செவ்வாய், 31 ஜூலை, 2012

அடுக்குமாடி கட்டட அடிப்படை வசதி கட்டணம் அதிகரிப்பு : சதுர மீட்டருக்கு ரூ.250 கூடுதல் செலவாகும்



     தமிழகத்தில், நகர்ப்புற பகுதிகளில், புதிய கட்டடங்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி கட்டணங்கள், 50 சதவீத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, புதிதாக அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, சதுர மீட்டருக்கு, 250 ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும்.

     நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்ட, உள்கட்டமைப்பு, அடிப்படை வசதி கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன. இதற்காக, நகர் ஊரமைப்பு சட்டம், 2007ம் ஆண்டு திருத்தப்பட்டு, கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம், நகர் ஊரமைப்புத் துறை இயக்குனருக்கு அளிக்கப்பட்டது. 

     பல்வேறு மாற்றங்களுக்குபின், சி.எம்.டி.ஏ., விலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு விதமாகவும், டி.டி.சி.பி.,யில் உள்ள பகுதிகளுக்கு, வேறு விதமாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இம்முறையே இப்போதும் நடைமுறையில் உள்ளது. 

     நகர்ப்புற பகுதிகளில் பெருகி வரும் தேவைக்கும், இப்போதுள்ள விகிதங்களின்படி வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் இடையில், அதிகபட்ச வேறுபாடு உள்ளது என்பது கண்டறியப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் கட்டணத்தை மேலும் அதிகரிக்க, நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

     இதையடுத்து, இதற்கான கட்டணங்களை அதிகரித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் பணிந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பழைய கட்டணத்தில், 50 சதவீதம் அளவுக்கு உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த மாதம், 28ம் தேதியில் இருந்து, புதிய கட்டண விகிதங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது.

     இதை அமலாக்க, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், டி.டி.சி.பி., இயக்குனர் ஆகியோருக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


உயர்வு எவ்வளவு?

     கட்டடங்களின் வகை சி.எம்.டி.ஏ., செங்கல்பட்டு கோவை, திருப்பூர் பிற பகுதிகள்

(ச.மீட்டருக்கு ரூபாய் - அடைப்புக்குள் பழைய கட்டணம்)

பலமாடி கட்டடம் 750 (500) 750 (500) 563 (375) 375 (250)

பலமாடி குடியிருப்பு கட்டடம் 375 (250) 375 (250) 375 (250) 375 (250)

வணிகம், தகவல் தொழில்நுட்ப கட்டடம் 375 (250) 375 (250) 285 (190) 188 (125)

நிறுவன கட்டடம் 150 (100) 150 (100) 113 (75) 75 (50)

தொழிற்கூட கட்டடம் 225 (150) 225 (150) 169 (112.50) 113 (75)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக