ஞாயிறு, 22 ஜூலை, 2012

சூழ்நிலையை தன் வசமாக்கு!


     ஜெபம் செய்கிற வேளையில் அங்கேயும், இங்கேயும் நடக்கிற விஷயங்களைக் கவனிப்பதே சிலருக்கு வாடிக்கையாக இருக்கும். ஆனால், இந்த சம்பவத்தைப் படிப்பவர்கள், இனி அவ்வாறு செய்யமாட்டார்கள்.

     ஒரு சிறைச்சாலையில் சில கிறிஸ்தவர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவை மறுதலிக்க வேண்டும்  (வணங்கக்கூடாது) என்ற காரணத்திற்காக அடைக்கப்பட்டவர்கள். அவர்களோ, தங்கள் உயிரே போனாலும் கர்த்தரை வணங்குவதைக் கைவிடமாட்டோம் என்றனர். அந்த சிறைச்சாலை அறை மிகக் குறுகியது. 

     ஒரே அறையில் நாற்பது, ஐம்பது பேர் அடைக்கப்படுவார்கள். அவர்களால் படுக்க முடியாது. சிலர் அமர்ந்தால் சிலர் எழுந்து நிற்க வேண்டும். மலஜலம் கழிக்க தனியிடம் கிடையாது. அங்கேயே தான் எல்லாம். அதன் மேல் தான் அமர வேண்டும். படுக்க வேண்டும். வெளியே திறந்து விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

     துர்நாற்றம் குடலைப் பிடுங்கும். இத்தனையையும் அவர்கள் சகித்துக் கொண்டு அங்கே இருந்தனர். "மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு விடுதலை பெறச் சம்மதியாமல் வாதிக்கப் பட்டார்கள்" (எபி.11:35) என்ற வசனத்திற்கு பொருத்தமாக அவர்களது வாழ்க்கைச் சூழல் இருந்தது. ஒருமுறை அவர்கள் நற்கருணை  (ராப்போஜனம்) எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர். 

     இவர்களுக்கு சிறை அதிகாரிகள் வாரத்துக்கு அரை ரொட்டி மட்டுமே வழங்குவார்கள். அதில் கொஞ்சம் எடுத்தார்கள். அதை தரையில் வைத்தால் மலஜலமாகி விடுமே. எனவே ஒருவரை அந்த அசுத்தத்திலும் குப்புற படுக்க வைத்து அவரது முதுகில் வைத்தார்கள். அப்பம் கிடைத்து விட்டது. திராட்சை ரசத்துக்கு எங்கே போவது?

     இயேசுநாதர் கானா ஊர் கல்யாணத்திலே தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றவில்லையா? இவர்களும் தங்களிடமிருந்த சிறிது தண்ணீரை அவரது முதுகில் வைத்து, ""இதையும் திராட்சை ரசமாக மாற்றித் தாரும்'' என ஜெபித்து விட்டு ஆராதனையை நடத்தினர்.

     இப்படி தங்களைச் சுற்றியுள்ள பெரும் அசுத்த சூழ்நிலையையும் கூட பொருட்படுத்தாமல் ஆண்டவரை ஜெபிப்பதே தங்கள் குறிக்கோள் என்று சாதித்துக்காட்டிய கைதிகளைப் போல நமது ஜெபமும், புறச்சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் ஆழமாக அமைய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக