ஞாயிறு, 1 ஜூலை, 2012

கேரளாவில் சுற்றுலா வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் குவைத் கும்பல்


     கேரளாவில் சமீப காலமாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. குறிப்பாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கண்ணூர் ஆகிய இடங்களில் கடந்த 6 மாதங்களில் பல லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

     மேலும் இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசார ணை நடத்தினர். இதில் கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு கேரளாவில் புழக்கத்தில் விடப்படுவது தெரிய வந்தது.     

     இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்துக்கு வந்த ஈரான் நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் மசாஜை முடித்து விட்டு கட்டணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தார். அந்த பணம் முழுவதும் கள்ள நோட்டு என்பதை மசாஜ் ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

     இதையடுத்து கொச்சி வடகந்திரா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் அப்துல் நசாத் என்பதும் குவைத்தில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும் குவைத்தில் உள்ள கள்ள நோட்டு கும்பல்தான் அப்துல் நசாத்தை தங்கள் வேலைக்கு பயன்படுத்தி லட்சக் கணக்கில் கள்ள நோட்டுகளை கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்தது.

     இதற்கு முன்பு இரண்டு முறை சுற்றுலா வந்த இவர் பல லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளையும் புழக்கத்தில் விட்டுள்ளார். தினமும் குவைத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா வருவது போல வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு செல்வதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

     இதற்கு பின்னால் துபாயிலும் ஒரு பெரிய சர்வதேச கள்ள நோட்டு கும்பல் இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் கொச்சி போலீசார் சர்வதேச போலீசுக்கும், குவைத் நாட்டு போலீசுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக