சனி, 21 ஜூலை, 2012

கருமுட்டை பரிசோதனை குழந்தையை பாதிக்காது : ஆய்வில் தகவல்.


     செயற்கைமுறை கருத்தரிப்பின்போது சினையுற்ற கருமுட்டை செல்லை பிரித்தெடுத்து பரிசோதிப்பதால், அந்த கருமுட்டையின் எஞ்சிய செல்களிலிருந்து பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பில்லை என்று ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

     செயற்கை முறையில் குழந்தை உருவாகும்போது பிறக்கும் குழந்தைக்கு மரபணு வழியாக பரவும் நோய்கள் அல்லது குறைபாடுகள் இருந்தால் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள் நடத்தப்படுவது வாடிக்கை. 

     அதாவது செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யப்பட்ட கருமுட்டையானது, மூன்று நாட்கள் கழித்துப் பார்க்கும்போது ஒரு செல்லாக இருந்த நிலைமாறி மொத்தம் எட்டு செல்களாக வளர்ந்திருக்கும். 

     இந்நிலையில், இதில் இருக்கும் எட்டு செல்களில் ஒரே ஒரு செல்லை மருத்துவர்கள் மிக கவனமாக பிரித்து எடுத்து, அந்த ஒரு செல்லை வைத்து அந்த குழந்தைக்கு மரபணு ரீதியில் பரவக்கூடிய நோய்கள் அல்லது குறைபாடுகள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து பார்ப்பார்கள். 

     இந்த பரிசோதனைகளை ஆங்கிலத்தில் பிஜிடி பரிசோதனைகள் என்று மருத்துவர்கள் அழைப்பார்கள். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட குழந்தைக்கு வரக்கூடிய நூற்றுக்கும் அதிகமான மரபணு ரீதியிலான நோய்களை அவர்களால் கண்டறிய முடியும். 

      இந்த சோதனைகள் மூலம் பிறக்கக் கூடிய குழந்தைக்கு மரபணு கோளாறுகள் இல்லாமல் செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் இந்த சோதனைகள் நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் கருதினாகள். 

      இருப்பினும், சினையுற்ற ஒரு கருமுட்டையின் ஒட்டுமொத்த அளவில் பன்னிரண்டரை சதவீதத்தை பிரித்து எடுப்பது அந்த குழந்தையின் எதிர்கால உடல்வளர்ச்சிக்கும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கும் எந்தவிதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது என்பற்காக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

      இந்த ஆய்வின் முடிவுகள், செயற்கைமுறை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களுக்கு, குறிப்பாக மார்பக புற்றுநோய் உள்ளீட்ட மரபணுரீதியில் அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடிய நோய்களுக்கான மரபணுக்கூறுகளை கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு பெரும் நம்பிக்கையளிப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக