செவ்வாய், 3 ஜூலை, 2012

மாடு மேய்த்தவர் திவான் ஆனார்


     
     ஆதோனியில் உள்ள காட்டுப் பிரதேசத்தில் ஒரு முறை ஸ்ரீராகவேந்திரர் சென்று கொண்டிருந்தார். அப்போது அக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வெங்கண்ணா என்ற சிறுவன் ஓடி வந்து ராகவேந்திரரின் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுதான். நான் படிப்பறிவு இல்லாதவன் நான் ஒரு அனாதை எழுதப்படிக்க எனக்கு ஆசையாக உள்ளது.
 
     ஆனால் வறுமை விரட்டுகிறது என்றான். அதற்கு ராகவேந்திரர் வருந்தாதே உனக்கு கஷ்டமான நேரத்தில் என் பெயரை உச்சரித்தால், நான்  உனக்கு உதவுவேன் என்றார். சில ஆண்டுகள் கழித்து வெங்கண்ணா வாலிபப் பருவத்துக்கு வந்திருந்தான். அப்போது அப்பகுதியை ஆட்சி செய்து வந்த முகமது சுல்தானின் பிரதிநிதியாகிய அஸதுல்லாகான் அந்தக் காட்டுப் பகுதிக்குள் வந்து கொண்டிருந்தான்.
 
     அப்போது சுல்தானிடமிருந்து ஒரு கடிதத்தை ஒரு குதிரை வீரன் கொண்டு வந்து அஸதுல்லாகானிடம் கொடுத்தான். அஸதுல்லாகானுக்கு படிக்க தெரியாது. அக்கடிதத்தை வாங்கிப் படித்துச் சொல்வதற்கு அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்த போது அங்கே வெங்கண்ணா நின்று கொண்டிருந்தான். அவனிடம் கடிதத்தை கொடுத்து படித்துச் சொல்லும்படி கூறினான்.
 
     அய்யா எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று வெங்கண்ணா கூறினான்.  அதை அஸதுல்லாகான் நம்பவில்லை. பார்ப்பதற்கு படித்தவன் போல இருக்கிறாய் நான் மூன்று எண்ணுவதற்குள் நீ இதைப் படித்துச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் உன் தலையை வெட்டுவேன் என்றான். அதனைக் கேட்டு பயந்து போன வெங்கண்ணா ஸ்ரீராகவேந்திரரை வேண்டினான்.
 
     அப்போது அவனது காதில் வெங்கண்ணா பயப்படாதே நான் சொல்வதைத் திருப்பிச் சொல் என்று அசரீரி கேட்டது. அதன்படி வெங்கண்ணா கூறினார். அஸதுல்லாகானின் திறமையை பாராட்டி சுல்தான் பல பிரதேசங்களை அவனது ஆளுகையில் சேர்த்து இருப்பதாகவும் அதற்காக அவனைக் கவுரவிக்க விருந்து ஏற்பாடு செய்திருப்பதாகவும் என்ற செய்தியை வெங்கண்ணா வாசித்தான். 
 
     உடனே அஸதுல்லாகான் மிகவும் மகிழ்ச்சியடைந்து வெங்கண்ணாவைத் தமது அரண்மனைத் திவானாக நியமித்தான். இந்த வெங்கண்ணாதான் பின் நாளில் மந்த்ராலயத்துக்கு இடம் ஒதுக்கி அங்கு ராகவேந்திரர் ஜீவசமாதி அடைய உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக