வியாழன், 28 ஜூன், 2012

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 10


கணபதி துணை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
இரண்டாம் புத்தகம்


10. நித்தியகருமவியல்

230. நாடோறும் நியமமாக எந்த நேரத்திலே நித்திரை விட்டெழுதல் வேண்டும்?

     சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை விட்டெழுவது உத்தமம்; மூன்றேமுக்கால் நாழிகைக்கு முன் எழுவது மத்திமம்; உதயத்தில் எழுவது அதமம்.

சிவத்தியானாதி

231. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

     சலம் வாயிற்கொண்டு இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணி, வடக்கு முகமாகவேனும் கிழக்கு முகமாக வேனும் இருந்து, விபூதி தரித்துக் கொண்டு, குரு உபதேசித்த பிரகாரஞ் சிவபெருமானைத் தியானித்துச் சிவமூலமந்திரத்தை இயன்ற மட்டுஞ் செபித்து, அருட்பாக்களினாலே உச்ச விசையோடு தோத்திரஞ் செய்தல் வேண்டும்.

232. சிவத்தியான முதலியவை செய்த பின் செய்யத் தக்கவை யாவை?

     அவசியகருமம், செளசம், தந்ததாவனம், ஸ்நானம், சந்தியாவந்தனம், சிவபூசை, சிவாலய தரிசனம், சிவசாத்திர பாராயணம், தேவார திருவாசக பாராயணம், மத்தியான சந்தியாவந்தனம், போசனம், சிவசாத்திர படனம், சாயங்கால சந்தியாவந்தனம், சிவாலய தரிசனம், சிவபுராண சிரவணம், சயனம் என்பவைகளாம்.

அவசிய கருமம்

233. மலசலமோசனஞ் செய்யத் தக்க இடம் யாது?

     திருக்கோயிலெல்லைக்கு நானூறு முழ தூரத்தின தாய் ஈசானதிக்கொழிந்த திக்கினிடத்ததாய் உள்ள தனியிடமாம்.

234. மலசலமோசனஞ் செய்யத் தகாத இடங்கள் எவை?

     வழி, குழி, நீர்நிலை, நீர்க்கரை, கோமயம் உள்ள இடம், சாம்பர் உள்ள இடம், சுடுகாடு, பூந்தோட்டம், மரநிழல், உழுத நிலம், அறுகம்புல்லுள்ள பூமி, பசுமந்தை நிற்கும் இடம், இடி வீழிடம், காற்றுச் சுழலிடம், புற்று, அருவி பாயும் இடம், மலை என்பவைகளாம்.

235. மலசலமோசனம் எப்படிச் செய்தல் வேண்டும்?

     மெளனம் பொருந்திப், பூணூலை வலக்காதிலே சேர்த்துத் தலையையும், காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றிப், பகலிலும் இரண்டு சந்தியா காலங்களிலும் வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும், நாசி நுனியைப் பார்த்துக் கொண்டிருந்து, மலசல மோசித்தல் வேண்டும். சந்தியாகாலம் இரண்டாவன; இராக்காலத்தின் இறுதிமுகூர்த்தமும், பகற்காலத்தின் இறுதி முகூர்த்தமுமாம். (முகூர்த்தம் - இரண்டு நாழிகை)

செளசம்

236. மலசல மோசனஞ் செய்யின் எப்படிச் செளசஞ் செய்தல் வேண்டும்?

     எழுந்து புண்ணிய தீர்த்த மல்லாத சலக்கரையை அடைந்து, சலத்துக்கு ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு, மூன்று விரலால் அள்ளிய மண்ணுஞ்சலமுங் கொண்டு இடக்கையினாலே குறியை ஒருதரமும், குதத்தை ஐந்து தரத்துக்கு மேலும், இடக்கையை இடையிடையே ஒவ்வொரு தரமும், பின்னும் இடக்கையைப் பத்து தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து; கால்களை முழங்கால் வரையுங் கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரமுங் கழுவிச் சுத்தி செய்து, செளசஞ் செய்த இடத்தைச் சலத்தினால் அலம்பிவிட்டு, அவ்விடத் தினின்று நீங்கி, வேறொரு துறையிலே போய், வாயையும் கண்களையும் நாசியையுங் காதுகளையுங் கைகால்களிலுள்ள நகங்களையுஞ் சுத்தி செய்து, எட்டுத்தரஞ் சலம் வாயிற் கொண்டு, இடப்புறத்திலே கொப்பளித்துத், தலைக்கட்டு இல்லாமற் பூணூலை முன்போலத் தரித்துக், குடுமியை முடித்து, மந்திரங்கள் உச்சரியாது ஒரு தரமும் மந்திரங்கள் உச்சரித்து ஒரு தரமுமாக இரண்டு தரம் ஆசமனம் பண்ணல் வேண்டும். (ஆசமனம் - உறிஞ்சுதல்)

237. சலமோசனஞ் செய்யின் எப்படி செளசஞ் செய்தல் வேண்டும்?

     மண்ணுஞ் சலமுங்கொண்டு, குறியை ஒரு தரமும், இடக்கையை ஐந்து தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து மூன்று தரமும், இரண்டு கால்களையும் ஒவ்வொரு தரமுஞ் சுத்தி செய்து, நான்கு தரங் கொப்பளித்து, ஆசமனம் பண்ணல் வேண்டும்.

238. செளசத்துக்குச் சமீபத்திலே சலம் இல்லையாயின் யாது செய்தல் வேண்டும்?

     பாத்திரத்திலே சலம் மொண்டு ஓரிடத்தில் வைத்துக் கொண்டு, மலசல மோசித்துச் செளசஞ் செய்துவிட்டுப், பாத்திரத்தைச் சுத்தி செய்து, சலம் மொண்டு, வாய் கொப்பளித்துக், கால் கழுவி, ஆசமனம் பண்ணல் வேண்டும். சல பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு சலமல விசர்க்கஞ் செய்யலாகாது. (விசர்க்கம் = கழித்தல்)

239. ஆசமனம் எப்படிச் செய்தல் வேண்டும்?

     கிழக்கையேனும் வடக்கையேனும் நோக்கிக், குக்குடாசனமாக இருந்து, இரண்டு முழங்கால்களுக்கும் இடையே கைகளை வைத்துக்கொண்டு, வலக்கையை விரித்துப் பெருவிரலடியிற் சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.

240. குக்குடாசனமாவது யாது?

இரண்டு பாதங்களையும் கீழே வைத்துக் குந்திக் கொண்டிருத்தல்.

241. தடாக முதலியவற்றில் எப்படி ஆசமனஞ் செய்தல் வேண்டும்?

     முழங்காலளவினதாகிய சலத்திலே நின்று, இடக் கையினாலே சலத்தைத் தொட்டுக்கொண்டு, வலக்கையினாலே ஆசமனம் பண்ணல் வேண்டும். முழங்காலளவினதாகிய சலத்திற் குறைந்தால் கரையை அலம்பி, அதிலிருந்து கொண்டு ஆசமனம் பண்ணல் வேண்டும்.

தந்ததாவனம்

242. தந்த சுத்திக்குக் கருவியாவன யாவை?

விதிக்கப்பட்ட மரங்களின் கொம்பும் இலையுந் தூளுமாம்.

243. இல்வாழ்வானுக்கு விதிக்கப்பட்ட மரங்கள் எவை?

     மருது, இத்தி, மா, தேக்கு, நாவல், மகிழ், ஆத்தி, கடம்பு, விளா, நாயுருவி, அசோகு, குருக்கத்தி, பூல், வேல், சம்பகம் என்பவைகளாம்.

244. துறவிக்கு விதிக்கப்பட்ட மரங்கள் எவை?

     பெருவாகை, நொச்சி, பெருங்குமிழ், புன்கு கருங்காலி, ஆயில், மருது என்பவைகளாம்.

245. தந்த காட்டம் எப்படிப்பட்டதாய் இருத்தல் வேண்டும்?

     நேரியதாய்த், தோலோடு பசப்புள்ளதாய்க், கணுவுந்துளையும் இடைமுறிதலும் இல்லாததாய், சிறுவிரற் பருமை யுடையதாய் இருத்தல் வேண்டும். இல்வாழ்வானுக்குப் பன்னிரண்டங்குல நீளமும், துறவிக்கு எட்டங்குல நீளமும், பெண்களுக்கு நாலங்குல நீளமுங் கொள்ளப்படும். (காட்டம் = குச்சி)

246. தந்த சுத்திக்குக் கருவி யாகாதன யாவை?

     பட்டமரம், பாளை, வைக்கோல், கைவிரல், செங்கல், கரி, சாம்பல், மணல் என்பவைகளாம்.

247. தந்த சுத்தி எப்படிச் செய்தல் வேண்டும்?

    விதிக்கப்பட்ட தந்த காட்டத்தையேனும், இலையையேனுஞ் சலத்தினாலே கழுவி, மெளனம் பொருந்திக், கிழக்கு நோக்கியேனுங் குக்குடாசனமாக இருந்துகொண்டு, பல்லின் புறத்தையும் உள்ளையுஞ் செவ்வையாகக் சுத்தி செய்து, ஒரு கழியை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு பிளப்பை மும்மூன்று தரம் உண்ணாவளவாக ஓட்டி, நாக்கை வழித்து, இடப்புறத்தில் எறிந்து விட்டுச் சலம் வாயிற்கொண்டு, பன்னிரண்டு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கைகால்களையுங் கழுவி ஆசமனம் பண்ணல் வேண்டும். நின்றுகொண்டாயினும் நடந்து கொண்டாயினும், போர்த்துக் கொண்டாயினும் தந்த சுத்தி பண்ணலாகாது.

ஸ்நானம்

248. ஸ்நானஞ் செய்யத் தக்க நீர்நிலைகள் யாவை?

     நதி, நதிசங்கமம், ஓடை, குளம், கேணி, மடு முதலியவைகளாம். நதிசங்கமமாவது இரண்டு யாறுகள் சந்தித்த இடமாம்; யாறுங் கடலுங் கூடிய இடம் எனினும் அமையும்.

249. ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?

     கெளபீனத்தைக் கசக்கிப், பிழிந்து, தரித்து, இரண்டு கைகளையுங் கழுவி வஸ்திரங்களைத் தோய்த்து, அலம்பித், தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.

250. ஸ்நானம் எப்படிச் செய்தல் வேண்டும்?

     ஆசனம் பண்ணிச் சகளீகரணஞ் செய்து, கொப்பூ ழளவினதாகிய சலத்தில் இறங்கி, நதியிலேயாயின் அதற்கு எதிர்முகமாக நின்றும், குள முதலியவை களிலாயிற் கிழக்கு முகமாகவேனும் வடக்குமுகமாகவேனும் நின்றும், இரண்டு காதுகளையும், இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும் இரண்டு சுட்டுவிரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக்கொண்டு சிவபெருமானைச் சிந்தித்து ஸ்நானஞ் செய்ய வேண்டும். இப்படி மூடுவது சண்முகி முத்திரை எனப் பெயர் பெறும்.

251. இப்படி ஸ்நானஞ் செய்தவுடனே யாது செய்தல் வேண்டும்?

     ஆசமனஞ் செய்துகொண்டு, கரையிலேறி, வஸ்திரங்களைப் பிழிந்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினாலே தலையிலுள்ள ஈரத்தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பிலுள்ள ஈரத்தைத் துவட்டிக், குடுமியை முடித்து, ஈரக் கெளபீனத்தைக் களைந்து, உலர்ந்த கெளபீனத்தைத் தரித்து, இரண்டு கைகளையுங் கழுவிச், சுத்தமாய்க் கிழியாதனவாய் வெள்ளியனவாய் உலர்ந்தனவாய் உள்ள இரண்டு வஸ்திரந் தரித்துக் கொண்டு, ஈர வஸ்திரங்களையுங் கெளபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடல் வேண்டும். ஒரு கொடியிலே தானே தோய்த்த வஸ்திரமுந் தோயாத வஸ்திரமும் போடுதலும், ஒருவர் வஸ்திரம் போட்ட கொடியிலே மற்றொருவர் வஸ்திரம் போடுதலும் ஆகாவாம். நக்கினனாயேனும், கெளபீன மாத்திரமுடையனாயேனும், ஒரு வஸ்திரந் தரித்துக் கொண்டேனும், யாதொரு கமருமுஞ் செய்யலாகாது.

(நக்கம் - அம்மணம்)

252. குளிர்ந்த சலத்திலே ஸ்நானஞ் செய்ய மாட்டாத பிணியாளர் யாது செய்தல் வேண்டும்?

     ஸ்நானஞ் செய்தவர் சுத்திசெய்யப்பட்ட தானத்திலே சுத்தி செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்த வெந்நீரை ஒரு பாத்திரத்தில் விடவிட, அவர் எடுத்து ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினால் ஈரத்தைத் துவட்டி, உலர்ந்த வஸ்திரந் தரித்துப், பதினொரு மந்திரத்தை ஒருதரஞ் செபித்துக் கொண்டு, சந்தியாவந்தனம் முதலியன செய்யலாம்.

253. வியாதியினாலே ஸ்நானஞ் செய்ய மாட்டாதவர் யாது செய்தல் வேண்டும்?

     கழுத்தின்கீழ், அரையின்கீழ், கால் என்னும் இவைகளுள் ஒன்றை, இயன்றபடி சலத்தினாலே கழுவிக் கொண்டு, கழுவாமல் எஞ்சிய உடம்பை ஈர வஸ்திரத்தினால் ஈரம் படும்படி துடைத்து, அவ்வீரத்தைத் துவட்டித் தோய்த் துலர்ந்த வஸ்திரந் தரித்துப் பதினொரு மந்திரத்தை ஒருதரஞ் செபித்துக் கொண்டு, சந்தியாவந்தனம் முதலியன செய்யலாம். இந்த ஸ்நானங் காபில ஸ்நானம் எனப் பெயர் பெறும்.

254. இராத்திரி ஸ்நானஞ் செய்யலாமா?

     யாகம், சந்திரகிரகணம், சிவராத்திரி, மாசப் பிறப்பு, மகப்பேறு என்பவைகளின் மாத்திரம் இராத்திரி ஸ்நானஞ் செய்யலாம்.

255. நியமகாலத்திலன்றி, இன்னும் எவ்வெப்பொழுது ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்?

     சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்.

(சர்த்தி = வாந்தி)

256. தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை?

     சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.

257. ஸ்நானஞ் சரீர சுத்திக்கு மாத்திரந்தான் காரணமா?

     சரீர சுத்திக்கு மாத்திரமின்றிச் சரீராரோக்கியத்துக்கும், சித்தசோபனத்துக்கும், ஒருப்பாட்டுக்கும், இந்திரிய வடக்கத்துக்கும், யோக்கியத்துவத்துக்குங் காரணமாம். விடியற்கால ஸ்நானத்தினாலே பசி உண்டாகும்; நோய் அணுகாது.

சந்தியாவந்தனம்

258. சந்தியாவந்தனம் எத்தனை?

     பிராதக்காலசந்தி, மத்தியானசந்தி, சாயங்காலசந்தி, அர்த்தயாமசந்தி என நான்காம்.

259. இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன சந்தியா வந்தனங்கள் உரியன என்னும் நியமம் உண்டோ?

     சமயதீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி யொன்றே உரியது; விசேஷ தீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி, சாயங்காலசந்தி என்னும் இரண்டு சந்திகள் உரியன; நிருவாண தீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி, மத்தியானசந்தி, சாயங்காலசந்தி என்னும் மூன்று சந்திகள் உரியன; ஆசாரியருக்கு நான்கு சந்திகளும் உரியன. சமய தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர்கள் மூன்று சந்திகளுஞ் செய்யலாம் என்று சில ஆகமங்களில் விதிக்கப் பட்டிருக்கின்றது.

260. பிராதக் காலசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

     நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் உத்தமம்; நக்ஷத்திரங்கள் மறைந்தபோது செய்தல் மத்திமம்; சூரியன் பாதி உதிக்கும்போது செய்தல் அதமம்.

261. மத்தியானசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

     பதினைந்தாம் நாழிகையாகிய மத்தியானத்திலே செய்தல் உத்தமம்; மத்தியானத்துக்கு முன் ஒரு நாழிகையிலே செய்தல் மத்திமம்; மத்தியானத்துக்குப் பின் ஒரு நாழிகையிலே செய்தல் அதமம்.

262. சாயங்காலசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

     சூரியன் பாதி அத்தமிக்கும்போது செய்தல் உத்தமம்; அத்தமயனமானபின் ஆகாசத்திலே நக்ஷத்திரங்கள் தோன்றுமுன் செய்தல் மத்திமம்; நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் அதமம்.

263. சந்தியாவந்தனம் முதலிய கிரியைகளுக்கு ஆகாத நீர்கள் எவை?

     நுரை குமிழி உள்ள நீர், புழு உள்ள நீர், வடித்து எடாத நீர், இழிகுலத்தார் தீண்டிய நீர், கலங்கல் நீர், பாசி நீர், உவர்நீர், வெந்நீர், பழநீர், சொறிநீர் என்பவைகளாம்.

போசனம்

264. போசனபந்திக்கு யோக்கியர் யாவர்?

     சமசாதியாராயும், சிவதீக்ஷை பெற்றவராயும், நியமாசார முடையவராயும் உள்ளவர்.

265. போசனஞ் செய்தற்குரிய தானம் யாது?

     வெளிச்சம் உடையதாய்ப், பந்திக்கு உரியரல்லாதவர் புகப் பெறாததாய்க் கோமயத்தினாலே மெழுகப் பட்டதாய் உள்ள சாலை.

266. போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?

     வாழையிலை, மாவிலை, புன்னையிலை, தாமரையிலை, இருப்பையிலை, பலாவிலை, சண்பகவிலை, வெட்பாலையிலை, பாதிரியிலை, பலாசிலை, சுரையிலை, கமுகமடல் என்பவைகளாம். வாழையிலையைத் தண்டுரியாது அதனுடைய அடி வலப் பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும். கல்லை தைக்குமிடத்துக், கலப்பின்றி ஒரு மரத்தினிலை கொண்டே ஒரு கல்லை முழுதுந் தைத்தல் வேண்டும். (கல்லை = இலைக் கலம்)

267. போசன பாத்திரங்களை எப்படி இடம் பண்ணிப் போடல் வேண்டும்?

     போசன பாத்திரங்களைச் சலத்தினாலே செவ்வையாகக் கழுவி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முழவளவை சதுரச் சிரமாகப் புள்ளியின்றி மெழுகி அததின் மேலே போடல் வேண்டும்.

268. இலை போட்டபின் யாது செய்தல் வேண்டும்?

     அதிலே நெய்யினாலே புரோக்ஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவைகளைப் படைத்தல் வேண்டும்.

269. போசனம் எப்படி பண்ணல் வேண்டும்?

     இரண்டு கால்களையும் முடக்கி, இடமுழந்தாளின் மேலே இடக்கையை ஊன்றிக் கொண்டிருந்து, விதிப்படி அன்ன முதலியவற்றைச் சுத்தி செய்து, சிவபெருமானுக்கும் அக்கினிக்குங் குருவுக்கும் நிவேதனம் பண்ணி, அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறாகப் பிரித்துப் பருப்பு நெய்யோடு பிசைந்து, சிந்தாமற் புசித்தல் வேண்டும்; அதன்பின் சிறிது பாகத்தை முன்போலப் பிரித்துப், புளிக்கறியோடாயினும் ரசத்தோடாயினும் பிசைந்து புசித்தல் வேண்டும். கறிகளை இடையிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும். இலையினுங் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனுந் தண்ணீரேனும் பானம் பண்ணல் வேண்டும். உமிழத் தக்கதை, இலையின் முற்பக்கத்தை மிதத்தி, அதன்கீழ், உமிழ்தல் வேண்டும்.

270. போசனம் பண்ணும்பொழுது செய்யத்தகாத குற்றங்கள் எவை?

     உண்பதற்கிடையிலே உப்பையும் நெய்யையும் படைத்துக் கொள்ளல், போசனத்துக்குப் உபயோகமாகாத வார்த்தை பேசுதல், சிரித்தல், நாய் பன்றி கோழி காகம் பருந்து கழுகு என்பவைகளையும், புலையர் ஈனர் அதீக்ஷதர் விரதபங்கமடைந்தவர் பூப்புடையவள் என்பவர்களையும் பார்த்தல் முதலியனவாம்.

271. புசிக்கும்போது அன்னத்திலே மயிர், ஈ, எறும்பு, கொசு முதலியன காணப்படின், யாது செய்தல் வேண்டும்?

     அவைகளை சிறிதன்னத்தோடு புறத்தே நீக்கி விட்டுக், கை கழுவிக் கொண்டு, சலத்தினாலும், விபூதியினாலும் சுத்திப்பண்ணிப் புசித்தல் வேண்டும்.

272. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

     எழுந்து, வீட்டுக்குப் புறத்தே போய்க், கை கழுவி விட்டுச், சலம் வாயிற்கொண்டு, பதினாறு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, வாயையுங் கைகளையுங் கால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணி, விபூதி தரித்தல் வேண்டும். அன்னமல்லாத பண்டங்கள் புசிக்கின், எட்டு தரங் கொப்பளித்து, ஆசமனம் பண்ணல் வேண்டும்.

273. உச்சிட்டதை எப்படி அகற்றல் வேண்டும்?

     இலையை எடுத்து எறிந்து விட்டுக் கை கழுவிக் கொண்டு உச்சிட்டத் தானத்தைக் கோமயஞ் சேர்ந்த சலந் தெளித்து, இடையிலே கையையொடாமலும், முன்பு தீண்டிய விடத்தைப் பின்பு தீண்டாமலும், புள்ளியில்லாமலும் மெழுகிப், புறத்தே போய்க் கைகழுவிவிட்டுப் பின்னும் அந்தத் தானத்திலே சலந் தெளிந்து விடல் வேண்டும்.

274. போசனஞ் செய்தபின் வாக்குச் சுத்தியின் பொருட்டு யாது செய்தல் வேண்டும்?

     இல்வாழ்வார் தாம்பூலம ஒரு தரம் மாத்திரம் புசிக்கலாம். துறவிகள் கிராம்பு, ஏலம், கடுக்காய், சுக்கு, வால்மிளகு என்பவைகளுள் இயன்ற தொன்றைப் புசித்தல் வேண்டும்.

275. இராத்திரியில் எத்தனை நாழிகையினுள்ளே புசித்தல் வேண்டும்?

     எட்டு நாழிகையினுள்ளே புசித்தல் உத்தமம். பதினொரு நாழிகையளவேல் மத்திமம்; பதினான்கு நாழிகை யளவேல் அதமம்; அதன் மேற் புசிக்கலாகாது.

276. போசன காலத்தில் விளக்கவியின் யாது செய்தல் வேண்டும்?

     போசனம் பண்ணாது, அவ்வன்னத்தை வலக்கையினாலே மூடி, விளக்கேற்றி வருமளவும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மானசமாகச் செபித்துக் கொண்டிருந்து, விளக்கேற்றியபின், பானையில் அன்னத்தை இடுவித்துக் கொள்ளாது, அவ்வன்னத்தையே புசித்துக் கொண்டு எழும்பல் வேண்டும்.

சயனம்

277. எப்படிச் சயனித்தல் வேண்டும்?

     கிழக்கேயாயினும் மேற்கேயாயினுங் தெற்கேயாயினுந் தலை வைத்துச், சிவபெருமானைச் சிந்தித்துக் கொண்டு, வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும், வடக்கே தலை வைக்கலாகாது. வைகறையிலே நித்திரை விட்டெழுந்துவிடல் வேண்டும். சந்தியா காலத்தில் நித்திரை செய்தவன் அசுத்தன்; அவன் ஒரு கருமத்துக்கும் யோக்கியனாகான்; அவன் தான் செய்த புண்ணியத்தை இழப்பன்; அவன் வீடு சுடுகாட்டுக்குச் சமம்.

278. இரவிலே காலம்பெறச் சயனித்து வைகறையில் விழித்தெழுந்து விடுதலினாற் பயன் என்ன?

     சூரியன் உதிக்க ஐந்து நாழிகை உண்டென்னுங் காலம் பிராமீமுகூர்த்தம் எனப் பெயர் பெறும்; சிவத் தியானத்துக்கு மனந்தெளிவது அக்காலத்தேயாம்; அன்றியும், அக்காலத்தில் விழிக்கின் நோய்கள் அணுகாவாம். இராநித்திரைப் பங்கமும், வைகறை நித்திரையும், பகல் நித்திரையும் பற்பல வியாதிகளுக்கும் காரணம்.

     மந்திரக் கிரியைகளோடு எழுதப்பட்ட ஸ்நான விதி, சந்தியாவந்தன விதி, பூசா விதி, போசன விதி என்னும் நான்குங் குருமுகமாகப் பெற்றுக்கொள்க.


நன்றி : சைவநெறி,  இதை எனக்கு அனுப்பியவர் :  கே. திருஞானசம்பந்தன்,  திருச்சிற்றம்பலம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக