சனி, 28 ஜூலை, 2012

பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியாதா?


     பிளாஸ்டிக் நம் கண் முன்னே வாழும் எமன். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, மனித உயிர்களுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள, பேரழிவு சக்தி. உலகம் முழுவதும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 105 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு நபரும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 70 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக்குளை பயன்படுத்துகின்றனர்.

     பிளாஸ்டிக்கை தயாரிப்பதற்கான செலவு குறைவு. மேலும், நாம் விரும்பும் எந்த ஒரு வடிவத்திலும், இதை எளிதாக உருமாற்றி விடலாம். ஆனால், இதை அழிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இன்று, கடைகளில் வாங்கும் அனைத்து பொருட்களும், பிளாஸ்டிக் பைகளில்தான் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள், பொதுமக்களால் வீதிகளில் தூக்கி எறியப்படுவதன் விளைவாக, பூமிக்குள் ஆங்காங்கே புதைந்து, நிலத்தில் பெய்யும் மழை நீர், பூமிக்குள் ஊடுருவாத வகையில், மிகப் பெரிய பிளாஸ்டிக் கேடயமாக மாறி விடுகிறது. இதனால், நிலத்தடி நீர் குறைந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


     கடற்கரைகளில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்குகள், கடலுக்குள் செல்வதால், கடலின் சுற்றுச் சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடல் வாழ் உயிரினங்களின் உயிர்களுக்கு உலை வைக்கின்றன. இதனால்தான், "அணுகுண்டால் ஏற்படும் பாதிப்பை விட, பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு மிகவும் பயங்கரமானது' என, நம் சுப்ரீம் கோர்ட், கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தியது.

     ஆனால், பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை, உங்களால் ஒரு நாளாவது வாழ்ந்து காட்ட முடியுமா? ஆஸ்திரியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், இரண்டு ஆண்டுகள் பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து காட்டியுள்ளனர்.

     ஆஸ்திரியாவைச் சேர்ந்த, சாண்ட்ரா கிராவுட்வாச்சி என்ற பெண், சில ஆண்டுகளுக்கு முன், பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் ஆவணப்படத்தை பார்த்தார். அப்போதிருந்து, இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், இவருக்குள் வேரூன்றியது.

     இதையடுத்து, இவரும், இவரது மூன்று குழந்தைகளும் சேர்ந்து, பிளாஸ்டிக் இல்லாமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்தனர். தங்கள் வீட்டில் இருந்த, அத்தனை பிளாஸ்டிக் பொருட்களையும் ஓரம் கட்டினர். பல் துலக்குவதற்காக, மரக்குச்சியால் தயாரிக்கப்பட்ட, 'பிரஷ்'ஐ பயன்படுத்தினர். சமையலுக்கும், மற்ற பொருட்களை வைத்து கொள்வதற்கும் தகர டின் மற்றும் அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தினர்.

     ஒரு சில நாட்களிலேயே, பிளாஸ்டிக் இல்லாமல் வாழ்வது, எவ்வளவு சிரமம் என்பது, இவர்களுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும், தளராத மனதுடன், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளாஸ்டிக்கையே பயன் படுத்தாமல் வாழ்ந்து காட்டினர்.

     சாண்ட்ரா கூறுகையில், 'பிளாஸ்டிக்காலான கழிப்பறை பேப்பருக்கு பதிலாக, வேறு எதை பயன்படுத்துவது என்பதில், பெரிய பிரச்னையாகி விட்டது. சில நாட்கள் செய்தித்தாள்களை பயன்படுத்தினோம். சரி வரவில்லை. அப்புறம், இலைகளை பயன்படுத்தினோம். அதுவும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக, மறு சுழற்சி செய்யப்பட்ட பேப்பர் டவல்களை பயன்படுத்தினோம். எங்களைப் பார்த்து, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு செய்தோம்' என்றார்.

     ஏதோ, பூமியில் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், சக மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும், எதிர்கால தலைமுறைக்கும், நம்மால் முடிந்த நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்ற மிகப் பரந்த மனதுடன் வாழ்ந்து காட்டிய சாண்ட்ரா குடும்பத்தினரை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.

1 கருத்து:

  1. நல்ல விசயம்!!

    அவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளனர்.
    நாம் அவற்றின் பயன்பாட்டினைக் குறைத்து வாழ்வோம்!

    பதிலளிநீக்கு