வெள்ளி, 29 ஜூன், 2012

கோனைப் புகழ்வீர்!

21.                     வானப் பெருங்கொண்டல் மால்அயன் வானவர்
                          ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனை,
                          கானக் களிறு கதறப் பிளந்த எம் 
                          கோனைப் புகழுமின், கூடலும் ஆமே.
     
     வானத்தில் உள்ள மேகம் போன்ற கரிய திருமால், பிரமன், தேவர் முதலியவரின் இழிந்த பிறவியை நீக்குபவன். அவன் ஒப்பற்றவன். ஆணவமான காட்டு யானை கதறும்படி பிளந்தவன். இத்தகைய எம் சிவபெருமானைப் போற்றிப் புகழுங்கள். அவனை அடைந்து உய்வு பெறலாம்.

     விளக்கம் : சீவகோடிகளின் ஆணவமான படலத்தைக் கிழித்தலைக் 'கானக் களிற்றைக் கதறப் பிளத்தல்' என்றார். பிரணவத்தில் இருள் நிலை கெட்டு ஒளி நிலையைப் பெறுதலே கானக்களிறு கதறப் பிளத்தல். ஊனம் - குற்றம். கூடல் - புணர்தல்; ஒன்றிநிற்றல்.


இறைவன் யாருக்கு உதவுவான்!

22.                     மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
                          நினைத்தது அறிவனென்னில்தான் நினைக்கிலர்
                          எனக்கு இறை அன்புஇலன் என்பர்; இறைவன்
                          பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.

     தியானப் பொருளாக மனத்தில் தோன்றும் மாய நாடனான சிவபெருமான், சீவர் நினைத்ததை அறிவான் என்ற போதும் இவர்தாம் நினையாமல் இருக்கின்றனர். இறைவனுக்கு என்னிடம் அருள் இல்லை எனச் சொல்லுவர். இறைவன் தன கருணைக்கு இலக்காகாமல் தப்ப நிற்பவர்க்கும் கருணை வழங்கி நிற்கின்றான். அவன் கருணைதான் என்னே!
     
     விளக்கம் : மாய நன்னாடன் - மாயையில் தோன்றிய உடம்புக்கு உரியவன். இறைவன் பிழைக்க - இறைவன் கருணைக்குத் தப்ப. பேணி நின்றான் - தான் முன் வந்து நின்றான்.

அவனால் வாழ்வு!

23.                     வல்லவன் வன்னிக்கு இறைஇடை வாரணம் 
                          நில்என நிற்பித்த நீதியுள் ஈசனை 
                          இல் என வேண்டா; இறையவர் தம்முதல் 
                          அல்லும் பகலும் அருளுகின் றானே

     இறைவன் எல்லாம் வல்ல ஆற்றல் உடையவன். கடலின் நடுவே அக்கினிக் கடவுளை நிலைக்கச் செய்த நீதியை உடையவன். இத்தகைய இறைவனை இல்லை எனச் சொல்ல வேண்டா. படைத்தல் முதலியவற்றைச் செய்கின்ற கடவுளர்க்கும் தலைவனாய் இரவும் பகலும் உயிர்களுக்கு அருள் செய்கின்றான்.

     விளக்கம் : வன்னி - தீக்கடவுள். இடை வாரணம் - வாரணம் இடை. வாரணம் - கடல். வாரணமிடை நிற்கச் செய்தலாவது கடலில் நிற்கச் செய்ததும், சடராக்கினியைக் குடலில் நடுவில் இருக்கச் செய்தது. மாவடவா முக்காக்கினி கடல் நடுவே இருந்து கொண்டு கடலை எல்லை மீறாமல் வைத்துள்ளது. சடராக்கினி தேகத்தில் இருந்து கொண்டு தேகத்தை அழியாமல் காக்கின்றது. இது இறைவனின் அருட்செயல்.

சிவன் அடிக்கே செல்வம்.

24.                     போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனிதன்அடி                           
                          தேற்றுமின் என்றும்; சிவன் அடிக்கே செல்வம்                           
                          ஆற்றியது என்று, மயல் உற்ற சிந்தையை                           
                          மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.
     
     குற்றம் அற்றவனான சிவனின் திருவடியை இடைவிடாமல் தாரகமாகக் கொண்டு தெளியுங்கள். அப்பெருமான் அடிக்கே நம் செல்வம் அனைத்தும் உரியனவாகும் எனக் கருதிப் புறப்பொருளில் மயங்கியுள்ள மனத்தை மாற்றி நிற்பவரிடத்தில் சிவன் நிலையாய் விளங்குவான்.

     விளக்கம் : புனிதன் - குற்றமற்ற தூய்மையானவன். தேற்றுமின் - தெளியுங்கள். ஆற்றியது என்று - உரியதாகும் என்று கருதி. சிந்தையை மாற்றுதலாவது - புறப பொருளில் மயங்கிக் கிடக்கும் உள்ளத்தை மாற்றுதல். தன்னுடைய அல்ல என எண்ணுதல். செல்வமாவன: இன்பம், ஐசுவரியம், கல்வி, சீர், மனத்திறன், பாக்கியம், சீர்மை, செல்வம் எல்லாம் சிவனுக்குரியன என எண்ணுபவர் மனத்தில் அவன் விளங்குவான்.

அஞ்ஞானம் நீங்கும்!

25.                     பிறப்புஇலி, பிஞ்ஞகன் பேரரு ளாளன்
                          இறப்புஇலி, யாவர்க்கும் இன்பம் அருளும்
                          துறப்புஇலி தன்னைத் தொழுமின்; தொழுதால்
                          மறப்புஇலி, மாயா விருத்தமும் ஆமே.

     
     அவன் பிறவி அற்றவன்; எல்லாவற்றையும் ஒடுக்குபவன்; மிக்க அருள் உடையவன்; அழிவு இல்லாதவன்; எல்லாருக்கும் இடைவிடாத இன்பத்தை அருளுபவன். இத்தகு இறைவனை வணங்குங்கள். அவனடி மறவாதவராய் வணங்கினால் உங்கள் அஞ்ஞானம் நீங்கும்; ஞானப் பேற்றையும் எய்தலாம்.

      விளக்கம் : பிஞ்ஞகன் - சடைமுடி உடையவன்; ஒடுக்கம் செய்வன். சடையில் கங்கையை உடையவன். ஆதலால் மக்கள் யாவரையும் ஒடுக்குதலைக் குறிப்பாய் உணர்த்தினார். துறப்பிலி - இடையீடு இல்லாதவன். தொழுமின் - வணங்குங்கள். விருத்தம் - இடையூறு. சிவபெருமானை வணங்கினால் அஞ்ஞானம் அகலும்.

கமலத்தில் வீற்றிருப்பவன்!

26.                     தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால் 
                          படர்ந்து நின் றான்பரி பாரகம் முற்றும்
                          கடந்து நின்றான், கமலம் மலர் மேலே 
                          உடந்திருந் தான் அடிப்புண்ணியம் ஆமே.

     ஆன்மாக்களுள் தொடர்ந்து நின்றவனான சிவபெருமானை எப்போதும் வணங்குங்கள். அங்ஙனம் வணங்கினால் எங்கும் பரவியுள்ளவனும் உலகம் முழுவதையும் கடந்தவனும் ஆகிய சகசிரதள ஆயிரம் இதழ்த் தாமரை மீது உரையில் இருந்தவனும் ஆன சிவனது திருவடிப் பேறு கிட்டும்.

     விளக்கம் : படர்ந்து நின்றான் - எல்லாவற்றிலும் பரவி நிற்பவன். பரி - மிகுதி. உடந்திருந்தான் - உடனாய் இருந்தவன்; உடன் நின்றவன். பாரகம் - உலகம். அடிப்புண்ணியமாம் - திருவடிப்பேறு கிட்டும்.

உள்ளமே கோயில்! 

27.                     "சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்து 
                          அந்தம்இல் ஈசன் அருள் நமக்கே" என்று
                          நந்தியை நாளும் வணங்கப் படும் அவர்
                          புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே.

     சேர்க்கையின் இடம் என்று சொல்லப்படும் சுவாதிட்டான மலரின் கீழ் ஒளி பொருந்திய முகத்தை உடைய இறுதி என்பது இல்லாத இறைவனின் அருள் நமக்கே உரியது என்று அப்பெருமானை வணங்குபவரின் அறிவுக்குள் புகுந்து பெயராமல் நின்றான்.

     விளக்கம் : சந்தி - சேர்க்கை. தாமரை -சுவாதிட்டான கமலமலர். நந்தி - சிவபெருமான். புந்தி - புத்தி; அறிவு; உள்ளம். வழிபடுபவரின் உள்ளத்தில் அவன் விளங்குவான்.

வழித்துனையாவான்!

28.                     இணங்கிநின் றான், எங்குமாகிநின் றானும்,
                          பிணங்கிநின் றான், பின்முன் ஆகிநின்றானும்,
                          உணங்கி நின் றான், அமரா பதி நாதன்;
                          வணங்கிநின் றார்க்கே வழித்துணை ஆமே.

     எல்லா இடங்களிலும் நீக்கமில்லாமல் நின்றவன் சிவன். ஆன்மாக்களுடன் பொருந்தி விளங்குகின்றான். எக்காலத்தும் இருப்பவனான அவன் மாறுபட்ட தன்மையில் உள்ளான். தேவர் உலகத்தை ஆளும் அப்பெருமான் தனக்கு என ஒரு செயல் இன்றி உள்ளான். அவன் தன்னை வழிபடுபவர்க்கு வழித்துணையாய் விளங்குகின்றான்.

      விளக்கம் : பிணங்கி - மாறுபட்டு; மாறுபட்டு நிற்றலாவது பழம் பொருளுக்குப் பழம் பொருளாயும் புதுமைப் பொருளுக்குப் புதுமைப் பொருளாயும் நிற்றல். வணங்கி நிற்றல் - தனக்கெனச் செயல் இன்றி நிற்றல். ஆன்மாக்களுக்கு அவன் வழிகாட்டி ஆவான்.

அடியேற்கு உறவு ஆர்உளர்?

29.                     காண நில்லாய், அடியேற்கு உறவு ஆர்உளர்?
                          நாண கில்லேன் உனை நான் தழுவிக் கொளக்;
                          கோண நில்லாத குணத்து அடியார் மனத்து 
                          ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

     எம் பெருமானே! யான் காணும்படி வெளிப்பட்டருளுவாய்! எனக்கு உன்னையன்றி உறவு யார் உள்ளார்? நீ வெளிப்படின் யான் அகம் தழுவுவது போல் புறம் தழுவுவதிலும் நாணம கொள்ள மாட்டேன். மனமாறுபாடு சிறிதும் இல்லாத அருள் பண்புடைய மனத்தில் ஆணிவேர் போன்று எழுந்தருளியிருப்பவனே!

     விளக்கம் : நானகில்லேன் - வெட்கப்பட்டுப் பின் நில்லேன். கோண நில்லாத குணத்தடியார் - மனக்கோட்டம் இல்லாத அருட்பண்பு மிக்க நற்குணம் கொண்ட அடியார். ஆணியன் ஆகி - ஆணிவேர் போன்று ஆழப்பதிந்தவனாகி.

இறைவனை ஞானம் பெறுதற்பொருட்டு அழைக்கின்றேன். 

30.                     'வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும் 
                          தான் நின்று அழைக்கும்கொல்' என்று தயங்குவார்;
                          ஆன்நின்று அழைக்கும் அதுபோல், என நந்தியை 
                          நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே.

     வானத்தினின்று தானே பெய்யும் மழை போன்று இறைவனும் தானே வழிய வந்து அருளைப் பொழியும் எனச் சிலர் தயக்கம் கொள்வர். ஆன்கன்று தன் தாய்ப்பசுவை அழைப்பதைப் போன்று என பெருமானை இன்று அழைக்கின்றேன். இது ஞானம் கருதியே யாகும்.

விளக்கம் : வான்நின்று அழைக்கும் மழை - வானத்தினின்று தானே பெய்யும் மழை. இறைவனும் தான் நின்று அழைக்கும் கொல் - இறைவனும் தானே வந்து அருளுவானோ. ஆன்நின்று அழைக்கும் - பசுவின் கன்று தாயை அழைக்கும். ஞானம் கருதி - ஞானத்தைப் பெறுதற் பொருட்டு; திருவடிப் பேற்றை அடையும் பொருட்டு. 


                      


                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக