வியாழன், 19 ஜூலை, 2012

குடிக்காதே தம்பி குடிக்காதே!


     போதிசத்துவர் என்ற மகான் ஏராளமான செல்வத்தை தன்னிடம் வைத்திருந்தார். அதை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவதில் அவருக்கு பரமானந்தம்! இறைக்கிற கிணறுதான் ஊறும் என்பதற்கேற்ப, பரந்த மனப்பான்மையுள்ள தகுதி மிக்க இவரிடம் தர்மத்திற்குரிய பணத்தைக் கொடுத்தால், அது தகுதியானவர்களைச் சென்றடையும் என்ற நோக்கத்தில் தர்மவான்களும், பெரும் செல்வந்தர்களும் இவரிடம் பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தனர். இப்படியாக நான்கு கோடி பொற்காசுகள் அவரிடம் சேர்ந்துவிட்டன.

     போதிசத்துவரைத் தேடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒருநாள் போதிசத்துவர் காலமாகி விட்டார். மக்கள் பட்ட வருத்தத்திற்கு அளவேயில்லை. இருப்பினும், அவரது மகன் இதேபோல தானதர்மம் செய்வார், தங்கள் கஷ்டங்கள் தீருமென நம்பினர். அவர்கள் அந்த மகனைத் தேடிச் சென்று உதவி கேட்டனர். அவனோ குடிகாரன். போதையில் உளறிக் கொண்டிருந்தான். அவனை எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தனர். தன்னைத் தேடி வந்தவர்களிடம், ""ஏனடா! ஏதோ கொடுத்து வைத்ததைப் போல கேட்கிறீர்களே! என் தகப்பனார் எனக்குத்தான் சொத்தை விட்டுச் சென்றுள்ளாரே தவிர, உங்களுக்கு வாரி வழங்க இல்லை. என் தகப்பனாரிடம் இதுவரை நீங்கள் அடித்த கொள்ளை போதாதா? அப்பாவியான அவரை ஏமாற்றி நீங்கள் பணம் பெற்றீர்கள். ஆனால், உங்கள் பருப்பு என்னிடம் வேகாது,'' எனச் சொல்லி விரட்டிவிட்டான். 

     அது மட்டுமல்ல! தினமும் குடித்தும், குடியால் மதிமயங்கி பெண் பழக்கத்தில் சிக்கியும், தன் தந்தை சேர்த்து வைத்த சொத்து அனைத்தையும் இழந்த அவன், தெருவில் யாரும் கண்டு கொள்ளாதவனாய் பிச்சைக்காரனாய் திரிய ஆரம்பித்தான். தான் செய்த தர்மத்தால் சொர்க்கத்தில் தேவர்களுடன் அமர்ந்திருந்த போதிசத்துவர் தன் மகனின் இந்த அவலநிலை கண்டு அழுதார். அவரது கண்ணீரின் காரணத்தை அறிந்த தேவர்கள், ""போதிசத்துவரே! உங்கள் தர்மம் உங்களைக் காப்பாற்றினாலும் உங்கள் பிள்ளையைக் காப்பாற்றவில்லையே என வருந்த வேண்டாம். அவரவர் முன் வினைப்பயன் காரணமாகத்தான் இந்த நிலை உண்டாகிறது. இருப்பினும், தங்கள் கண்ணீர் எங்களை வருத்துகிறது. நாங்கள் உங்கள் பிள்ளையின் கையில் ஒரு அட்சய பாத்திரம் ஒன்று கிடைக்கும்படி செய்கிறோம். அதில் இருந்து தேவையானதை எடுத்துக் கொண்டு நல்லபடியாக வாழ்வான்'' என்றனர். 

     போதிசத்துவர் மகிழ்ச்சி அடைந்தார். தேவர்கள் அவன் கண்ணில் படும்படி அட்சய பாத்திரத்தை வைத்தனர். அதைக் கையில் எடுத்தவுடன் போதிசத்துவரின் மகன் அதனுள் கையை விட்டபடியே, ""இந்த பாத்திரம் நிறைய மது இருந்தால் எப்படி இருக்கும்?'' என்று எண்ணினான். என்ன ஆச்சர்யம்! ஒரே நொடியில் பாத்திரம் முழுக்க மது நிறைந்து விட்டது. அவன் சந்தோஷமாக நிறைய குடித்தான். சுவையான உணவு வகைகளை உண்ண நினைத்தான். நல்ல ருசியான உணவுப் பண்டங்கள் அட்சய பாத்திரத்தில் நிரம்பின. இப்படியே, தினமும் நினைத்த நேரத்தில் குடிக்கவும், சாப்பிடவும் செய்தான். ஒரு நாள் குடிவெறியில் தள்ளாடினான். அவன் கையில் இருந்த பாத்திரம் தவறி விழுந்து நொறுங்கிப் போனது. மீண்டும் அவன் பிச்சை எடுக்கத் தொடங்கினான். விதி வலியது என்பதை போதி சத்துவர் உணர்ந்தார். குடிப்பழக்கம் நம் குடும்ப நற்பெயரை அழித்துவிடும் என்பதை மறவாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக