திங்கள், 11 ஜூன், 2012

ஜோதிடம் - அறிமுகம் 3

     சூரிய சித்தாந்தம், பிதாமஹர் எனும் நான்முகன் சித்தாந்தம், வியாசர் சித்தாந்தம், வசிஷ்ட சித்தாந்தம், அத்ரி சித்தாந்தம், பராசர சித்தாந்தம், காசியப சித்தாந்தம், நாரத சித்தாந்தம், கர்க சித்தாந்தம், மரீசி சித்தாந்தம், மனு சித்தாந்தம், ஆங்கிரஸ சித்தாந்தம், லோமஸ சித்தாந்தம், பௌலச சித்தாந்தம், ச்யவன சித்தாந்தம், யவன சித்தாந்தம், மரு சித்தாந்தம் மற்றும் சௌனக சித்தாந்தம் ஆகும். இதில் சூரிய சித்தாந்தம், தற்பொழுது வழக்கில் அதிகமாகக் காணப்படுகின்றது.


     ஜோதிட சாத்திரத்தின் வரலாற்றை, வராக மிகிரருக்கு முற்பட்ட காலம், பிற்பட்ட காலமென இருவகையாகப் பிரிக்கலாம்.

     கி.பி. 587இல் இறந்த வராகமிகிரர் ஜோதிடம் மற்றும் வானநூல் சாஸ்த்திரத்தில் தலைசிறந்தவராகக் கொண்டாடப்படுகிறார். இவருடைய "பஞ்சசித்தாந்திகா" எனும் நூலில் காணப்படுவன பைதாமக சித்தாந்தம், ரோமக சித்தாந்தம்,பைசிஸ சித்தாந்தம், சூர்ய சித்தாந்தம், மற்றும் வசிஷ்ட சித்தாந்தம் ஆகும். இவைகளுள் மிகத் துல்லியமாகக் கணக்கிடப் பயன்படுவது சூர்ய சித்தாந்தம் ஆகும். கி.பி.169இல் 'யவனேஸ்வரர்' என்பவரால் இயற்றப்பட்ட ''யவன ஜாதகம்'' எனும் நூலே ஜோதிடவியலில் மிகப்பழமையானதாகக் கருதப்படுகிறது. 'ஸ்பூர்ஜித்துவஜன்' என்பவரால் கி.பி. 268இல் நான்காயிரம் சுலோகங்கள் கொண்ட 'யவன ஜாதகம்' என்ற பெயருடைய நூல் இயற்றப்பட்டது.

வராகமிகிரர் :
     
     இவர் கி.பி. 587 வரை வாழ்ந்திருந்தார் என தெரிய வருகிறது. இந்திய ஜோதிடவியலிலும், வானவியளிலும் இவர் தம் கருத்துக்களே பெரும்பாலும் பின்பற்றப்பட்டன.

இவர் தம் படைப்புக்கள் :
     
     இவரால் இயற்றப்பட்ட நூல்கள் 1. பஞ்சசித்தாந்திகா, 2. பிருஹத் சம்ஹிதை, 3.  பிருஹத் ஜாதகம் அல்லது பிருஹத் ஹோரா சாத்திரம், 4. லகு ஜாதகம், 6. பிருஹத் விவாஹ படலம் ஆகும். ஜோதிடவியலைப் பொறுத்த மட்டிலும் இவர் கிரேக்கர்களின் நூல்களைத் தழுவியுள்ளார் என்பது சிலர் கருத்து.

வராகமிகிரருக்குப் பிற்பட்ட காலம் :
     
     வராகமிகிரருடைய மைந்தராகிய 'பிருதுயசன்' என்பவர் ஹோரா 'ஷட் பஞ்சாசிகா' எனும் நூலை இயற்றியுள்ளார். கி. பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'பட்டோத்பலர்' என்பவர் வராகமிகிரரின் நூலுக்கும், பிருதுயசரின் நூலுக்கும் விளக்கவுரை எழுதியுள்ளார். போஜராஜனால், 'வித்வத்ஜன வல்லபம்' எனும் நூல் இயற்றப்பட்டுள்ளது. மிகச் சிறந்த கணித மேதையாகிய "பாஸ்கராச்சாரியார்' கி.பி.1172இல் 'லீலாவதி', 'பீஜ கணிதம்', கிரஹ கணிதம்' மற்றும் 'கோள கணிதம்' எனும் நாற்பெரும் பிரிவுகளைக் கொண்ட '' சித்தாந்த சிரோமணி '' எனும் நூலை இயற்றியுள்ளார். இவர் கி. பி. 1188இல் 'கரண குதூகலம்' எனும் நூலையும் இயற்றியுள்ளார். பட்டோத்பலருக்கு முற்பட்டவர் சாராவளியை இயற்றிய கல்யாணவர்மா ஆவார்.

     கி. பி. 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கணிதம் மற்றும் வானவியலைக் காட்டிலும் ஜோதிடத்தில் பல நூல்கள் தோன்றலாயின. இக்காலத்தில்தான்  சாமுத்ரிகாலக்ஷணம், கைரேகை, பிரஸ்னம் எனும் தனித் தனி பிரிவுகள் தோன்றி வளர்ந்தன. பலன்களை நிர்ணயிப்பதில் பலதீபிகை, ஜாதகாதேசம், ஜாதக சந்திரிகை, பிருஹத் பாராசரீயம் முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.

     தமிழ் மொழியில் சங்க காலம் தொட்டே சகுனம் மற்றும் ஜோதிட சாத்தி ரத்தில் பழக்கம் இருந்ததை அறியலாம். பிற்காலத்தில் ஜோதிடவியலின் வளர்ச்சிக்குத் தமிழில் தோன்றிய பல நூல்களும் உறுதுனையாயிருந்தது என்பது நாம் காணும் உண்மையாகும்.
     
     இன்று இருபதாம் நூற்றாண்டில் ஜோதிடவியலின்கண் காணப்படும் அறிவியல் செய்திகள் மருத்துவத்திற்கும் பெரிதும் பயன்பட்டு வருவது கண்கூடு. கேரளாவில் நோய்களுக்கு மணி, மந்திர, ஔஷதம் எனும் மூன்றாலும் சிகிச்சை அளிப்பதைக் காண்கிறோம். எனவே அறிவியலில் ஜோதிடவியலும் இடம் பெறுவதே நியாயமாகும்.


நாளை பார்க்கலாம்.
திருச்சிற்றம்பலம்.       


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக