திங்கள், 23 ஜூலை, 2012

ஆஸ்திரியா கோட்டையில் அதிசயம் : 500 ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்த உள்ளாடை


     பெண்களின் உள்ளாடைகள் 500 ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆஸ்திரியா கோட்டையில் பை நிறைய பெண் உள்ளாடைகள், கிழிந்த ஆடைகள் கிடைத்துள்ளன.

     ஆஸ்திரியாவின் கிழக்கு டைரோல் நகரில் உள்ள லெங்பர்க் கோட்டையை பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. கோட்டையின் உள்பகுதியை ஊழியர்கள் தோண்டியபோது, தரைக்கு அடியில் புதையுண்டிருந்த ஒரு பையை கண்டெடுத்தனர். 

     அதில் பெண்கள் அணியும் 4 பிரா, 2 ஜோடி பேன்டீஸ் உள்ளிட்ட ஏராளமான உடைகள் இருந்தது. மேலும் கிழிந்து போனதால் தேவையில்லை என்று வீசப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த உடைகள், லண்டன் மியூசியத்தின் நாகரீக உடைகள் ஆய்வுப்பிரிவு அதிகாரி ஹிலாரி டேவிட்சன் தலைமையில் கார்பன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. 

     இதில் இவை 15-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பது உறுதியாகி உள்ளது. இதுபற்றி ஆஸ்திரியாவின் இன்ஸ்பிரக் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ஆய்வாளர் பீட்ரிக்ஸ் நட்ஸ் மற்றும் ஹெரால்டு ஸ்டாட்லர் கூறியதாவது : பிரா உள்ளிட்ட பெண் உள்ளாடைகள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்புதான் அறிமுகமானதாக கூறப்பட்டு வந்தது. 

     ஆனால், 500 ஆண்டுகளுக்கு முன்பே இவை புழக்கத்தில் இருந்தது தற்போது நிரூபணமாகியுள்ளது. ஆஸ்திரியாவின் லெங்பர்க் கோட்டையில் உள்ள பெரிய கதவின் அடியில் ஒரு பலகைக்கு கீழ் இவை புதையுண்டு இருந்தது. பாதுகாப்பாக பைக்குள் வைக்கப்பட்டிருந்ததால், சேதமின்றி உள்ளது.

     தற்போது அணியும் பிரா, ஷிம்மி போன்றவை போலவே அவை இருப்பது ஆச்சரியமாக உள்ளது. உள்ளாடைகளுடன் ஷர்ட், பிகினி, குட்டை பேன்ட் உள்பட பல உடைகள் இருந்தது. ரேடியோ கார்பன் டேட்டிங் சோதனையில், இவை அனைத்தும் 15-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது உறுதியாகி உள்ளது. 

     1485-ம் ஆண்டில் இங்கு கட்டிட விரிவாக்க பணி நடந்துள்ளது. அப்போது இந்த ஆடைகள் புதைந்திருக்கலாம் என்று தெரிகிறது. நவீன காலத்திய உள்ளாடைகள் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. 

நன்றி : தமிழ் முரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக