அறநிலையத்துறையால் நாளிதழ்கள் மூலம் விளம்பரம் செய்யப்படும். வரப் பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளை விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யும் பணியை இந்துசமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

     அரசின் இந்த நடவடிக்கைகள், மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகிய புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்பும் இந்துக்களின் கனவு, குறிப்பாக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களின் கனவு நனவாகிட பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக