புதன், 27 ஜூன், 2012

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 14

கணபதி துணை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்.


14. மாகேசுர பூசையியல்


366. மாகேசுர பூசையாவது யாது?

     ஆசாரியர், நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் நால்வகை மாகேசுரர்களையும் விதிப்படி பூசித்துத்திருவமுது செய்வித்தலாம் (மாகேசுரர் = மகேசுரனை வழிபடுவோர்)

367. மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய உயர்வு தாழ்வு களினால் வேறுபடுமா?

    ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமுஞ், சமய தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.  வைதிகப் பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், விசேஷ தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.  வைதிகப் பிராமணர் லக்ஷம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், நிருவாண தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.  வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.
368. மாகேசுர பூசைக்குப் பாகஞ் செய்பவர்கள் எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும்?

     சம சாதியார்களாய்ச், சிவதீக்ஷை பெற்றவர்களாய், நித்தியகருமந் தவறாது முடிப்பவர்களாய், சுசியுடையர்களாய், மாகேசுர பூசைக்கு உபயோகப்படும வைகளை மாகேசுர பூசை நிறைவேறுமுன் புசிக்க நினைத்தலுஞ் செய்யாத வர்களாய் இருத்தல் வேண்டும். இவ்வியல்பில்லாதவர்களாலே சமைக்கப் பட்டவை தேவப்பிரீதியாகா, இராக்ஷதப் பிரீதியாகும்.

369. மாகேசுர பூசைக்கு விலக்கப்பட்ட பதார்த்தங்கள் யாவை?

     உள்ளி, வெள்ளுள்ளி, உருண்டைச் சுரைக்காய், கொம்மடிக்காய், செம்முருங்கைக்காய், தேற்றாங்காய், அத்திக்காய், வெண்கத்தரிக்காய், பசளை, வள்ளி, கொவ்வை என்பவைகளாம்.

370. மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும்?

     மாகேசுரர்களைத் தூரத்தே கண்டவுடனே, சிரசின் மீது அஞ்சலி செய்து, விரைந்தெதிர் கொண்டு அழைத்து வந்து, அவர்களுடைய திருவடிகளைத் தீர்த்தத்தினால் விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, அவர்களைப் பந்தியாக இருத்தி, ஓதுவார்கள் தேவாரம் பண்ணுடன் ஓத, அன்னங்கறி முதலியவற்றைப் படைத்து, பத்திரபுஷ்பங்களால் அருச்சனை செய்து, தூப தீபங் கொடுத்து, அவர்களெதிரே பூக்களைத் தூவி, நமஸ்காரம் பண்ணி, எழுந்து நின்று, ஆசிர்வாதம் முற்றிய பின் திருவமுது செய்வித்தல் வேண்டும்.  அவர்கள் திருவமுது செய்து கரசுத்தி செய்து கொண்டபின், அவர்களெதிரே இயன்ற தக்ஷிணை வைத்து நமஸ்காரஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, மீட்டும் நமஸ்காரஞ் செய்து, சேஷம் புசித்தல் வேண்டும்.

371. மாகேசுர பூசைப் பந்திக்கு யோக்கியரல்லாதவர் யாவர்?

     சிவநிந்தகர், குருநித்தகர், சங்கமநிந்தகர், சிவசாத்திரநிந்தகர், சிவத்திர வியாபகாரிகள், அதீக்ஷிதர், நித்தியகருமம் விடுத்தவர் முதலாயினர்.

372. மாகேசுர பூசையிலே மாகேசுரரை யாராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும்?

     மாகேசுர பூசை எந்தத் தேவரைக் குறித்துச் செய்யப் படுகின்றதோ, அந்தத் தேவராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும்.

373. பூசை செய்யப்படும்போது மாகேசுரர்கள் யாது செய்தல் வேண்டும்?

     பூசிப்பவன் எத்தேவரைக் குறித்துப் பூசிக்கின்றானோ அத்தேவரைத் தாம் இடையறாது மெய்யன்போடு தியானித்துக் கொண்டிருந்து அப்பூசையை அவருக்கு ஒப்பித்தல் வேண்டும்.

374. பந்தி வஞ்சனை செய்து புசித்தவரும், படைத்தவரும் படைப்பித்தவரும் யாது பெறுவர்?

     கண்டமாலையால் வருந்துவர்; ஊர்ப் பன்றிகளாய்ப் பிறந்து மலத்தைத் தின்பர்; நரகங்களில் விழுந்து நெடுங்காலம் வருந்துவர். ஆதலினால், வஞ்சனை ஒரு சிறிதும் இன்றி எல்லாருக்குஞ் சமமாகவே படைத்தல், படைப்பித்தல் வேண்டும். பந்தி வஞ்சனை செய்து படைக்கப்பட்டவைகள் பிசாசுகளுக்கும் இராக்ஷதர்களுக்கும் அசுரர்களுக்குமே பிரீதியாகும்; தேவப் பிரீதியாகா.

375. மாகேசுர பூசா காலத்திலே மாகேசுரரல்லாதவரின், யாது செய்தல் வேண்டும்?

     குருடர், முடவர், குழந்தைகள், வயோதிகர், வியாதியாளர், வறியவர் என்பவர்கள் வரின், அவர்களை விலக்காது, இன்சொற்களினாலே மிக மகிழ்வித்து, அவர்களுக்கும் அன்னங் கொடுத்தல் வேண்டும்.  வறியவருக்குக் கொடுத்தலே கொடை; செல்வருக்குக் கொடுத்தல் திரும்ப வாங்குதற் பொருட்டுக் கடன் கொடுத்தல் போலும்.

376. மாகேசுர பூசை ஆவசியமாக எவ்வெக் காலங்களிலே செய்தல் வேண்டும்?

     தீக்ஷை பெற்றுக்கொண்ட பொழுதும், சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்ட பொழுதும், விரதம் அநுட்டிக்கும் பொழுதும், உபவாசஞ் செய்து பாரணம் பண்ணும் பொழுதும், சிவசாத்திர சிவபுராணங்கள் படிக்கத் தொடங்கிய பொழுதும், படித்து முடித்த பொழுதும், புண்ணிய ஸ்தல யாத்திரைக்குப் புறப்படும் பொழுதும் புண்ணியஸ்தலத்தை அடைந்த பொழுதும், யாத்திரை செய்து திரும்பி வீடு சேர்ந்த பொழுதும், திருக்கோயிலிலே பிரதிட்டை, சம்புரோக்ஷணம், மகோற்சவம் முதலியவை நடக்கும் பொழுதும், வியாதியினாலே பீடிக்கப்பட்டு மருந்து உட்கொள்ளத் தொடங்கும் பொழுதும், வியாதி நீங்கிய பொழுதும், மாகேசுர பூசை ஆவசியமாகச் செய்தல் வேண்டும்.  (பாரணம் - உபவாசத்துக்குப்பின் செய்யும் போசனம்)

377. அவ்விசேஷ தினங்களின் மாகேசுர பூசை செய்பவர்களும், மாகேசுர பூசையிலே அருச்சனையேற்று அமுது செய்யப்புகும் மாகேசுரர்களும் அத்தினத்திலே எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும்?

     மாகேசுர பூசைக்கு முன்னே யாதொன்றும் புசிக்கலாகாது.  அன்றிரவிலே பசித்ததாயின், அன்னம் புசியாது பால், பழம் முதலியவற்றுள் இயன்றது உட்கொண்டு சுத்தர்களாகிச் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டு நித்திரை செய்தல் வேண்டும்.  முதனாளி ராத்திரியும் அப்படியே செய்தல் வேண்டும்.

378. முன் செய்த பாவங்களினால் வந்த மகாரோகங்களினாலே பீடிக்கப் படுவோர் மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும்?

     ஒரு மண்டலமாயினும், பாதி மண்டலமாயினும், விதிப்படி சிரத்தையோடு புண்ணிய ஸ்தலத்திலே புண்ணிய தீர்த்தத்திலே ஸ்நானஞ் செய்து, சிவலிங்கப் பெருமானுக்கு விசேஷ பூசை செய்வித்து, மாகேசுர பூசை பண்ணிச் சேஷம் புசித்துக் கொண்டு வரல் வேண்டும்.  அதன் பின்னரே மருந்து உட்கொள்ளல் வேண்டும்.



அனைவரும் தவறாமல் பிரதோஷ வழிபாடு செய்தால் குடும்பத்திற்கு எல்லா நன்மையும் உண்டாகும். 
நன்றி : சைவநெறி,  இதை எனக்கு அனுப்பியவர் :  கே. திருஞானசம்பந்தன்,  திருச்சிற்றம்பலம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக