செவ்வாய், 31 ஜூலை, 2012

மறப்போம், மன்னிப்போம்!


     மறப்போம், மன்னிப்போம் என்று தாராள மனது காட்டும் மனிதர்களின் இதயம் பலமாகும். நோய் நொடி கிட்டே வராது என்று புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர், மனதுக்கும் இதயம் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

     ஆய்வில் 200 பேர் இடம் பெற்றனர். அவர்களில் பாதி பேரிடம், நண்பர் ஒருவர் அவருக்கு கெடுதல் செய்வதாக நினைத்து கொள்ள கேட்கப்பட்டது. அந்த நண்பர் மீது எப்படி ஆத்திரம் கொள்வீர்கள் என்று கற்பனை செய்து கொள்ள கூறப்பட்டது. இதற்கு மாறாக, மீதி 100 பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்ற மனநிலை கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.

     ஐந்து நிமிட அவகாசத்துக்கு பிறகு அதே சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட 100 பேரின் ரத்தம் கொதித்ததும், மறப்போம், மன்னிப்போம் பாலிசியை கொண்ட 100 பேரின் ரத்த அழுத்தம் நார்மலாக இருந்ததும் தெரிய வந்தது. 

    இதன்மூலம், 2வது பிரிவினரின் இதய துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை தரும் என ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.

     குழுவின் தலைமை பேராசிரியர் டாக்டர் பிரிட்டா லார்சன் கூறுகையில், ‘‘மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் ரத்த அழுத்தம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம். அதுவே, எதிரணியினருக்கு நீண்ட கால மனஅமைதியை உறுதி செய்து இதயத்தை பலப்படுத்துகிறது’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக