ஞாயிறு, 15 ஜூலை, 2012

ரத்தத்தை உறிஞ்சும் கந்துவட்டி : வழக்கு பதிவுக்கு தயங்கும் போலீஸ்



     விருதுநகர் மாவட்டத்தில் கந்து வட்டியால் இன்று ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன. இதை தடுக்க கடுமையான சட்டம் நடைமுறையில் இருந்தாலும், கந்து வட்டிக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.

     இதில், பாதிக்கப்படுபவர்கள் என்னவோ ஏழை அப்பாவிகள் தான். ஏதோ நம்பிக்கையில் இவர்களிடம் கடன் வாங்குவோர் மாதம், ஆண்டுகள் கடந்தாலும், வாங்கிய கடனின் முதல் அடைபடாமல் வட்டி செலுத்தும் நிலைதான் உள்ளது. குறிப்பாக ரூ. பத்தாயிரம் கடன் வாங்குவோர் லட்சத்திற்கு மேல் வட்டி செலுத்தும் நிலையில் உள்ளனர். இருந்த போதிலும் கந்து வட்டிக்காரர்கள் இவர்களை துரத்தியபடி வட்டி வசூலில் ஈடுபடுகின்றனர்.


     அரசு ஊழியர்கள் கூட இவர்களிடம் தப்பவில்லை. வட்டி பணத்திற்காக வங்கி ஏ.டி.எம். கார்டை பெற்று, மாதத் துவக்கத்தில் கடன் பெற்றோரின் சம்பளத்தை எடுத்து, வட்டி போக மீதி பணத்தை கொடுக்கும் நிலைதான் இன்றும் பல இடங்களில் உள்ளது. இதில் அரசு பணிகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள்தான் அதிகம் பாதிக்கின்றனர்.

     கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி வட்டி கொடுத்தே, தேய்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க முடியாமல், தங்களது சொத்துக்களையே பரிகொடுக்கும் நிலையும் தொடர்கிறது. இது தொடர்பாக, போலீசாரிடம் சென்றால் அவர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை. பிரச்னை உயர் அதிகாரிகளிடம் செல்லும் போது மட்டுமே ஏதோ கடமைக்கு வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்டவரை கைது செய்கின்றனர்.

     கைது செய்யப்பட்ட நபர்களும், ஜாமீனில் வெளியில் வந்ததும் புகார் கொடுப்பவரை உண்டு இல்லை என ஆக்குகின்றனர். இதற்கு அஞ்சியே பாதிக்கப்பட்ட பலரும் புகார் கொடுக்க முன்வருவதில்லை.

     கந்து கட்டிக்காரர்களால் மக்கள் படும் அவதியை கருத்தில் கொண்டு, எங்கு எல்லாம் கந்து வட்டி தொழில்கள் நடக்கிறதோ, அதை முறையாக கண்காணித்து, இரும்பு கரம் கொண்டு அடக்க போலீசார் முன்வர வேண்டும்.

இது தொடர்பாக பலரின் ஆதங்கம் :

     ஈஸ்வரன் (விருதுநகர்) : கந்து வட்டியானது மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. தடை சட்டம் கொண்டு வந்த போதிலும், போலீசார் இதனை முறையாக கண்காணிப்பது இல்லை. அன்றாட வாழ்க்கை வாழ முடியாமல் தவிப்பவர்களிடம் அடாவடி வசூல் செய்கின்றனர். தற்போது கிராமங்களில் நவீன முறையில் பைனான்ஸ் நிறுவனங்கள் துவக்கப்பட்டு, மக்களின் ரத்தத்தை வட்டி என்ற போர்வையில் உறிஞ்சுகின்றனர். சுகாதார பணியாளர்களிடையே வட்டி பிசினஸ் அதிகளவில் நடக்கிறது. பணியாளர்கள் சம்பளம் கூட எடுக்க முடியாத அளவிற்கு அடாவடியாக வட்டி வசூல் செய்கின்றனர். 

     கி.விஜயகுமார் (சாத்தூர் ) : கந்து வட்டியால் துப்புரவு தொழிலாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கின்றனர்.அவர்கள் சம்பளத்தை வீட்டிற்கு முழுமையாக கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு ரூபாய்கு 5 பைசா முதல் 10 பைசா வரை வட்டியாக கந்துவட்டிகாரர்கள் வாங்குகின்றனர். சாத்தூர் பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் கந்து வட்டி கொடுமை குறித்து புகார் செய்ய சென்றால், அடிதடி என வழக்கு பதிவு செய்கின்றனர். கந்துவட்டி தடைச்சட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. கூலி வேலை செய்யும் பலரும் கந்து வட்டியால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் ஊரை விட்டு இரவோடு இரவாக காலி செய்கின்றனர். 

     பாண்டியராஜா (காரியாபட்டி) : சூழ்நிலை காரணமாக வட்டிக்கு பணம் பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சில சமயங்களில் அசல் மற்றும் வட்டி கொடுக்க தாமதமானால், அதை பயன்படுத்தி, ரன்வட்டி, மீட்டர்வட்டி, வட்டி மீது வட்டி போட்டு சொத்துக்களை அபகரிக்கின்றனர். இதனால் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இத்தொழில் செய்பவர்கள் இரக்கம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அரசு உரிமம் மற்றும் விதிமுறைப்படி, இத்தொழில் செய்கிறார்களா என கண்டறிய வேண்டும். ரன் வட்டி, மீட்டர்வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை கண்டறிந்து,கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .

     லட்சுமணன் (சிவகாசி) : கந்துவட்டி கொடுமையல் ஏழை, நடுத்தர மக்கள்தான் கடுமையாக பாதிக்கின்றனர். கந்துவட்டி சட்டத்தில் முன்பு கடுமையான நடவடிக்கை இருந்தது. தற்போது பெயரளவிலே உள்ளது. ஏழை மற்றும் வியபாரிகளுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் கடுமையான விதிகளை பின்பற்றுவதால், கந்து வட்டிக்காரர்களிடம் சிக்குகின்றனர். உழைப்பில் கிடைக்கிற லாபம் முழுவதும் அவர்களிடமே போகிறது. 

     சிவராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்) : மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி கந்து வட்டி கொடுமை நடந்து வருகிறது. சிறிய தொகை வாங்கி அதை பல மடங்கு வட்டி கொடுக்கும் கொடுமை, பல இடங்களில் நடந்து வருகிறது. இதை தடுக்க ,மக்கள் வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பதோடு, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

     பாண்டியன் (வத்திராயிருப்பு) : விவசாய செலவுகளுக்காக அவசரத்திற்கு வட்டிக்கு பணம் வாங்கும் விவசாயிகள், திரும்ப கட்ட முற்படும்போதுதான் கந்துவட்டி என்பதையே உணர்கின்றனர். வாங்கியது கால்பணம், வட்டி முக்கால் பணம் என்பதால் தகராறு, பிரச்னைகளும் ஏற்படுகின்றன. அன்றாடம் போலீஸ் ஸ்டேஷன்களில் இதுபோல் ஏராளமான கொடுக்கல் வாங்கல் தகராறுகள் வந்தாலும்,போலீசார் அவற்றை "பேசிமுடித்து' தாங்களுக்கு ஒரு கமிஷன் தொகையை வாங்கிக் கொள்கின்றனரே தவிர, வட்டிக்கு கொடுத்தவர் மீது வழக்கு பதிவதில்லை. 

1 கருத்து:

  1. ரத்தத்தை உறிஞ்சும் கந்துவட்டி
    கொட்டாம்பட்டி அருகே குமுட்ராம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,
    http://sidhuu.blogspot.in/2012/07/blog-post_8678.html#comment-form

    பதிலளிநீக்கு