ஞாயிறு, 24 ஜூன், 2012

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்

     ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தை அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அவசியம் அடையலாம். லலித என்பதற்கு மென்மையான என்று பொருள். லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலப மானவள் அல்லது சுலபமாக அடையக் கூடியவள் என்றும் அறியலாம். ஸ்ரீ ஐச்வர்யத்தின் அறிகுறி. ஆகவே ஸ்ரீ லலிதா என்றழைக்கப்படும் அத்தெய்வம் மென்மை யானவள் என்பதுடன் ஸகல ஐச்வர்யத்தின் நிலையான இருப்பிடமாகவே எப்போதும் விளங்குகிறாள்.      
     
     நாம் விருப்பி அடைய தங்கு தடையின்றி சுலபமாக நமக்கு இசைபவளும், நம் குற்றம் குறைகளை மன்னித்து நன்மை வழங்குபவளும் எந்நிலையிலும் நம்மைக் காப்பாற்றக் காத்திருப்பவளும், தன் செல்வங்கள் அனைத்தையும் தர எப்போதும் தயாராயிருப்பவளும், நமக்கென்றே வாழ்பவளும் தாயன்றி வேறெவருமில்லை, ஈரேழுலகத்திலும்.
     
     ஸ்ரீ லலிதா அகில உலகங்களுக்கும் தாய் என்றாலும் நாம் எளிதில் அவளை அடைய அநுகூலமாயிருக்கிறாள். அப்பேற்பட்ட நம் அன்னையைத் தூய மனத்துடன் வழிபட்டாலே நம் கஷ்டங்களெல்லாம் தீரும். அதற்குச் சிறந்த, சுலபமான வழி ''ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்'' செய்வதாகும்.
     
     தீர்க்க ஸௌமாங்கல்யம், ஆரோக்கியம், ஸகல ரோக, ஜ்வர நிவ்ருத்தி, பேய், பிசாசு, பில்லி, சூனியம் முதலிய உபாதைகளிளிருந்து விடுதலை, விஷ தோஷங்களிலிருந்து நிவாரணம், சுபமான திருமணம், அன்யோன்ய தாம்பத்ய வாழ்க்கை, ஸத்ஸந்தானம், தன, தான்ய, ராஜ்ய வச்யம் மேலும் இது போன்ற பலப்பல காரிய ஸித்திகள் ''ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணத்தால்'' கைகூடி வருவது அநுபவ பூர்வமான உண்மையாகும்.
     
     ''ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்'' பாராயணம் செய்ய காலை ஸ்நானம் நித்ய கர்மாக்களைச் செய்து பின் ஸ்ரீ சக்ர பூஜையும் மூல மந்த்ர நாம ஜபங்களும் பின் ''ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணமும்'' செய்தால் விசேஷ பலன்களைத் தரும். இதை எந்நாளும் காலை, மாலை பாராயணம், ஜபம் செய்யலாம். தக்க குரு மூலம் உபதேசம் பெற்றுச் செய்ய வேண்டும். நேரிடை குரு கிடைக்காவிடில் 'ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை' ஸாக்ஷாத்காரமான குருவென பாவித்து பிழையின்றி பாராயணம் செயய வேண்டுமென்பது சான்றோர் கருத்து.
     
     இதன் ஒவ்வொரு நாமாக்களும் அதிசயமான அரிய பல அநுகூல பலன்களை தர வல்ல தாரக மந்த்ரங்களாகும். எனினும் முழுமையாக ''ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்'' செய்ய சௌகரியமில்லாதவர்கள் அவரவர்க்குகந்த நாமாவைத் தேர்ந்தெடுத்து குறைந்தது 108 முறையாவது தினசரி ஜபம் செய்வது நினைத்த காரியம் கைகூட உதவும். எனவே ஆஸ்தீக அன்பர்களின் நலனையும், சௌகரியத்தையும் உத்தேசித்துச் சில நாமாக்கள் அவற்றின் பொருள், பலன்களுடன் இங்கு தரப்பட்டுள்ளது. இவற்றில் அவரவர்கள் கோரும் பலன்களுக்கேற்ற நாமாக்களை முறைப்படி ஜபம் செய்து எல்லா நன்மைகளையும் பெற 'அன்னை ஸ்ரீ ஆதிபராசக்தி ஸ்ரீ லலிதாம்பிகை'யை வேண்டிக் கொள்கிறோம்.

16 வகைப் பலன்களுக்குரிய நாமாக்கள்
(தாத்பர்ய, நைவேத்ய விதிகளுடன்)

1.  பலன்              :   தன் விருப்பத்திற்கேற்ற கணவனை அடைய
     நாமா              :   ஓம் ஸ்வாதீன வல்லபாயை நம:
     தாத்பர்யம்     :   ஓம் தன் வயப்பட்ட அன்புமிக்க நாயகனையுடையவளுக்கு
                                 நமஸ்காரம்.
     நைவேத்யம்  :   தேன் கலந்த பால்

2.  பலன்              :   மூவகை ஸித்திகளைப் பெற (இச்சா, க்ரியா, ஞான)
     நாமா              :   ஓம் மஹாஸக்த்யை நம:
     தாத்பர்யம்     :   ஓம் பெரும் உற்சவமெனக் கொண்டாடும் வழிபாட்டிற்        
                                 கிசைபவளுக்கு நமஸ்காரம்.
     நைவேத்யம்  :   சர்க்கரை பொங்கல், நெய் கலந்த பலவித பட்சணங்கள்,  
                                 பழங்கள், முதலியன.

3.  பலன்              :   தெய்வீக அன்புடன் ஸகல ஸௌபாக்கியங்களும் பெற
     நாமா              :   ஓம் பக்த ஸௌபாக்ய தாயின்யை நம:
     தாத்பர்யம்     :   பக்தர்களுக்கு ஸௌபாக்கியத்தை வழங்கும் தேவிக்கு        
                                 நமஸ்காரம்.
     நைவேத்யம்  :   தேங்காய், திராட்சை, கல்கண்டு.

4.  பலன்              :   செல்வம் பெற 
     நாமா              :   ஓம் ஸ்ரீ கர்யை நம:
     தாத்பர்யம்     :   ஓம் செல்வத்தை தருபவளுக்கு நமஸ்காரம்.
     நைவேத்யம்  :   குங்குமப்பூ, சர்க்கரை கலந்த பால்.

5.  பலன்              :   விருப்பத்திற்கேற்ற பொருள் கிடைக்க 
     நாமா              :   ஓம் புருஷார்த்தப்ரதாயை நம:
     தாத்பர்யம்     :   ஓம் நான்குவித நலன்களை அருள்பவளுக்கு நமஸ்காரம்.
                                 (அறம், பொருள், வீடு, இன்பம் ஆகிய நான்கு வித  
                                 புருஷார்த்தங்களை அளிப்பவள், இச்சைகளைப் பூர்த்தி
                                 செய்பவள்).                                 
     நைவேத்யம்  :   வெல்லம், தேங்காய், தேன், பருப்பு

6.  பலன்              :   ஏற்ற காரியம் தடங்கலில்லாமல் நிறைவேற 
     நாமா              :   ஓம் விக்ந நாசின்யை நம:
     தாத்பர்யம்     :   ஓம் இடையூறுகளை நீக்குபவளுக்கு நமஸ்காரம்.
     நைவேத்யம்  :   வாழைப்பழம், தாம்பூலம்.

7.  பலன்              :   வியாதிகள் விலகவும், வராமல் தடுக்கவும்
     நாமா              :   ஓம் ஸர்வ வ்யாதிப்ரசமந்யை நம:
     தாத்பர்யம்     :   ஓம் எல்லா நோய்களையும் அடக்குபவளுக்கு நமஸ்காரம்         
     நைவேத்யம்  :   இளநீர், பழம், பால்.

8.  பலன்              :   கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாக
     நாமா              :   ஓம் தயாமூர்த்யை நம:
     தாத்பர்யம்     :   ஓம் தயை வடிவானவளுக்கு நமஸ்காரம்.
     நைவேத்யம்  :   திராட்சை, முந்திரி, கல்கண்டு.

9.  பலன்              :   நிலம், வீடு, மனை வாங்க, கட்ட, அவற்றில் உள்ள
                                 தோஷங்கள் விலகி, வீட்டில் சுகமும் ஆரோக்கியமும்
                                 நிலவ
     நாமா              :   ஓம் ஸாம்ராஜ்ய தாயின்யை நம:
     தாத்பர்யம்     :   ஓம் ஸாம்ராஜ்யத்தை அளிப்பவளுக்கு நமஸ்காரம்.
     நைவேத்யம்  :   தேங்காய், சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட
                                 பதார்த்தம், தாம்பூலம்.

10. பலன்              :   விருப்பங்கள் நிறைவேற (குறிப்பாக சிறந்த பேச்சாளராக,   
                                  ஜோதிடராக, வர்த்தகத்தில் வெற்றிபெற)    
      நாமா              :   ஓம் ஸர்வ லோக வசங்கர்யை நம:
      தாத்பர்யம்     :   ஓம் உலகமனைத்தையும் தன்னுள் வசப்படுத்தி 
                                  ஆள்பவளுக்கு நமஸ்காரம். ( இந்நாமாவைச் சொல்லி        
                                  குங்கும அர்ச்சனை செய்து நெற்றியில் திலகமிட்டுக்
                                  கொள்ளுதல் சிறந்த பலனைத் தரும்.      
      நைவேத்யம்  :   சர்க்கரை பொங்கல், நெய் கலந்த ஹரவிஸ்ஸு (வடிக்கப்
                                  படாத சாதம்).

11. பலன்              :   குடும்பத்தில், நண்பர்கள், சுற்றத்தாரிடத்தில் சச்சரவுகள்,   
                                  வழக்குகள் இல்லாமல் சுமுகமாக இருக்க.    
      நாமா              :   ஓம் ஸாமரஸ்ய பராயணாயை நம:
      தாத்பர்யம்     :   ஓம் ஸமரஸத்தை நிலையாகக் கொண்டவளுக்கு
                                  நமஸ்காரம்.      
      நைவேத்யம்  :   சித்திரான்னம்,தேன் கலந்த பசும்பால்.

12. பலன்              :   சிரமங்கள் இல்லாமல் சுக பிரசவம் உண்டாக, வாயுத்
                                  தொல்லைகள் நீங்க, மனோவியாதிகள் விலக.   
      நாமா              :   ஓம் ப்ராண தாத்ர்யை நம:
      தாத்பர்யம்     :   ஓம் ப்ராண சக்தியை அளிப்பவளுக்கு நமஸ்காரம்.      
      நைவேத்யம்  :   பஞ்சாமிர்தம்.

13. பலன்              :   அறுவகைச் செல்வங்கள் பெருக (நல்ல மனம், செல்வம்,
                                  செல்வாக்கு, தோஷமில்லாவீடு, குணவதியான மனைவி
                                  ஸத்ஸந்தானம்)   
      நாமா              :   ஓம் தன தான்ய விவர்த்தின்யை நம:
      தாத்பர்யம்     :   ஓம் செல்வத்தையும் தான்யத்தையும் பெருக்குபவளுக்கு
                                  நமஸ்காரம்.      
      நைவேத்யம்  :   ஆறுவகை பட்சணங்கள் (அறுசுவை அடங்கியவை)

14. பலன்              :   சுவாசம் சம்பந்தமான ரோகங்கள் குணமடைய,   
                                  ஸங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற, நல்ல வாக்ஸித்திபெற   
      நாமா              :   ஓம் நாதரூபிண்யை நம:
      தாத்பர்யம்     :   ஓம் நாத வடிவானவளுக்கு நமஸ்காரம்.      
      நைவேத்யம்  :   தேன் கலந்த பால், கருணைக்கிழங்கினால் செய்யப்பட்ட
                                  இனிப்புப் பதார்த்தம்.

15. பலன்              :   தூய்மையான மனப்பக்குவம் பெற    
      நாமா              :   ஓம் சுத்த மானஸாயை நம:
      தாத்பர்யம்     :   ஓம் தூய மனமுள்ளவளுக்கு நமஸ்காரம்.      
      நைவேத்யம்  :   இளநீர், தேங்காய்.

16. பலன்              :   தம்பதிகளிடையே உயர்வு தாழ்வில்லாத அந்யோந்ய
                                  உறவு நிலவ, நாடித் தோஷங்கள் விலக.   
      நாமா              :   ஓம் சிவ சிக்த்யைக்ய ரூபிண்யை நம:
      தாத்பர்யம்     :   ஓம் சிவனும் சக்தியும் ஒன்றெனக் காட்சி தருபவளுக்கு
                                  நமஸ்காரம்.      
      நைவேத்யம்  :   இனிப்பு பதார்த்தங்கள், பழங்கள், தாம்பூலம்.


சகல ஐச்வர்யங்களுடன் சந்திப்போம்.
திருச்சிற்றம்பலம்.






1 கருத்து: