வெள்ளி, 22 ஜூன், 2012

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 11


கணபதி துணை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்.

11. சிவாலய கைங்கரியவியல்

279. சிவாலயத்தின் பொருட்டுச் செயற்பாலனவாகிய திருத்தொண்டுகள் யாவை?

     திருவலகிடுதல், திருமெழுக்குச் சாத்துதல், திரு நந்தனவனம் வைத்தல், பத்திரபுஷ்பமெடுத்தல், திருமாலைக் கட்டுதல், சுகந்த தூபமிடுதல், திருவிளக்கேற்றுதல், தோத்திரம் பாடல், ஆனந்தக் கூத்தாடல், பூசைத் திரவியங்கள் கொடுத்தல் என்பவைகளாம்.

திருவலகிடுதல்

280. திருவலகு எப்படி இடுதல் வேண்டும்?
     

     சூரியன் உதிக்குமுன் ஸ்நானஞ் செய்து, சந்தியாவந்தனம் முடித்துக் கொண்டு, திருக்கோயிலுனுள்ளே புகுந்து, மெல்லிய துடைப்பத்தினாலே கிருமிகள் சாவாமல் மேற்பட அலகிட்டுக் குப்பையை வாரித் தூரத்தே கொண்டுபோய்க் குழியிலே கொட்டிவிடல் வேண்டும்.

திருமெழுக்குச் சாத்துதல்

281. திருமெழுக்கு எப்படிச் சாத்தல் வேண்டும்?

     ஈன்றண்ணியதும் நோயையுடையதும் அல்லாத பசுவினது சாணியைப் பூமியில் விழுமுன், இலையில் ஏந்தியாயினும், ஏந்தல் கூடாதபோது, சுத்தநிலத்தில் விழுந்த சாணியை மேல் கீழ் தள்ளி நடுப்பட எடுத்தாயினும், வாவி நதி முதலியவற்றில் வடித்தெடுத்து வந்த சலத்துடனே கூட்டிச், செங்கற்படுத்த நிலத்தையுஞ் சுண்ணாம்பு படுத்த நிலத்தையும் மண் படுத்த நிலத்தையும் மெழுகல் வேண்டும். கருங்கற் படுத்த நிலத்தைச் சலத்தினாலே கழுவி விடல் வேண்டும்; கருங்கல்லிலே சாணி படலாகாது.


திருநந்தனவனம் வைத்தல்


282. திருநந்தனவனம் வைக்கற்பாலதாகிய தானம் யாது?


     சண்டாளபூமிக்குஞ் சுடுகாட்டுக்கும் மலசல மோசன பூமிக்குஞ் சமீபத்தி னல்லாததாய், நான்கு பக்கத்துஞ் சுவரினாலேனும் வேலியினாலேனுஞ் சூழப்பட்டதாய்க், கீழே ஆழமாக வெட்டி எலும்பு முதலிய குற்றங்கள் அறப் பரிசோதிக்கப்பட்டதாய்ப், பசு நிரை கட்டப்பெற்றுக் கோசலகோமயத்தினாலே சுத்தியடைந்ததாய் உள்ள நிலமேயாம்.


283. இப்படிப்பட்ட நிலத்திலே வைக்கற்பாலனவாகிய மரஞ்செடி கொடிகள் எவை?


     மரங்கள்: வில்வம், பாதிரி, கோங்கு, பன்னீர், கொன்றை, புலிநகக் கொன்றை, பொன்னாவிரை, மந்தாரை, சண்பகம், குரா, குருந்து, மகிழ், புன்னை, சுரபுன்னை, வெட்சி, கடம்பு, ஆத்தி, செருந்தி, பவளமல்லிகை, வன்னி, பலாசு, மாவிலிங்கை, நுணா, விளா, முக்கிளுவை, நெல்லி, நாவல், இலந்தை, பலா, எலுமிச்சை, நாரத்தை, தமரத்தை, குளஞ்சி, மாதுளை, வாழை, செவ்விளநீர், சூரியகேளியிளநீர், சந்திரகேளியிளநீர் என்பவைகளாம். மரங்களில் உண்டாகும் பூ, கோட்டுப்பூ எனப்படும்.


     செடிகள்: அலரி, நந்தியாவர்த்தம், குடமல்லிகை, வெள்ளெருக்கு, செம்பரத்தை, கொக்கிறகு, மந்தாரை, துளசி, நொச்சி, செங்கீரை, பட்டி, நாயுருவி, கருவூமத்தை, பொன்னூமத்தை, கத்தரி, தகரை, செவ்வந்தி, தும்பை, வெட்டிவேர், இலாமச்சை, தருப்பை, மருக்கொழுந்து, சிவகரந்தை, விஷ்ணுகாந்தி, மாசிப்பச்சை, திருநீற்றுப்பச்சை, பொற்றலைக்கையாந்த கரை, எள்ளு, பூளை, அறுகு என்பவைகளாம்.  செடிகளில் உண்டாகும் பூ, நிலப்பூ எனப்படும்.

     கொடிகள்: மல்லிகை, முல்லை, இருவாட்சி, பிச்சி, வெண்காக்கொன்றை, கருங்காக்கொன்றை, கருமுகை, தாளி, வெற்றிலை என்பவைகளாம்.  கொடிகளில் உண்டாகும் பூ, கொடிப்பூ எனப்படும்.

284. நீர்ப்பூக்கள் எவை?

     செந்தாமரை, வெண்டாமரை, செங்கழுநீர், நீலோற்பவம், செவ்வாம்பல், வெள்ளாம்பல் என்பவைகளாம்.


285. திருநந்தனவனத்தை எப்படிப் பாதுகாத்தல் வேண்டும்?

     புலையர், புறச்சமயிகள், தூரஸ்திரீகள், முதலாயினோர் உள்ளே புகாமலும், யாவராயினும் எச்சில் மூக்குநீர் மலசல முதலியவைகளால் அசுசிப்படுத்தாமலும், அங்குள்ள பத்திர புஷ்பங்களைக் கடவுட் பூசை முதலியவற்றிற் கன்றிப் பிறவற்றிற்கு உபயோகப்படுத்தாமலும், மோவாமலும், அங்குள்ள மரஞ் செடி கொடிகளிலே சலந் தெறிக்கும்படி வஸ்திரந் தோயாமலும், அவைகளிலே வஸ்திரத்தைப் போடாமலும் பாதுகாத்தல் வேண்டும்.

பத்திர புஷ்பமெடுத்தல்

286. கடவுட் பூசைக்குப் பத்திர புஷ்பங்கள் எடுக்க யோக்கியர் யாவர்?

     நான்கு வருணத் துட்பட்டவராய்ச், சிவதீக்ஷை பெற்றவராய், நியமாசாரமுடையவராய் உள்ளவர்.

287. பத்திர புஷ்பம் எடுக்க யோக்கியர் ஆகாதவர் யாவர்?

     தாழ்ந்த சாதியார், அதீக்ஷிதர், ஆசெளச முடையவர், நித்திய கருமம் விடுத்தவர், ஸ்நானஞ் செய்யாதவர், தூர்த்தர் முதலானவர்.

288. கடவுட் பூசைக்கு ஆகாத பூக்கள் எவை?

     எடுத்துவைத்தலர்ந்த பூவும், தானே விழுந்து கிடந்த பூவும், பழம் பூவும், உதிர்ந்த பூவும், அரும்பும், இரவில் எடுத்த பூவும், கைச் சீலை, எருக்கிலை, ஆமணக்கிலை என்பவற்றிற் கொண்டு வந்த பூவும், காற்றினடிப்பட்ட பூவும், புழுக்கடி, எச்சம், சிலந்தி நூல், மயிர் என்பவற்றோடு கூடிய பூவும், மோந்த பூவுமாம். திருக்கோயிலுள்ளும் அதன் சமீபத்தினும் உண்டாகிய பத்திர புஷ்பங்கள் ஆன்மார்த்த பூஜைக்கு ஆகாவாம்.

289. இன்ன இன்ன தேவருக்கு இன்ன இன்ன பத்திர புஷ்பம் ஆகா என்னும் நியமம் உண்டோ?
     ஆம்.  விநாயகருக்குத் துளசியும், சிவபெருமானுக்குத் தாழம்பூவும், உமாதேவியாருக்கு அறுகும் நெல்லியும், வைரவருக்கு நந்தியாவர்த்தமும், சூரியனுக்கு வில்வமும், விஷ்ணுவுக்கு அக்ஷதையும், பிரம்மாவுக்குத் தும்பையும் ஆகாவாம்.

290. வில்வம் எடுக்கலாகாத காலங்கள் எவை?

     திங்கட்கிழமை, சதுர்த்தி, அட்டமி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, மாசப் பிறப்பு என்பவைகளாம்.  இவையல்லாத மற்றைக் காலங்களிலே வில்வம் எடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.


291. துளசி எடுக்கலாகாத காலங்கள் எவை?

     ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை, திருவோண நக்ஷத்திரம், சத்தமி, அட்டமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, விதிபாதயோகம், மாசப்பிறப்பு, பிராதக்காலம், சாயங்காலம், இராத்திரி என்பவைகளாம்.  இவை யல்லாத மற்றைக் காலங்களிலே துளசி எடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.  இரண்டிலை கீழே உள்ள துளசிக்கதிர் எப்போதும் எடுக்கலாம்.

292. இன்ன இன்ன பத்திர புஷ்பம் இவ்வளவு இவ்வளவு காலத்துக்கு வைத்துச் சாத்தலாம் என்னும் நியமம் உண்டோ?

     ஆம்.  வில்வம் ஆறு மாசத்திற்கும், வெண்டுளசி ஒரு வருஷத்திற்கும், தாமரைப்பூ ஏழு நாளிற்கும், அலரிப்பூ மூன்று நாளிற்கும் வைத்துச் சாத்தலாம்.

293. பத்திர புஷ்பம் எப்படி எடுத்தல் வேண்டும்?

     சூரியோதயத்துக்கு முன்னே ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துச், சந்தியா வந்தனம் முடித்து, இரண்டு கைகளையுங் கழுவித், திருப்பூங் கூடையை எடுத்து, ஒரு தண்டு நுனியிலே மாட்டி, உயரப் பிடித்துக் கொண்டாயினும், அரைக்கு மேலே கையிலே பிடித்துக் கொண்டாயினும் திருநந்தனவனத்திற் போய்ச் சிவபெருமானை மறவாத சிந்தையோடு பத்திர புஷ்பமெடுத்து, அவைகளைப் பத்திரத்தினாலே மூடிக் கொண்டு, திரும்பி வந்து, கால்களைக் கழுவிக்கொண்டு, உள்ளே புகுந்து, திருப்பூங் கூடையைத் தூக்கிவிடல் வேண்டும்.

294. பத்திர புஷ்பம் எடுக்கும்போது செய்யத் தகாத குற்றங்கள் எவை?

பேசுதல், சிரித்தல், சிவபெருமானுடைய திருவடிகளிலே யன்றிப் பிறவற்றிலே சிந்தை வைத்தல், கொம்புகள் கிளைகளை முறித்தல், கைகளை அரையின் கீழே தொங்கவிடுதல், கைகளினாலே உடம்பையேனும் வஸ்திரத்தையேனும் தீண்டுதல் என்பவைகளாம்.

திருமாலை கட்டுதல்

295. திருமாலை எப்படிக் கட்டல் வேண்டும்?

     திருமாலைக் குறட்டைச் சலத்தினால் அலம்பி இடம் பண்ணித் திருப்பூங் கூடையிலுள்ள பத்திர புஷ்பங்களை எடுத்து அதில் வைத்துக்கொண்டு, மெளனியாய் இருந்து, சாவதானமாக ஆராய்ந்து, பழுதுள்ளவைகளை அகற்றிவிட்டு, இண்டை, தொடை, கண்ணி, பந்து, தண்டு முதலிய பல வகைப்பட்ட திருமாலைகளைக் கட்டல் வேண்டும்.

சுகந்த தூபமிடுதல்

296. சுகந்த தூபம் எப்படி இடுதல் வேண்டும்?

     வாசனைத் திரவியங்கள் கலந்து இடிக்கப்பட்ட சாம்பிராணி கொண்டு சுகந்த தூபமிடல் வேண்டும்.

திருவிளக்கேற்றல்

297. திருவிளக்குக்கு என்ன நெய் கொள்ளத் தக்கது?
     
     திருவிளக்குக் கபிலைநெய் உத்தமத்தின் உத்தமம்; மற்றைப் பசுநெய் உத்தமத்தின் மத்திமம்; ஆட்டு நெய், எருமை நெய் உத்தமத்தின் அதமம்; வெள்ளெள்ளினெய் மத்திமத்தின் உத்தமம்; மரக்கொட்டைகளினெய் அதமத்தின் அதமம். (கபிலை = கபில நிறமுடைய பசு; கபில நிறம் = சருமை சேர்ந்த பொன்னிறம்).

298. திருவிளக்குத் திரி என்ன நூல் கொண்டு எப்படிப் பண்ணல் வேண்டும்?

     தாமரை நூல், வெள்ளெருக்கு நூல், பருத்தி நூல் என்பவைகளுள் இருபத் தோரிழையாலேனும் பதினாறிழையாலேனும், பதினான்கிழையாலேனும் ஏழிழையாலேனுங் கர்ப்பூரப் பொடி கூட்டித் திரி பண்ணல் வேண்டும்.

299. மாவிளக்கு எப்படி இடுதல் வேண்டும்?

     பகலிலே போசனஞ் செய்யாது, சனிப் பிரதோஷத்திலுஞ் சிவராத்திரியிலுஞ் செஞ்சம்பாவரிசி மாவினாலே அகல் பண்ணிக் கபிலநெய் மூன்று நாழியே னும் ஒன்றரை நாழியேனும் முக்கானாழியேனும் வார்த்துக் கைப் பெருவிரற் பருமையுடைய வெண்டாமரை நூற்றிரியிட்டுத் திருவிளக் கேற்றல் வேண்டும்.

தோத்திரம் பாடல்

300. எந்தத் தோத்திரங்களை எப்படிப் பாடல் வேண்டும்?

     தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்னும் அருட்பாக்களை மனங் கசிந்துருகக், கண்ணீர் வார, உரோமஞ் சிலிர்ப்பப், பண்ணோடு பாடல் வேண்டும்.

ஆனந்தக் கூத்தாடல்

301. ஆனந்தக் கூத்து எப்படி ஆடல் வேண்டும்?

     உலகத்தார் நகைக்கினும் அதனைப் பாராது, நெஞ்சம் நெக்குருகக் கண்ணீர் பொழிய, மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கைகளைக் கொட்டித் தோத்திரங்களைப் பாடிக் கால்களைச் சதிபெற வைத்து, ஆனந்தக் கூத்தாடல் வேண்டும்.


பூசைத் திரவியங்கள்

302. திருமஞ்சனத்திலே போடற்பாலனவாகிய திரவியங்கள் எவை?

     பாதிரிப்பூ, தாமரைப்பூ முதலிய சுகந்த புஷ்பங்களும் செங்கழுநீர்க்கோஷ்டம், ஏலம், இலாமச்சம்வேர், வெட்டிவேர், இலவங்கப் பட்டை, சந்தனம், கர்ப்பூரம் என்னும் பரிமளத் திரவியங்களுமாம்.

303. பாத்தியத் திரவியங்கள் எவை?

     வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்குமாம். (பாத்தியம் = பாதபூசை)

304. ஆசமநீயத் திரவியங்கள் எவை?

     சாதிக்காய், கிராம்பு, ஏலம், பூலாங்கிழங்கு, சண்பகப்பூ மொட்டு, பச்சைக்கர்ப்பூரம் என்னும் ஆறுமாம்.


305. அருக்கியத் திரவியங்கள் எவை?

     (அருக்கியம் - மந்திரநீர் இறைத்தல்)  சலம், பால், தருப்பைநுனி, அக்ஷதை, எள், யவம், (கோதுமை) சம்பாநெல், வெண்கடுகு என்னும் எட்டுமாம்.

306. அபிஷேகத் திரவியங்கள் எவை?
     
     எண்ணெய்க்காப்பு, மாக்காப்பு, நெல்லிக்காப்பு, மஞ்சட்காப்பு, பஞ்சகவ்வி யம், ரசபஞ்சாமிர்தம், பலபஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, தமரத்தம் பழச்சாறு, குளஞ்சிப் பழச்சாறு, மாதுளம் பழச்சாறு, இளநீர், சந்தனக்குழம்பு என்பவைகளாம்.  தாமிரப் பாத்திரத்தில் விட்ட பாலும் வெண்கல பாத்திரத்தில் விட்ட இளநீருங் கள்ளுக்குச் சமம். இளநீர் முகிழைத் திறந்து, தனித்தனி அபிஷேகம் பண்ணல் வேண்டும். நெய்யபிஷேகஞ் செய்தவுடன், இள வெந்நீரபிஷேகஞ் செய்தல் வேண்டும். இளநீரபிஷேகத்துப் பின் எண்பத்தொரு பதமந்திரம் உச்சரித்துச் சகச்சிரதாரை கொண்டு சுத்தோதகத்தால் அபிஷேகஞ் செய்தல் வேண்டும்.  சந்தனக் குழம்புக்குப்பின் விதிப்படி தாபிக்கப்பட்ட நவகலசத்தினாலும் விசேஷார்க்கியத்தினாலும் அபிஷேகஞ் செய்தல் வேண்டும். (சகச்சிரம் - ஆயிரம், சந்தோதகம் - நன்னீர்)

307. அபிஷேகத்தின் பொருட்டு எண்ணெய் எப்படி ஆட்டல் வேண்டும்?

     எள்ளை, வண்டு முதலிய பழுதறப் பதினாறு தரம் பார்த்து ஆராய்ந்து, உவர் முதலிய தீய சலங்களை விடாது நல்ல சலத்தைப் புதிய பாண்டத்தில் விட்டு, எள்ளைக் கருந்தோல் போமளவுங் காலினால் மிதியாது கையினாற் பிசைந்து கழுவி, காகம், கோழி, நாய், பன்றி முதலியன வாயிடல் மிதித்தல் செய்யாவண்ணம் உலர்த்தி, கல்லினாலேனும் புளியமரத்தினாலேனுஞ் செய்த, நாய் முதலியன வாயிடாத கைச்செக்கினால் ஆட்டல் வேண்டும்.  சந்தனாதிதைலம் முதலிய சுகந்தத்தைலஞ் செய்து அபிஷேகம் பண்ணுவித்தல் உத்தமோத்தமம்.  தம் வியாதி நீக்கத்தின் பொருட்டுச் சந்தனாதி முதலிய செய்வித்தவர் முதற்கட் சிறிது பாகஞ் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் பண்ணுவிக்கக் கடவர்.

308. பஞ்சகவ்வியமென்பது என்னை?

     விதிப்படி கூட்டி அமைக்கப்பட்ட பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்பவைகளினது தொகுதியாம்; இது பிரமகூர்ச்சம் எனவும் பெயர் பெறும்.  பால் ஐந்து பலமும், தயிர் மூன்று பலமும், நெய் இரண்டு பலமும், கோசலம் ஒரு பலமும், கோமயங் கைப்பெருவிரலிற் பாதியுங் கொள்க.

309. ரசபஞ்சாமிர்தமென்பது என்னை?

     விதிப்படி கூட்டி அமைக்கப்பட்ட பால், தயிர், தேன், சர்க்கரை என்பவைகளினது தொகுதியாம்.

310. பலபஞ்சாமிர்தமென்பது என்னை?

     முற்கூறிய ரசபஞ்சாமிர்தத்தோடு கூட்டி அமைக்கப்பட்ட வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் என்பவைகளினது தொகுதியாம்.

311. கவ்வியத்துக்கு உரிய பசுக்கள் எவை?

     வியாதிப் பசு, கிழப் பசு, கன்று செத்த பசு, கன்று போட்டுப் பத்து நாட் சூதகமுடைய பசு, கிடாரிக் கன்றாகிய பசு, சினைப் பசு, மலட்டுப் பசு, மலத்தைத் தின்னும் பசு, என்னும் எண்வகைப் பசுக்களல்லாத மற்றைப் பசுக்களாம். பால் கறக்குமிடத்துப் பாத்திரத்தையும் கைகளையுங் கன்றூட்டிய முலையையுஞ் சலத்தினாற் கழுவிக் கொண்டே கறத்தல் வேண்டும்.  கறந்தபின் பாலைப் பரிவட்டத்தினால் வடித்துக் கொள்ளல் வேண்டும்.

312. சந்தனக் குழம்போடு சேரற்பாலனவாகிய திரவியங்கள் எவை?

     குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக்கர்ப்பூரம், புழுகு, சவ்வாது, கஸ்தூரி என்பவைகளாம்.

313. நைவேத்தியங்கள் எவை?

     சுத்தான்னம், சித்திரான்ன வகைகள், நெய், காய்ச்சிய பால், தயிர், முப்பழம், தேங்காய்க்கீறு, சர்க்கரை, கறியமுதுகள், அபூப வகைகள்,பானகம், பானீயம், வெற்றிலை, பாக்கு, முகவாசம் என்பவைகளாம். 
(அபூபம் = பணிகாரம்)

314. சித்திரான்ன வகைகள் எவை?

     பருப்புப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகோதனம், புளியோதனம், ததியோதனம், கருகோதனம், எள்ளோதனம், உழுந்தோதனம், பாயசம் என்பவைகளாம்.

315. பணிகார வகைகள் எவை?

     மோதகம், பிட்டு, அப்பம், வடை, தேன்குழல், அதிரசம், தோசை, இட்டலி என்பவைகளாம்.

316. பானீயம் என்பது என்னை?

     ஏலம், சந்தனம், பச்சைக்கர்ப்பூரம், பாதிரிப்பூ, செங்கழுநீர்ப்பூ என்பவைகள் இடம்பெற்ற சலம்.

317. முகவாசம் என்பது என்னை?

     ஏலம், இலவங்கம், பச்சைக்கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்பவற்றின் பொடியைப் பனி நீரோடு கூட்டிச் செய்த குளிகை.

318. மேலே சொல்லப்பட்டவைகளன்றிச் சிவாலயப் பணிகள் இன்னும் உள்ளனவா?

     உள்ளன.  அவை, திருவீதியில் உள்ள புல்லைச் செதுக்குதல், திருக்கோபுரத்திலுந் திருமதில்களிலும் உண்டாகும் ஆல், அரசு முதலியவற்றை வேரொடு களைதல், திருக்கோயிலையுந் திருக்குளத்தையுந் திருவீதியையும் எச்சில், மலசலம் முதலியவைகளினால் அசுசியடையா வண்ணம் பாதுகாத்தல், திருக்கோயிலினுள்ளே புகத்தகாத இழிந்த சாதியாரும், புறச் சமயிகளும், ஆசாரம் இல்லாதவரும், வாயிலே வெற்றிலை பாக்கு உடையவரும், சட்டையிட்டுக் கொண்டவரும், போர்த்துக் கொண்டவரும், தலையில் வேட்டி கட்டிக்கொண்டவரும் உட்புகா வண்ணந் தடுத்தல், திருவிழாக் காலத்திலே திருவீதியெங்குந் திருவலகிட்டுச் சலந் தெளித்தல், வாகனந் தாங்கல், சாமரம் வீசுதல், குடை கொடி ஆலவட்டம் பிடித்தல் முதலியவைகளாம்.

நன்றி : சைவநெறி, இதை எனக்கு அனுப்பியவர் : கே. திருஞானசம்பந்தன்
திருச்சிற்றம்பலம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக