ஞாயிறு, 10 ஜூன், 2012

ஜோதிடம் - அறிமுகம் 2

     வேதகாலத்தையடுத்து வந்த இதிகாச காலத்தில் சோதிட சாத்திரத்தின் வளர்ச்சியைக் காண முடிகிறது. இக்காலத்தில் நிமித்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எடுத்துக் காட் டாக, ராமாயணத்தில் ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு மலர்ந்தபொழுது, அனுமன் தீமூட்டி அத்தீயை அவர்கள் நட்புக்குச் சாட்சியாக்கினான். அப்பொழுது வாலிக்கும் இராவணனுக்கும், சீதைக்கும் இடது கண் துடித்ததாகக் கூறப்பட் டுள்ளது. ஆண்களுக்கு வலது கண்ணும், பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் நன்மை பயக்கும். மாறாக ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெடுதல் உண்டாகும் என்பது நிமித்த நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்தாகும். எனவே இராமனுக்கும் சுக்ரீவனுக்கும் மலர்ந்த நட்பால் இராவணனுக்கும், வாலிக்கும், அழிவு நேரப்போவதையும், சீதைக்கு நன்மையுன்டாகப் போவதையும் இதனால் வால்மீகி அறிவித்துள்ளார்.
    
     அதேபோல் கனவுகளின் பலன்களும் அக்காலத்தில் அறியப்பட்டிருந்தது. சுந்தரகாண்டத்தில் சீதை அரக்கியர்களால் துன்புறுத்தப்பட்ட பொழுது அவ்வரக்கியர்களுள் ஒருத்தியான திரிசடை என்பவள், தான் கண்ட கனவினைக் கூறி அதனால் சீதைக்கு வரப்போகும் நன்மைகளையும், இராவணனுக்கும் மற்றும் அவன் கூட்டத்தாருக்கும் வரப்போகும் தீமைகளையும் எடுத்து ரைக்கிறாள். இதன் மூலம் கனவுகளின் மூலம் வரப்போகும் நிகழ்ச்சி நன்மை பயக்குமா இல்லையா என முன் கூட்டியே அறியும் பழக்கம் அக்காலத்தில் இருந்ததை அறியலாம்.

     இராமபிரான் பிறந்தபொழுது ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தனவாகக் கூறப்படுகிறது. இராமபிரான் பிறந்தநாள் (நட்சத்திரம்) புனர்பூசம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடக லக்கினத்தில் தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளமையால் இதிகாச காலங்களில் கோள்களின் உச்சம், நீசம், நட்சத்திரங்கள் எனப்படும் நாள்கள், அந்நாள்களுக்குடைய தேவதைகள், இலக்கினம் முதலிய வீடுகளைப் பற்றிய தெளிவான அறிவாற்றல் இருந்ததெனக் கூறமுடியும்.

     எச்செயல்களையும் தொடங்குவதற்கான நாள், நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்கவும் அறிந்திருந்தனர். அனுமன் இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டு திரும்பிய பின், இராவணன் மீது போர் தொடுக்க இராமன் எண்ணினான். அப்பொழுது இராமன் தனது சேனைத் தலைவர்களிடம் " இன்று உத்ரபல்குனி " நட்சத்திரம். இது எனக்கு நன்மை தரும் ஆறாவது நட்சத்திரமாகும். இன்று போருக்குக் கிளம்பினால் வெற்றி நிச்சயம் என்று கூறுகின்றான். இதன் மூலம் இதிகாச காலங்களில் தான் பிறந்த நாள் முதல், அன்றைய நாள் வரை எண்ணிப் பலன்களை முடிவெடுக்கும் '' தாராபாலன் '' எனும் நட்சத்திரப் பலன்களையும் நன்கு அறிந்திருந்தனர் என்பது கண்கூடு.


     இவ்வாறு வேதகாலத்தில் துவங்கிய 'வேதாங்க சோதிடம்' இதிகாச புராண காலங்களில் நன்கு வளர்ச்சி பெற்றுப் பின் இலக்கிய காலத்தில் முழு வளர்ச்சியையும் அடைந்தது.

     காசியப சம்ஹிதையின்படி சோதிடவியலின் முதல் நூலாசிரியர்களாகப் பதினெட்டுப் பேர்கள் போற்றப்படுகின்றனர்.


     சூர்ய :               பிதாமஹ :                    வ்யாஸ :                வசிஷ்ட :


     அத்ரி :              பராசர :                          கஸ்யப :                 நாரத :


     கர்க :                மரீசி :                             மனு :                      அங்கிர :


     லோமஸ :      பௌலச :                       ச்யவன :                 யவன :


     மரு :                சௌனக :


     எனும் பதினெட்டுப் பேர்கள் போற்றப்படுகின்றனர். இவர்கள் பெயரால் பதினெட்டுச் சித்தாந்தங்கள் காணப்படுகின்றன.


பதினெட்டுச் சித்தாந்தங்கள் பற்றி நாளை பார்க்கலாம்.
திருச்சிற்றம்பலம்.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக