திங்கள், 23 ஜூலை, 2012

அறிவியல் கணக்கும், ஆன்மீகக் கணக்கும்!


     பிரபல ஈழ எழுத்தாளர் அ. முத்துலிங்கம், தான் அடிக்கடி காணாமல் போவதைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். சிறு வயசில் அவரது அம்மா, அவர் கையில் காசைக் கொடுத்து கடைக்கு அனுப்புவாராம்.

     ‘காசு பத்திரம், தொலைத்து விடாதே’ என்று பற்பல முறை சொல்லி அனுப்பி வைப்பாராம். ‘காசு பத்திரமாய் இருக்கும், நான்தான் தொலைந்து போவேன்’ என்று எழுதுகிறார் முத்துலிங்கம். ‘திருப்பங்களின் போது இடதா, வலதா, எந்தப் பக்கம் திரும்புவது என்ற பெரிய கேள்வி என் முன் நிற்கும். நான் தேர்ந்தெடுத்துத் திரும்பும் திசை எப்போதும் தவறாக இருக்கும்' என்று மேலும் சுவாரஸ்யமாகச் சொல்கிறார். சின்ன வயசில் காணாமல் போகாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா என்ன?

     நான் என்னுடைய நாலு வயசில் ஒருமுறை தொலைந்து போனேன். கி.மு., கி.பி. போல நான் தொலைவதற்கு முன், தொலைந்து கிடைத்த பின் என்று அந்தக் கதைக்கு முன், பின் இணைப்புகள் உண்டு. தொலைவதற்கு முன் நடந்த சம்பவம், நாங்கள் குடும்பத்தோடு போன ஒரு சினிமா பற்றியது. 

     ‘திருமலை தென்குமரி’ என்று அந்தக் காலத்தில் வந்த பக்திப் படத்திற்கு வீட்டில் அழைத்துப் போனார்கள். ‘‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா’’ என்று சீர்காழி வெங்கலக் குரலில் பாடுவாரே, அந்தப் படம்தான். படத்தில் ஒரு கோஷ்டி. டிராவல்ஸ் பஸ்ஸில் கோயில் கோயிலாகப் போகும். 

     ஒரு முருகன் கோயிலில் ஒரு சின்னப் பையன் தொலைந்து போவான். அவனுடைய அம்மா, அப்பா எல்லாரும் முருகனைப் பார்த்து மனமுருக வேண்ட, பையன் கிடைத்து விடுவான்! படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா நக்கலாய்க் கமெண்ட் அடித்தார்: ‘‘குழந்தை தொலைந்தால் போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுப்பாங்களா, கோயிலுக்குப் போய் அழுவாங்களா? என்ன படம் எடுக்கறான்?’’

     இது நடந்த அடுத்த நாள் அப்பாவுடன் நானும் என் இரு அக்காக்களும் திருவல்லிக்கேணியில் எங்கள் வீட்டின் அருகே இருந்த முருகன் கோயிலுக்குப் போனோம். ஒரு நாளும் என் அப்பா சைக்கிளில் ஏறி மிதித்ததை நாங்கள் கண்டதில்லை. நான் சிறுமி என்பதால் என்னை உட்காரவைத்து சைக்கிளை உருட்டிக்கொண்டுதான் போவார். மற்றவர்கள் நடந்து வரவேண்டும். 

     கோயிலுக்கு உள்ளே போனதும், யாரோ ஒரு ஆள் சைக்கிளில் வெளியே போக, அது அப்பாதான் என்று நினைத்து, நான் அந்த ஆள் பின்னாலேயே (அப்பவே அவளுக்குக் கொஞ்சம் போறாது என்று அக்காக்கள் சொல்வார்கள்) போனது இப்போதும் நினைவிருக்கிறது. அப்புறம் என்ன நடந்தது? நான் எங்கே காணாமல் போனேன்? எப்படி மூன்று மணி நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்ப வந்தேன் - எதுவுமே என் நினைவு அடுக்குகளில் பதியவில்லை.

     கோயிலில் நான் தொலைந்தது தெரிந்ததும் அப்பாவிற்கு ‘சொரேர்’ என்றது. முன்தினம் சினிமாவில் முருகன் கருணையால் குழந்தை கிடைத்ததை தான் கேலியாகப் பேசியதற்கு அந்த முருகன் கோயிலிலேயே தண்டனையா? அப்பா கதறி அழுது முருகனிடம் மன்னிப்புக் கேட்டார். பிறகுதான் போலீஸ் ஸ்டேஷன் போனார். 

     அதற்குள் நான் வீடு வந்து சேர்ந்தேன். கதை முடிந்தபின் ஒரு கட்டம் இருக்கிறது. நான் வீடு வந்ததும், எல்லோரும் தூக்கிக் கொண்டாடியதும், எப்போதும் சண்டை போடும் அக்காக்கள் பாசத்தைப் பொழிந்ததும், குடும்பத்துடன் முருகன் கோயில் போய் வந்ததும், அம்மா திருஷ்டி சுற்றியதும், ‘‘பயப்பட்டிருப்பா குழந்தை’’ என்று அத்தை கொழுமோர்  லேசாய் சுட வைத்து மொற மொறவென்று இருக்கும், காய்ச்சிக் கொடுத்ததும், அப்பா அல்வா வாங்கிக் கொடுத்ததும், இரவு நான் தூங்கி விட்டதாக நினைத்து அத்தையும் அம்மாவும் என் படுக்கைக்கு அருகில் பலமுறை வந்து நான் பத்திரமாய் இருக்கிறேனா என்று பார்த்துச் சென்றதும் தித்திப்பாக என் நினைவில் இருக்கிறது. 

     முருகன் அருளால் கிடைத்த குழந்தை என்று எங்கள் தெருவே கொண்டாடியதும் நான் பலமுறை பலரிடம் நடந்த சம்பவத்தை ஒரு எழுத்தாளரின் லாவகத்துடன் பந்தாவாக மிகையாய் விவரித்தும் (‘அப்படியே ஒரு வேல் என்கிட்ட வந்தது’) உபரி விவரங்கள். இன்று? அம்மா இல்லை, அத்தை இல்லை, திருவல்லிக்கேணியின் வீடு இல்லை. நான் பிறகு தொலைந்தே போகவில்லை. இனிமையான அந்த நாட்கள்தான் தொலைந்து போய்விட்டன.

     இந்த சம்பவத்தை நான் பின்னாளில் பற்பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். என் அப்பாவின் சினிமா பற்றிய விமரிசனத்தை முருகன் கேட்டு அவருக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி என்னைக் கொஞ்ச நேரம் மறைத்து வைத்தான் என்பது அறிவியல் ரீதியாக மட்டுமே சிந்திக்கும் ஒரு மனிதருக்கு அபத்தமாகப் படலாம். 

     ‘நடந்தது ஒரு தற்செயலான நிகழ்வு. நீ காணாமல் போனாய். எங்கேயோ கொஞ்ச நேரம் அலைந்து திரிந்தாய். திடீரென்று வீடு இருக்கும் திசை ஞாபகம் வந்து அங்கே போயிருக்கிறாய்’ என்று அவர் என்னிடம் விளக்கம் தரலாம். ஆனால் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தமட்டில் இது ஒரு அப்பட்டமான ஆன்மிக அனுபவம். முருகனின் திருவிளையாடல் மட்டுமே. எந்தப் பார்வை உண்மையானது?

அறிவியலா, ஆன்மீகமா?

     உலகத்தின் ஆரம்பம் தொடங்கி அறிவினால் முழுதும் விளக்க முடியாத சம்பவங்கள் நடந்தபடியேதான் இருக்கின்றன. மார்கன் ராபர்ட்ஸன் என்பவர் ஒரு நாவல் எழுதினார். ஆண்டு 1898. நாவலின் பெயர் டைட்டனின் அழிவு. அந்தக் கதையில் டைட்டன் என்கிற பிரமாண்டமான சொகுசுக் கப்பல், ஒரு ஐஸ் பாறையில் மோதி முழுகுகிறது. பல பேர் இறந்து போகிறார்கள்.

எங்கேயோ கேட்ட கதை போல் இல்லை?

     1912ல் டைட்டானிக் கப்பல் ஐஸ் பாறையில் நிஜமாகவே மோதி முழுகியது. சம்பவத்திற்கு முன் எழுதப்பட்ட நாவல் எப்படி நிஜத்திற்கு இவ்வளவு அருகில் அமைந்தது?

     நம்பவே முடியாத பொருத்தங்களை பல இடங்களிலும் கேள்விப்படுகிறோம். 

     லிங்கன் 1860-லும் கென்னடி 1960-லும் அமெரிக்க ஜனாதிபதியானார்கள். சரியாக நூறு வருஷம். இருவரும் கருப்பினத்தவரின் உரிமைக்காகப் பாடுபட்டார்கள். இருவரும் வெள்ளிக்கிழமையில் தத்தம் மனைவி அருகில் இருக்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

     இரு மனைவியரும் வெள்ளை மாளிகையில் வாழ்ந்தபோது பிள்ளை பெற்றனர்.  பிறந்ததும் குழந்தை இறந்தது.

     கென்னடி, லிங்கன் இருவரும் தலையின் பின் பகுதியில் குண்டு துளைத்து இறந்தார்கள். இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் 1839, 1939. சரியாக நூறு வருஷம்! இந்த இரு குற்றவாளிகளும் பிடிபட்டு பின்னர் வழக்கு நடக்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 

     லிங்கன், கென்னடி இருவரும் இறந்த பின்னர், ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் அவர்களுக்கு அடுத்த ஜனாதிபதியானார்கள், ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன். லிங்கன், கென்னடி இரண்டு பெயர்களுக்கும் ஆங்கிலத்தில் ஏழு எழுத்துகள்.

     தலை சுற்றுகிறதல்லவா? இவை எல்லாமே எதேச்சையாக நடந்ததா? அல்லது ஏதோ ஒரு விதி, கடவுளின் சட்டம், முன்பே தீர்மானிக்கப்பட்ட ஓர் அம்சம், தவிர்க்க முடியாமல் எல்லார் வாழ்வின் சம்பவங்களிலும் உறைந்துள்ளதா?

     ‘பிரபஞ்சம் கடவுளால் இயக்கப்படுகிறதா?’ என்ற கேள்விக்கு பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வில்லியம் பாலே என்ற பாதிரியார் அழகான விளக்கம் அளித்தார். ‘‘ஒரு சோலையில் நடக்கும்போது பாதையில் ஒரு கடிகாரத்தைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் துல்லியமான அமைப்பைப் பார்க்கும்போது என்ன முடிவிற்கு வருவீர்கள்? 

     நீங்கள் நேரே பார்க்க முடியாவிட்டாலும் கூட அந்தக் கடிகாரத்தை யாரோ ஒருவர் தயாரித்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருவீர்கள், அல்லவா? அதேபோல இயற்கையில் இருக்கும் மிக மிக ஒழுங்கான அமைப்பைப் பார்க்கும்போது, பிரபஞ்ச இயக்கத்தின் துல்லியத்தைப் பார்க்கும்போது, இதைப் படைத்த ஒரு கடவுள் இருக்கிறார் என்ற முடிவிற்குத்தான் வரவேண்டியுள்ளது” என்று சொல்கிறார், வில்லியம் பாலே. நியூட்டனும் ஐன்ஸ்டீனும் இந்தத் தத்துவத்தை கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்கிறார்கள்.

     கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு ஆன்மிகத்தின் பதில் ‘இருக்கிறார்’, அறிவியலின் பதில், ‘இல்லை’ என்பதல்ல, ‘இருக்கக் கூடும்’ என்பதே!

     இந்த இரண்டும் சந்திக்கும் இடத்தில்தான், காணாமல் போன பிள்ளைகளைக் கிடைக்கச் செய்யும் முருகன் அருளை நினைத்து விம்மும் பக்தி, நம் வாழ்வை அழகாயும் அர்த்தமுள்ளதாகவும் செய்கிறது. சிறு வயதில் காணாமல் போய் கிடைத்த பிள்ளைகள் பெரியவர்களாகி வெளியே போகும்போதும் ‘பத்திரம், ஜாக்கிரதை. முருகனை வேண்டிக்கிட்டு போ’ என்று சொல்லும் அப்பாக்களின் குரலில் தொனிக்கும் இறை நம்பிக்கை, காவல் காக்கும் வேலாக நம்மைப் பாதுகாக்கிறது. 

நன்றி : பாரதி பாஸ்கர், தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக